தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள் » தாய்க்குப் பின் மனைவி இந்திய நாடோடி கொங்கணிக் கதை

தாய்க்குப் பின் மனைவி இந்திய நாடோடி கொங்கணிக் கதை

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய!

இறையே அபயம்!                              யாவும் இறையின் உபயம்!

ஒரு கிராமத்தில் மூதாட்டி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். இவள் உழைத்துப் பாடுபட்டு மகனை நன்றாக வளர்த்து வந்தாள். கவலை தெரியாமல் வளர்ந்து வாலிப வயதை அவன் அடைந்தான். கிழவி ஒருநாள் தன் மகனைப் பார்த்தாள். மகனே இனிமேல் எனக்குத் தள்ளாத காலந்தான். வீட்டுப் பொறுப்பை மருமகளிடம் ஒப்படைத்து விட்டு நான் நிம்மதியாக சாமிப் பெயரைச் சொல்லிக் கொண்டு, என் வாழ் நாளை நல்லபடியாகக் கழிக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். நீ சீக்கிரம் ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து கொண்டு வா என்றாள். பையனும் சம்மதித்தான். அம்மா இனிமேல் நீ வீட்டிலேயே இரு. நான் போய் உழைத்துப் பொருள் கொண்டு வருகிறேன். மருமகள் வந்ததும் இந்த அடுப்படி வேலை கூட உனக்கு இருக்காது என்று தாய்க்கு ஆறுதல் கூறினான். பையனுக்கும் திருமணம் ஆயிற்று.

புதுமண வாழ்க்கையில் அவன் தனி ஆனந்தம் பெற்றான். வந்த புதிதில் சாதுவாகத் தோன்றிய மருமகள் போகப்போக தன் உண்மை சொரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கினாள். கிழவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மருமகள் பார்த்து சாப்பாடு போட்டால்தான் உண்டு. மகன் தன் தாயை கவனிப்பதே இல்லை. காலையில் வேலைக்குப் போகிறவன் மாலையில்தான் வீட்டுக்குத் திரும்புவான். வந்ததும் அம்மா சாப்பிட்டார்களா என்று மனைவியிடம் விசாரிப்பான். நான் எது செய்து கொடுத்தாலும் அவர்களுக்கு இறங்கவில்லை. ஏதோ பசிக்கு கொஞ்சம் சாப்பிட்டு வைக்கிறார்கள் என்பாள். வயதாகி விட்டதால் அம்மாவுக்கு உண்பதற்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது போல் இருக்கிறது என்று நினைத்து மகன் சமாதானம் அடைவான். என்றைக்காவது மனம் வந்தால் அம்மா உன் மருமகள் இன்றைக்குப் பாதாங்கீர் பண்ணியிருந்தாளே அதைக்கூட நீ சாப்பிடவில்லையா? என்று கேட்பான். கிழவி தீனமாக இல்லையே அப்பா, எனக்கு எங்கே அதையெல்லாம் என்று சொல்லி முடிப்பதற்குள் ஆமாம், ஆமாம் உனக்குத்தான் ஒன்றுமே பிடிப்பதில்லையே என்று சொல்லிக்கொண்டே அவன் போய் விடுவான். வீட்டில் என்ன சமையல் ஆகிறது என்பதைப் பற்றியே கிழவிக்குத் தெரியாது. மருமகள் கொடுக்கிற ஆறிப்போன ரொட்டியோ, கஞ்சியோதான் அவள் தினமும் காண்பதாகும். இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருந்தன. போகப் போக மருமகளுக்கு, மாமியார் கிழவி ஒரு சுமையாகத் தோன்றினாள். அவளை எப்படியாவது வீட்டை விட்டு அப்புறப்படுத்தி விட வேண்டுமென்று முடிவு செய்தாள்.

