தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » தங்கக்கட்டளை

தங்கக்கட்டளை

ஒவ்வொரு வேதமும் மனித குலத்திற்கு நன்மை பயக்க வேண்டும் என்பதற்காக பற்பல கட்டளைகளை கூறுகிறது. எல்லா அவதாரப் புருஷர்களும் பேசியவையே வேதங்களாக கருதப்படுகிறது. ஒரு கட்டளையை எல்லாரும் கூறியிருக்கிறார்கள். அதையே நாம் தங்கக்கட்டளை என்கிறோம். மகாபாரதம் 5:15,17-ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “உன் கடமையின் முத்தாய்ப்பாக கூறப்படுவது இதுவே. உனக்கு ஒரு செயல் வேதனை ஏற்படுத்தினால், அதை நீ மற்றவர்களுக்கு செய்யாதே”. சீக்கியர்களின் வேதமாகிய குருகிரந்த் சாஹிப் 1299-ம் பக்கத்தில் குருநானக் இவ்வாறு கூறுகிறார்: “நான் யாருக்கும் அந்நியன் அல்ல, யாரும் எனக்கு அந்நியர் அல்ல. எல்லாருக்கும் நான் சிநேகிதன்”. இதே கருத்தை கன்ஃபூசியஸ் இவ்வாறு கூறுகிறார்: “உனக்கு எது செய்யப்படக்கூடாது என்று நினைக்கிறாயோ, அதை நீ மற்றவர்களுக்கு செய்யாதே”. “உனக்கு தீங்கு விளைவிக்கும் செயலை மற்றவர்களுக்கு செய்யாதே” என்று சொராஸ்ட்டிரானிஸம் கூறுகிறது. “உன்னுடைய அயலானின் லாபத்தை உன்னுடைய லாபமாகவும், உன்னுடைய அயலானின் நஷ்டத்தை உன்னுடைய நஷ்டமாக கருது” என்று தாவோயிஸம் கூறுகிறது.

யூதர்களின் வேதம் மோசே என்ற தீர்க்கதரிசியால் அருளப்பட்டது. மோசே எழுதிய வேதமாகிய தோரா என்று அழைக்கப்படுகிற இவ்வேதத்தில், “உனக்கு விருப்பமில்லாத செயலை மற்றவர்களுக்குச் செய்யாதே”. இதுதான் தோராவின் சாராம்சமாகும். மற்றவையெல்லாம் வியாக்கியானமாகும். மஹாவீரர் தோன்றியதால் ஜைன மதம் தோன்றியது. மஹாவீரர் சூத்ர கிருத்தங்கா எனும் புஸ்தகத்தில் “உன்னை மற்றவர்கள் எவ்வாறு நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ அவ்விதமாகவே உலகிலுள்ள எல்லா ஷீவராசிகளையும் நீ நடத்த வேண்டும்” என்கிறார்.

இதே கருத்தை இஸ்லாத்தும் கூறுகிறது. முகமது நபிகள் கூறுவதாவது: “நீ உனக்கு என்ன வேண்டுமென்று இறைவனிடம் வேண்டுகிறாயோ, அதையே மற்றவர்களுக்காகவும் கேட்க வேண்டும்”. “உன்மேல் ஒரு பாரம் சுமத்தப்பட்டால் நீ அதை விரும்புகிறதில்லை. ஆகையால் அதே பாரத்தை இன்னொருவன்மேல் நீ சுமத்தாதே. நீ எதை விரும்புகிறதில்லையோ அது மற்றவர்களுக்கு சம்பவிக்க வேண்டுமென்று விரும்பாதே” என்கிறது பஹாய் மதம். “உன்னை உன் மனது நோகும்படி நடத்தினால், அவ்வாறு மற்றவர்களை நடத்தாதே” என்று புத்தர் கூறுகிறார். “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்று இயேசு கூறுகிறார்.

இந்த தங்கக்கட்டளைக்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறும் விளக்கமாவது: “நாம் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். மற்றவர்கள் நமக்கு சேவை செய்யவேண்டுமென்று நாம் விரும்புவோம். இப்பொழுது என்னுடைய சட்டை என்னிடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மற்றவர்கள் என்னுடைய சட்டையை துவைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆனால் நான் போய் அதை மற்றவர்களுக்குச் செய்கிறேன். அவ்வாறு எனக்கு அவர்கள் செய்ய வேண்டுமென்று விரும்புவதை நான் அவர்களுக்குச் செய்கிறேன். மற்றவர்கள் என்னுடைய சட்டையை துவைப்பதற்குப் பதிலாக, நான் போய் மற்றவர்களுடைய சட்டைகளை துவைக்கிறேன். அதுதான் நியாயப்பிரமாணம். உங்களால் நேசிக்க முடியாத மக்களை நீங்கள் நேசியுங்கள் என்று இயேசு கூறினார். அதுதான் தெய்வீக அன்பு. உங்களால் நேசிக்க முடிகின்ற மக்களை நீங்கள் நேசித்தால், சாதாரண மக்கள்கூட அதைச் செய்ய முடியும்”. வேதங்களின் சாராம்சமாக தங்கக்கட்டளை திகழ்கிறது. அதை பின்பற்றினால் வேதங்களை பின்பற்றியதற்கு சமமாகும்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து