தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » துன்பச் சுமை

துன்பச் சுமை

விரைந்தோடும் வாழ்க்கைக்கும் காலத்திற்குமிடையே, செவியால் அறியப்படும் செய்திகள் பல நேரங்களில் மனதில் பெரிய பெரிய மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. நன்னறிவு புகட்டும் புராணக்கதைகளும், நீதி கதைகளும் செல்லறிக்காத சுவடிகள் போல அவை என்றென்றும் வாழ்ந்து, மக்களையும் வழிநடத்துகின்றன. அந்த கதைகள் கலைநயத்தோடும், ஈர்க்கும் தன்மையோடும் மொழியப்படுமேயானால், கேட்பவர்களிடத்தே

மனதில் நல்ல மாற்றங்களையும், புதிய சிந்தனையையும் கொடுக்கும்.

முன்பெல்லாம் தன் மக்களுக்கு வாழ்க்கைக்கு வழி காட்டும் நீதிக் கதைகளை

மூத்தோர் உரைப்பர். தற்போது அந்தக் காட்சியை காண முடிவதில்லை. இதைப் பார்த்து தவித்துபோன மூதாட்டி ஒருவர் தன் பேரக்குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லுகிறார்…

நாட்டில் மக்கள் மீளா துன்பம் அடைந்து வருந்தி, கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனராம். சிலநாள் கழித்து மக்கள் விண்ணப்பத்திற்கிணங்கி கடவுள் தோன்றினார். கடவுளிடம் மக்கள் நலன்களை வழங்கக்கோரி, தங்களது துன்பம், பாவங்களை நீக்க சொல்கின்றனர். கடவுளோ மக்களிடம் நீங்கள் உங்களது துன்பம்,

பாவங்களையெல்லாம் ஒரு மூட்டையைப்போல கட்டி, யாரிடம் மாற்ற வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களோ அவர்களிடம் மாற்றிக்கொள்வதற்காக, நிலவொளியற்ற தினத்தன்று இதே இடத்திற்கு வரும்படியாக கூறினார்.

கடவுள் குறிப்பிட்ட அந்த நாள் வந்தது. ஏனெனில் தெளிவு அப்போதுதான் வந்தது. யாரும் மூட்டையை மாற்றிக் கொள்ளவில்லை. அவரவரது மூட்டை அவரவர் கைகளிலேயே இருந்தது. இதை கண்ட கடவுள் நகைத்தார். என் பிள்ளைகளே! உங்கள் கர்மங்களைத்தான் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சுமப்பதை நீங்கள் பாரமாக கருதி, அவர்களைப்போல் இருந்தால் நன்றாக இருக்கும், இவர்களைப்போல் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறீர்கள். தவிர உங்கள் கர்மங்களை கடக்க அஞ்சுகிறீர்கள்.

உங்கள் துன்பமும், வலியும், வேதனையும் நீங்கள் பழகியவை, பழக்கப்பட்டவை. அவை உங்களுக்கு தந்த இழப்பைப்போல, பலனையும் தரும். ஆனால் பழகிய ஒன்றை விட்டு, அனுபவமில்லாத, அறியாத மற்றவர்களின் வாழ்க்கையோடு உங்கள் வாழ்வை

ஒப்புமைப்படுத்தி, அதன் ஏற்றத்தாழ்வுகளை எண்ணுவது பெரும் தவறு. ஆக இனி இந்த தவறை ஒருபோதும் செய்யாதிருப்பீர்களாக என்று அறிவுறுத்தினார்.

இந்த அறிவுரையை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு செயல்பட்டால், துன்பச்சுமை அருவருக்கத்தக்கதாக இராது.

– D. கிருத்திகா, நெடுஞ்சேரி

Filed under: ஆன்மீக கருத்து