தினமும் கணவன் வந்ததும் கிழவியைப் பற்றி ஏதாவது புகார் செய்து கொண்டே இருக்கத் தொடங்கினாள். மகனுக்கோ இளம் மனைவியின் பேச்சுத்தான் தேவ வாக்காக இருந்தது. தாயை நேருக்கு நேரே கண்டிக்கத் துணியாவிட்டாலும், இந்த கிழவிக்குச் சாகிற காலத்தில் ஏன் இந்தத் துராங்காரமும், துர்க்குறித்தனமும் என்று அவன் முணுமுணுத்தபடியே நொந்து கொள்வான். கிழவிக்கு முதுமையின் இயலாமையோடு மருமகளின் உதாசீனமும் கொடுமையும் சேர்ந்தன. மிகவும் மனம் நொந்து உடல் தளர்ந்து கிடந்தாள். அவளுடைய நிலையைப் பார்த்த மகன் ஒருநாள் மனம் இரங்கி அவளுக்கருகில் அமர்ந்து ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தான். தாயும் வீணாக வீட்டில் குழப்பம் ஏற்பட வேண்டாமென்று மருமகளைப் பற்றி ஏதும் வழக்கு சொல்லவில்லை. மகன் எழுந்து போகும்போது, அம்மா உனக்கு எதாவது வாய்க்கு வேண்டியிருந்தால் மருமகளிடத்திலே சொல்லு, செய்து கொடுப்பாள் என்று கூறிவிட்டுப் போனான். கிழவிக்கு ஏதோ பெருநிதி கிடைத்தது மாதிரி இருந்தது. மருமகள் தன்னிடம் அன்பு கொண்டிருக்கிறாள் என்று எண்ணினாள். மகன் வேலைக்குச் சென்றதும் அவளை அழைத்தாள், குரல்கூட எழும்பவில்லை. சிரமப்பட்டு மறுமுறையும் குரல் கொடுத்தாள். மருமகளுக்கு வியப்பாக இருந்தது. மாமியார் அருகில் போனாள். கிழவி, பெண்ணே எனக்கு கொஞ்சம் கோதுமைப் பாயாசம் செய்து கொடேன். ஆசையாக இருக்கிறது என்று கேட்டாள். அவன்கூட சொல்லிப் போனான் என்றாள். அவ்வளவுதான் மருமகளுக்கு கோபம் பொங்கியது. இந்த கிழத்துக்கு இவ்வளவு துணிச்சலா? நல்ல புத்தி கற்பிக்கிறேன் என்று கறுவியபடி கதவை ஆத்திரத்துடன் சாத்திக்கொண்டு வெளியே போய்விட்டாள். பாவம் கிழவி ஆசையோடு எதிர்பார்த்து ஏமாந்து போனாள். தினப்படி கிடைக்கிற ஆறிப்போன வறட்டு ரொட்டி கூட அன்று கிடைக்கவில்லை. விதியை நொந்துகொண்டு கிழவி முடங்கிக் கிடந்தாள்.

இரவு தொடங்கிய நேரத்தில் கிழவியின் மகன் வந்து சேர்ந்தான். தினமும் வாசல் பக்கம் தன் வரவை எதிர் பார்த்து நிற்கும் மனைவி அன்று தென்படாததைக் கண்டதும் அவனுக்கு கலக்கமாக இருந்தது. உள்ளே சென்று பார்த்தான். அழுதபடியே அடுப்படியில் அவள் படுத்துக் கிடந்தாள். பதறிப்போய் ஏன் இப்படிக் கிடக்கிறாய்? என்று விசாரித்தான். கண்களைத் துடைத்துக் கொண்டே உங்கள் அம்மாவிடம் போய் இன்று உங்களுக்காக என்ன சமையல் செய்ய வேண்டும்? சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? என்று அழுத குரலில் மனைவி முறையிட்டாள். என்ன சொன்னாள்? என்ன சொன்னாள்? என்று பதற்றத்துடன் அவன் கேட்டான். அதுவா, உன் புருஷனைப் போட்டு வேக வைத்துப் பாயசமாக்கி கொண்டு வா என்று சொன்னார். என்ன! அப்படியா சொன்னாள்? என்று கணவன் ஆத்திரப்பட்டான். அழுது கொண்டே சந்தேகமாக இருந்தால் நீங்களே போய்க் கேட்டுப் பாருங்களேன் என்றாள் மனைவி. கொங்கணி மொழியில் ‘கவ்’ என்றால் கோதுமை ‘கொவ்’ என்றால் கணவன் ஆகும். மாமியார் கிழவி கவ் பாயாசம் என்று சொன்னதை மருமகள் கொவ் பாயசம் என்று மாற்றி கணவனிடம் சூதாக முறையிட்டிருக்கிறாள்.

