தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » திறவோர் காட்சியில்…

திறவோர் காட்சியில்…

பழம்பெரும் நூல்கள் எல்லாம் பகுத்தறிவு தூண்டியே! அவை நமக்கு சொல்லாத அறிவுரை இல்லை. கேளும் செவிக்கே அது சேரும். கற்பினும் தெரியாதது பட்டதும் புரியும் அரும்பழம் நூல்கள் எல்லாம் உரைத்தது நன்றே அன்றி வேறில்லை. உணர்ந்ததால் ஏதும் கேடில்லை. புறபொருள் விளக்கும் நானூற்றில் திறவோர் காட்சியில் கண்டதாக:

நீர்வழிப்படும் புணைபோ லாருயிர்

முறைவழிப்ப படூஉ மென்பது….. என பூங்குன்றனார் மொழிந்தார்.

மானிடர்களின் அக உள்ளம்தனை ஆராய்ந்து பார்த்தோனைப்போல தெளிவாக்கி உள்ளார் புலவர். இவ்வரி சொல்லும் மெய்மை கற்றோர் அறிவர். ஆற்று பெருவெள்ளம் வீறு கொண்டு பாய்ந்து வருகையில், அவ்வெள்ள நீர் போகிற திசையிலேயே அந்நீரில் மிதக்கும் தெப்பம் பயணிக்கும். இங்கு ஆற்று பெருவெள்ளமாக ஊழ்வினையையும், தெப்பத்திற்கு உலக மக்களையும் ஒப்புமை காட்டியுள்ளார். அந்த ஊழ்வினையின் வழியில்தான் உலக மக்கள் பயணிப்பார் என்பதை உறுதியிட்டிருக்கிறார். இந்த உலக மக்கள் உலகம் ஓடுகிற பாதையிலேயே தன்னையும் அமைத்துக் கொள்வானேயொழிய, அதன் நன்மை தீமையை ஆராய்ந்து செயல்படுவாரில்லை என்ற உண்மை இதில் மையமாக்கப்பட்டது. இங்கு திரைப்பட பாடல் வரி ஒன்று நினைவில் எழுகிறது…

“ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே! ஆனால்

 ஆண்டவன் எண்ணம்போல் இந்த பூமி அமையலையே!”

உலகத்தையும், மக்களையும் கடவுள் படைத்தாரேயன்றி அது இப்போது கடவுள் என்ற எல்லையை தாண்டி செல்ல முயல்கிறது. வெற்றி காண கூடுமா இந்த முயற்சி? இந்த தெப்பத்தைப்போல அரும்பெரும்பான்மையான மக்கள் இருக்கின்றார்கள். இதனால் அவர்கள் என்ன சாதித்தார்கள்? இதை யோசித்து செயல்பட ஆர்வலர் எவருமில்லை. இவர்கள் அழிவை தேடி ஆவலோடு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஊழ்வினை பயனோ! சிந்தியுங்கள்.

– D. கிருத்திகா, T. நெடுஞ்சேரி

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்