தமிழ் | తెలుగు

» ஆன்மீகச் சுற்றுபயணம் » தெட்சணத்தில் ஆன்மீகப் பிரச்சாரம்

தெட்சணத்தில் ஆன்மீகப் பிரச்சாரம்

அன்பார்ந்த மனுஜோதி வாசகர்களுக்கு வணக்கம். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருக்கருணையினால் கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழ் நாடு முழுவதும் ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். மனுஜோதி ஆசிரமத்திலிருந்து, திரு. னு. லியோ பால் ஊ. லாறி அவர்களோடு கூட ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களை சந்திக்கும் வண்ணமாகவும், அத்துடன் “நம்பினால் நம்புங்கள்” என்ற கைப்பிரதியை விநியோகிக்கவும் 9 பேர் கொண்ட குழுவாக வேனில் புறப்பட்டோம்.

ஸ்ரீமந் நாராயணாரின் தெய்வீக ஆட்சி நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவும், ஆன்மீக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், இறைவன் படைத்த அனைத்து சிருஷ்டிகளுக்கும் ஸ்ரீமந் நாராயணரின் போதனைகளை அறிவிக்கவும், உலக அறிவை விடுத்து தெய்வீக ஞானத்தைப் பெறுவதற்கும், அவரின் இருப்பிடமாகிய மனுஜோதி ஆசிரமத்திலிருந்து இந்த பயணத்தை மேற்கொண்டோம். இதன்மூலம் தெய்வீக மக்களின் மனதில் இருள் நீங்கி, தெய்வீக ஒளி பெற்றிட இந்த தமிழக சுற்றுப் பயணம் அமைந்தது.

முதலாவதாக 8-ம் தேதி, புத்தகங்கள் மற்றும் கைப்பிரதிகள் விநியோகித்த வண்ணம் தென்காசி, குற்றாலம் வழியாக பயணத்தைத் தொடங்கினோம். அன்று மதியம் கோவில்பட்டி அருகிலுள்ள ஏழாயிரம் பண்ணைக்கு சென்றோம். இரவு வத்தலக்குண்டு என்ற இடத்தில் தங்கினோம். மறுநாள் மதியம் கருர் என்ற ஊரிலிருக்கிற மனுஜோதி வாசகர்களை சந்தித்துவிட்டு, இரவு சேலம் மாவட்டத்தில் உள்ள செந்தாரப்பட்டியை அடைந்தோம்.

மூன்றாவது நாளாக பழங்குடியினர் வசிக்கும் பச்சமலையை நோக்கிப் பயணத்தை தொடங்கினோம். மாலை நேரம் பச்சமலை கிராமத்திலுள்ள நண்பர்களை கலந்து இரவு மனுஜோதி ஆசிரம விளக்கப்படம் மற்றும்பக்தி சினிமா காண்பிப்பதைக் குறித்து பேசி முடிந்தது. இரவு அந்த கிராமத்தில் மனுஜோதி ஆசிரமத்தைக் குறித்த விளக்கப் படம் மற்றும் “கர்ணன்” என்ற பக்திப் படத்தையும் காண்பித்தோம். மீண்டும் எங்கள் பிரயாணம் தொடர்ந்தது. ஆங்காங்கே கைப்பிரதிகளை கொடுத்துக்கொண்டு, மாலை பல்லடம் வந்தடைந்தோம்.

கோவையில் வியாழன் இரவு “ஒன்றே குலம்™ ஒருவனே தேவன்™” என்ற ஆன்மீக கூட்டம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடந்தது. 14-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. அன்று மாலை ஊட்டிக்கு புறப்பட்டோம். ஞாயிற்றுக்கிழமை ஊட்டியில் உள்ள நண்பர்களை சந்தித்தோம். மேலும் தொட்டபெட்டா, ஊட்டி, டவுண் ஆகிய இடங்களில் பத்திரிக்கையை கொடுத்தோம். பொட்டானிக்கல் கார்டனில் பணிபுரியும் சங்கர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று, தன் குடும்பத்தினரை எங்களுக்கு அறிமுகம்

செய்தார். அவர்கள் எங்களை ஒரு நெருங்கிய உறவினரைப்போல பேசி பழகியது இறையன்பை வெளிப்படுத்தியது. அவர்களிடம் விடைபெற்று பைகாராவில் ஆன்மீக நண்பர்களை சந்தித்தபின் பயணத்தைத் தொடர்ந்தோம்.