மகன் உடனே தாயின் அறைக்குச் சென்று அம்மா மருமகளிடம் கொவ் (கணவன்) வேண்டுமென்றா கேட்டாய்? என்று இரைந்தான். கிழயோ காலையிலிருந்து பட்டினி. மிகவும் சேர்ந்து கிடந்தாள். மகனின் குரல் காதில் விழுந்ததும் கண்விழித்துப் பார்த்தாள். திரும்பவும் அதே கேள்வியை மகன் கேட்டபோது, தான் கேட்ட ‘கவ்’ (கோதுமை) பாயசம்தான் நினைவு இருந்தது. ஆமாம் கேட்டேன். அதற்காக இன்று பூராவும் பட்டினிபோட்டு விட்டாள் என்றாள் கிழவி மெலிந்த குரலில். இதைக் கேட்டதும் மகனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. வெகு நாட்களாகவே அவள்பேரில் பல பொல்லாத்தனங்களைச் சுமத்தி மனைவி உரு ஏற்றி இருந்தாள். இனி இந்தக்  கிழத்தை வீட்டிலேயே வைக்கக்கூடாது. இந்தக் குற்றுயிரான நிலையிலேயே இவளை சுடுகாட்டில் கொண்டு போய் வைத்து தீயை மூட்டி வந்து விடுகிறேன் என்று கறுவினான். இரு கோணிப் பைகளைக் கொண்டு வந்தான். ஒன்றில் தன் கிழவி தாயை போட்டு முடிந்தான். மற்றதில் தேங்காய் நார்களை அடைத்துக் கொண்டான். இரு மூட்டைகளையும் சுமந்து கொண்டு சுடுகாட்டுக்குச் சென்றான். மருமகளோ மன நிறைவுடன் வழியனுப்பி வைத்தாள்.

மகன் ஒரு மரத்தடியில் இரு மூட்டைகளையும் இறக்கினான். அக்கம் பக்கத்தில் சிதறிக் கிடந்த சுள்ளி, விறகு, இலைச்சருகுகளை எல்லாம் குவித்து சிதை அமைத்தான். கிழவி இதற்குள்ளே மூர்ச்சையாகி விட்டாள். அவளைத் தூக்கிச் சிதையில் கிடத்தினான். தீ கொண்டு வரவில்லையே என்பது பிறகுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது. தன் அறியாமையை நொந்தபடி எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு வீட்டுக்கு விரைந்தான். போகும் முன் சருகுகளால் தாயை நன்றாக மூடி மறைத்து விட்டுப் போனான். சிறிது நேரமானதும் குளிர்ந்த காற்றில் சருகுகள் கலைந்தன. கிழவிக்கு உணர்வு வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். நிலைமையை புரிந்துகொண்டாள். மெல்ல எழுந்து நடந்தாள். கால்கள் தள்ளாடின. பக்கத்து மரத்தடிக்குப் போய் இடுக்கில் ஒண்டிக்கொண்டு மறைந்திருந்தாள். நெருப்புடன் வந்து சேர்ந்த மகன் சிதைக்கு எரி மூட்டினான். கொஞ்ச நேரம் காவல் இருந்து விட்டு வீடு திரும்பினான். கிழவி மெல்ல நகர்ந்தபடியே பக்கத்தில் இருந்த குளக்கரைக்குச் சென்றாள். அங்கேயே கீழே உதிர்ந்து கிடந்த சில கனிகளைப் புசித்து விட்டு வயிறு நிரம்ப தண்ணீரையும் குடித்தாள். பசி அடங்கியது. சிறிது களைப்பாறி விட்டு அந்த மரப்பொந்துக்கே வந்து சேர்ந்தாள். பழையபடியே முடங்கிப் படுத்துக் கொண்டாள்.

