தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » தர்மத்தின் நோக்கம்

தர்மத்தின் நோக்கம்

மனிதப்பிறவி எடுத்து மனித உரு தாங்கி, நடமாடிக்கொண்டிருக்கிறவர்கள் எல்லாரும் மனிதர்கள் அல்ல. இதனை விளக்க ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. திருவொற்றியூரில் வசித்த யோகி ஒருவர் ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்தவாறே தெருவில் நடந்துபோகிற மனிதர்களை இதோ ஒரு பாம்பு செல்கிறது, இதோ ஒரு தேள் போகிறது, இதோ ஒரு நரி செல்கிறது என்று வர்ணித்துக்கொண்டே இருந்தார். இதை தினந்தோறும் கவனித்துக்கொண்டே இருந்த ஒருவன் இவருக்கென்ன மூளை கோளாறோ என்று எண்ணினான். ஒருநாள் அந்த தெருவிலே வள்ளல் பெருமான் நடந்து சென்றார். அப்போது இதோ ஒரு மனிதர் செல்கிறார் என்று அந்த யோகி கூறினார். எப்போதும் யார் சென்றாலும் ஏதேனும் விலங்கு அல்லது ஊர்வனவற்றின் பெயர்களை சொல்லி வர்ணிக்கும் அவர் அன்றைக்கு ஒரு மனிதர் செல்கிறார் என்று கூறியது, அந்த மனிதனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. உடனே அவன் அந்த யோகியிடம் சென்று அவருடைய செய்கைக்கான காரணத்தை அறிய ஆர்வமாக அவரிடம் கேட்டான்.

அதற்கு அவர்: “நான் மனிதர்களின் புறத்தோற்றத்தை வைத்து அவர்களை எடைபோடுவதில்லை. எனது ஞான கண் கொண்டு அவரவர் மனதினை அறிந்து, அவர் எந்த தன்மை கொண்டவராக இருக்கிறாரோ அதை வைத்துதான் வர்ணித்தேன். இன்றுதான் மனிதத்தன்மை கொண்ட மனிதர் ஒருவர் நடந்து செல்வதைக் கண்டேன். அதனால்தான் ஒரு மனிதர் செல்கிறார் என்றேன்” என கூறினார். இதிலிருந்து நாம் அறிவது யாதெனில், மற்ற ஜீவராசிகளின் இயல்புகள் மாறுவதில்லை. ஆனால் மனிதன் ஒருவன்தான் தன்னுடைய இயல்பான தன்மையிலிருந்து அடிக்கடி மாறுகிறான். மனிதன் ஒரு நேரத்தில் பாம்பாக சீறுகிறான், இன்னொரு நேரம் தேளாக கொட்டுகிறான், சில நேரம் நரியாக நடந்துகொள்கிறான். முதலில் இந்த விலங்கு தன்மையிலிருந்து மனிதத்தன்மைக்கு வரவேண்டும். அதைத்தான் நாம் மனித தர்மம் என்று அழைக்கிறோம். அதற்காகத்தான் இறைவன் யுகந்தோறும் தர்மத்தை நிலைநாட்ட அவதரிக்கிறார்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து