மைசூரை நோக்கிய பயணத்தின் வழியில், முதுமலை வழியாக சென்றபோது, ஆங்காங்கு மான்களின் கூட்டத்தையும் அவைகள் மனிதர்களைக் கண்டு மிரளுவதையும், அத்துடன் யானைகள் குடும்ப சகிதம் செல்வதைக் கண்டோம். இறைவன் படைப்பில் எத்தனை மகத்துவம் உள்ளது என்பதை எண்ணி மகிழ்ந்தோம். பின்னர் கன்னட நோட்டீஸ்களை கொடுக்கத் தொடங்கினோம். தமிழில் “படித்துப் பாருங்கள்” என்ற கன்னட வார்த்தையைக் கூறிய வண்ணம் கைப்பிரதிகளை விநியோகித்தவாறு மைசூரை சென்றடைய இரவாகிவிட்டது.

மறுநாள் மைசூர் அரண்மனையைக் காண வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு கைப்பிரதிகளைக் கொடுத்தோம். அன்று மதியம் பெங்களுருவுக்குப் புறப்பட்டோம். மறுநாள் ஒசூரிலிருந்து வேலூருக்கு செல்ல புறப்பட்டோம். நாங்கள் செல்லும் சாலையின் நடுவே வானவில் இருந்தது. மேலும் நாங்கள் செல்லும் இடமெல்லாம் வானிலிருந்து பூமழைத் தூறல் பொழிந்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தாமே யாரைச் சந்திக்க விதித்திருக்கிறாரோ அவர்கள் அனைவரையும் சந்தித்தோம். அந்தந்த இடங்களில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களைச் சந்திக்கும்போது அவர்களின் ஆன்ம தாகம் கண்டு பெருமிதம் கொண்டோம்.

வேலூருக்கு கிருஷ்ணகிரி வழியாக சென்றடைந்தோம். வேலூரில் ஒன்றே குலம்™ ஒருவனே தேவன்™ பிரச்சாரக் கூட்டம் நடந்தது. பின் எங்கள் பயணம் தொடர்ந்தது, மேல்மருவத்தூர் அருகிலுள்ள சித்தாமூரில் சென்று இரவைக் கழித்தோம். மறுநாள் 21-ம் தேதி சனிக்கிழமை காலையில் ஆன்மீக கூட்டம் நடந்தது. மதியம் புறப்பட்டு விழுப்புரத்தைச் சென்றடைந்தோம். அங்கு நடந்த ஆன்மீக கூட்டங்களில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களைச் சந்தித்து விட்டு, இரவு பாண்டிச்சேரி சென்று தங்கினோம்.

மறுநாள் காலை கடலூரில் தேவனாம்பட்டினம் என்ற இடத்தில் நடந்த “ஒன்றே குலம்™ ஒருவனே தேவன்™” ஆன்மீக விழிப்புணர்ச்சி கூட்டத்தில் கலந்துகொண்டோம். அதில் பலர் கலந்துகொண்டனர். அங்கிருந்து இலக்கிய ஸ்தலமான பூம்புகார் வழியாக திருச்சியை அடைந்தோம். திருச்சியில் முழு இரவு நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு இரவோடு இரவாக பயணத்தைத் தொடர்ந்தோம். காலை

சாலையோரத்தில் சமைத்தும், ஓய்வெடுத்த வண்ணமாக இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தைக் காண வருவோருக்கு கைப்பிரதிகளை விநியோகித்தவாறு இரவு தூத்துக்குடி வந்தடைந்தோம்.

அங்குள்ள சகோதரர்களை சந்தித்த பின் கூடங்குளம் வழியாக கன்னியாகுமாரிக்குச் சென்றடைந்தோம். மறுநாள் கைப்பிரதிகளை ஆங்காங்கு சென்று கொடுத்தோம். அப்போது அங்குள்ள சிலர் துண்டுப்பிரதிகளை உடனே படித்து முடிப்பதைக் காண முடிந்தது. அவர்களுக்கு மனுஜோதி புஸ்தகத்தையும் கொடுத்தோம். இது கண்ட ஒருவர் புஸ்தகத்தை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தார். படித்தவுடனே வாங்கிய வேகத்தைப் போல் திருப்பியும் கொடுத்தார். இப்படியும் சிலர் என்ன செய்வது? 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கன்னியாகுமாரியில் இருந்து புறப்பட்டு, மதியம் மனுஜோதி ஆசிரமத்திற்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பாதுகாவலுடன் வந்து சேர்ந்தோம்.

முடிவுரை்: இக்கலியுகத்தில் இறைமக்கள் கலியின் பிடியில் சிக்காமல் மரணமில்லாத பெருவாழ்வைப்பெறும்படியாக இப்பயணம் அமைந்தது. யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற்று சிறந்திடவும்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருசொல்லை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கும், எங்கள் அனைவருக்கும் ஒரு தருணம் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். லௌகீக வாழ்க்கையில் அன்றாடம் சிக்கித் தவிப்பதை விட இறைவன் இந்த பூமிக்கு மனிதனாக வந்து அவர் காண்பித்த வழியில் நடப்பதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்பதையும் இப்பயணத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

  – கே.ரவிக்குமார், கோவை

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்