நடுநிசி இருக்கும். சில திருடர்கள் தாங்கள் திருடி வந்த பொருட்களை அந்த மரத்தடியில் பிரித்து பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள். கிழவி ஏதோ சத்தம் கேட்கிறதே என்று எழுந்து வெளியே வந்தாள். அவளுடைய தலை அலங்கோலமாக இருந்தது. முகமோ இருட்டில் பயங்கரமாக தெரிந்தது. திருடர்கள் எதிர்பாராத வகையில் இப்படி ஒரு உருவத்தைக் கண்டதும் பேயோ, பிசாசோ என்று குலை நடுக்கங்கொண்டு பொருட்களை எல்லாம் போட்டு விட்டு ஓடிப் போனார்கள். விடியற்காலை வரையில் அங்கேயே தங்கி இருந்தாள். தூக்க முடிந்த பொருட்களை முதுகில் கட்டி சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். கிழவி மகனை கூவி அழைத்தாள். தூங்கிக் கொண்டிருந்த மகனும், மருமகளும் கிழவியின் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டார்கள். ஒருவேளை பிசாசு உருவில் கிழவி வந்திருப்பாளோ என்கிற திகிலில் இருவரும் பயந்துகொண்டே வந்து கதவைத் திறந்து பார்த்தார்கள்.

கிழவி ஒரு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தாள். மகனுக்கும், மருமகளுக்கும் பேயறைந்தாற்போல் இருந்தது. கிழவி உள்ளே வந்து மூட்டையை அவிழ்த்து மருமகளே, உனக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொள் என்றாள். வைர நகைகளும், பொன் அணிகளும், பொற்காசுகளும் அந்த மூட்டையில் இருந்தன. இவ்வளவற்றையும் யாரம்மா கொடுத்தார்கள் என்று இருவருமே பரிவோடு கேட்டார்கள். ஆண்டவன்தான் கொடுத்தான். இன்னும் நிறைய கொடுத்தார். என்னால் இவ்வளவுதான் தூக்கி வர முடிந்தது என்று சொல்லி விட்டு, தன் அறைக்குள் போய் படுத்துக்கொண்டாள்.

அன்று முதல் கிழவிக்கு விருந்து உபசரிப்பு ஒரே தடபுடலாக நடந்தது. மருமகளுக்கு ஒரே மனக்குழப்பம். இந்தக் கிழவி மேல் உலகத்துக்குப் போய் விட்டு திரும்பி வந்திருக்கிறாள். ஆனால் அதையெல்லாம் மறைக்கிறாள். நானோ போய் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன் என்று எண்ணினாள். மறுநாளே என்னையும் அதே இடத்தில் வைத்து தகனம் செய்யுங்கள். நானும் உங்கள் அம்மா மாதிரியே மேல் உலகத்துக்குப் போய்விட்டு வருகிறேன் என்று கணவனை நச்சரிக்கத் தொடங்கினாள். கணவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். பிடிவாதக்காரியின் அடம் வலுத்தது. கடைசியில் ஒரு கோணியில் மனைவியையும், மறுகோணியில் தேங்காய் நார்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான். நெருப்பு எடுத்துக்கொள்ளுங்கள், மறந்து விடாதீர்கள் என்று நினைவுபடுத்தினாள் மனைவி. சிதையில் அவளைப் படுக்க வைத்து கணவன் தீயை மூட்டியதும் அவள் அலறத் தொடங்கினாள். சூடு தாளாமல் எழுந்து ஓட ஆரம்பித்தாள். அவன் அவளைப் பிடித்து மீண்டும் சிதையிலிட்டு, என் அம்மா கொஞ்சம்கூட கத்தவில்லை. நீ மட்டும் பெரிதாக அலறுகிறாயே என்று கடிந்து கொண்டான். இதற்குள் தன்நினைவு இழந்துவிட்டாள். சிறிது நேரத்திற்கெல்லாம் தீ நாக்குகள் அவளை இரையாக்கி கொள்ளத் தொடங்கின. அப்பாவி கணவன் இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டிருந்தான். மேல் உலகத்திலிருந்து மனைவி நிறையப் பொருள்களுடன் வந்து சேரப் போகிறாளென்று, விடிந்து வெகு நேரமாகியும் அவள் வரவில்லை.

ஒருநாள் இரண்டு நாள் ஒரு வாரமும் ஆயிற்று. போனவள் போனவள்தான். தாய்க்கு தெரியாமலேயே மகன் இவ்வளவும் செய்திருக்கிறான். பிறகுதான் அறியாமையை நொந்து கொண்டான். நடந்ததையெல்லாம் தாயிடம் சொல்லி அழுதான். கிழவி மிகவும் வேதனைப்பட்டாள். என்னதான் பொல்லாதவளாக இருந்தாலும் வீட்டுக்கு விளக்கு மாதிரி துலங்க வந்தவள் இப்படி அநியாயமாகச் செத்து விட்டாளே என்கிற துயரம் அவளுக்கு. நாட்கள் கரைய கரைய ஆண்டவனின் விருப்பத்தை யார் மாற்ற முடியும் என்று ஆறுதல் அடைந்தாள். ஒருநாள் கிழவி நகைகளையும், பொற்காசுகளையும் மகனின் கையில் கொடுத்து, மகனே எனக்கும் முடிவுகாலம் தொலைவில் இல்லை. எனக்குப் பிறகு உனக்கு உதவியாக ஒருத்தி வேண்டுமில்லையா? இந்தப் பொருள்களைக் கொடுத்து ஒரு அம்மாவை அழைத்து வாயேன் என்றாள். அந்த வாலிபன் கிராமம் கிராமமாகச் சுற்றினான். அவன் கோரிக்கையை கேட்டவர்கள் சிரித்தார்கள். என்னப்பா நீ ஒரு மடையனாக இருக்கிறாயே! யாராவது தாயைப் போய் விற்பானா? விலைக்கு வாங்குபவள் எங்காவது தாயாக இருக்க முடியுமா? என்று திட்டி அனுப்பினார்கள்.
மனம் சோர்ந்து வீடு திரும்பிய மகனைப் பார்த்து தாய் தான் கிடைக்கவில்லை என்றால் மனைவியாக ஒரு இளம் பெண்ணையாவது கொண்டு வருவதற்கென்ன? இப்படியுமா ஒரு ஆண்பிள்ளை இருப்பாய் என்று கிழவி சொன்னாள். ஒரு வாலிபன் பெண் தேட வந்திருக்கிறான் என்பது ஊராருக்கு தெரிந்ததோ இல்லையோ நான் முந்தி, நீ பிந்தி என்று அவனைப் பலர் சூழ்ந்து நடுவில் அகப்பட்டுக் கொண்ட நரிபோல அவன் தவித்துப் போனான்.

கடைசியில் தாயின் உதவியால் குலம், குணம், உடல்நலம் எல்லாவற்றிலும் ஏற்ற பெண்ணாகத் தேர்ந்தெடுத்து பரிசம் போட்டு திருமணத்திற்கு நிச்சயம் செய்து அவளை கொண்டு வந்தான். அப்போதுதான் தாய் மகனைப் பார்த்து இவ்வாறு கூறினாள்: “மகனே! பார்த்துக்கொண்டாயா? உலகத்தில் மனைவியாக எத்தனை பேர் வேண்டுமானாலும் கிடைப்பார்கள். பெற்றவளைத் தவிர வேறு எவரும் தாயாக வந்து இருக்கமாட்டாள், இருக்கவும் முடியாது. இளம் மனைவி வந்த புதுமோகத்தில் புத்தி மயங்கி கிடப்பவர்களைப் போல் அறிவிலிகள் யாரும் இல்லை” என புத்திமதி கூறினாள். நற்புத்தி பெற்ற மகனும் தாயின் பெருமையை உணர்ந்து, அவளுடைய பாதங்களைத் தொட்டு வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டான். மூவரும் ஒருமித்து கௌரவமாக வாழ்ந்து வந்தார்கள். செழுமையும் மகிழ்ச்சியும் அவர்களுடைய எளிய வாழ்வில் நிறைந்திருந்தன.
தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை! தாயின் காலடியில்தான் சுவர்க்கமுள்ளது.

ஓம் தத் ஸத்.

கண்டு எடுத்தோன் – சத்திய நகரக்குடிமகன்,
– தேவகவி சுவாமிஜி அன்பிற்கரசு
– வான் மறையாக வ(ள)ரும்

*******

Filed under: ஆன்மீக கதைகள்