தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » தக்ஷிணாமூர்த்தி

தக்ஷிணாமூர்த்தி

சத்தியம், சிவம், சுந்தரம் என்று அழைக்கப்படுபவன் சிவன். அவர் கங்கையை தலையில் வைத்திருப்பதால் கங்காதரன் என்றும், நடனத்திற்கு ஆண்டவராக இருப்பதால் நடராஜர் என்றும், தெற்கு முகமாக நோக்கி புலித்தோல் மேல் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பதால் தக்ஷிணாமூர்த்தி என்றும், ஆண் பாதி பெண் பாதியாக தோன்றுவதால், அர்த்தநாரீஸ்வரர் என்றும், மூன்றாவது கண்ணை உடையவராக இருப்பதினால் திரிநேத்ரா, திரிநயனா, திரிஅக்ஷரா என்றும், அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை கற்றுக்கொடுக்கும் முதல் ஆசானாக விளங்குவதால், ஆதிநாத் என்றும், பிறையை தன் தலையில் அணிந்திருப்பதால் பிறைசூடன், சந்திரசூடன் அல்லது சந்திரசேகரா என்றும், உயிரை அல்லது ஜீவனை குறிப்பதால் சிவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

சிவனின் உடலில் சாம்பல் பூசப்பட்டிருக்கும். சாம்பல் பூசுவதின் அர்த்தமாவது சிவன் ‘நான்’ என்ற அகங்காரத்தை மாயை அழிப்பவர். அவருடைய நெற்றியிலுள்ள மூன்று கோடுகள் மூன்று உலகத்தைக் குறிக்கும். புலித்தோல் அணிபவர் என்றால் இச்சை, காமம் போன்றவற்றை அடக்கியாள்பவன். மாயையான உலகத்துடன் அவர் பற்றில்லாதவர் ஆவார்.

சிவன் கையிலிருக்கும் திரிசூலமானது சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று குணங்களைக் குறிக்கிறது. அவர் இடது கையில் இருக்கும் உடுக்கை ‘ஓம்’ என்ற புனித ஒலியின் அடையாளமாக உள்ளது. அவரின் நெற்றிக் கண்ணினால் எல்லாவற்றையும் அழிக்கிறார். அவர் எதை அழிக்கிறார்? ஒரு யுகத்தின் முடிவில் வானத்தையும், பூமியையும் மாத்திரமல்ல ஆனால் நம்மை சுற்றியிருக்கும் கட்டுகளை அழிப்பவர். அவர் சுடுகாட்டில் தாண்டவம் ஆடுவதால் ‘சுடலையாடி’ என்று அழைக்கப்படுகிறார். அவர் ஏன் சுடுகாட்டிலிருக்கிறார்? சுடுகாடு என்பது அவருக்கு பிரியமானவர்களின் இதயமாகும். அது பாழ் நிலமாகவும், யாருமற்றதாகவும் உள்ளது. அங்கே அவர் மாயையையும், நான் என்ற அகங்காரத்தையும், கர்மங்களையும் அழிக்கிறவர். சிவன் சிவதாண்டவம் ஆடுவதில் மூன்று முக்கியத்துவங்கள் உள்ளன. முதலாவதாக அவர் தாண்டவம் ஆடுவதால்தான் இந்த அண்டசராசரங்களில் சகலமும் கிரமமாக இங்கிருக்கிறது. இரண்டாவதாக அவர் தாண்டவம் ஆடுவதினால் கணக்கில்லா ஆன்மாக்கள் மாயையிலிருந்து விடுபடுகின்றன. மூன்றாவதாக இத்தாண்டவம் மனதில் ஆடப்படுகிறது. ஆகையால்தான் ‘அவனின்றி அணுவும் அசையாது’ என்று கூறப்படுகிறது.

சிவபெருமானுக்கு ‘ருத்ரன்’ என்ற பெயரும் உண்டு. இதுவும் ஒரு காரணப் பெயராகும். நம்முடைய அறியாமையினால் சிலரோ அல்லது சில வஸ்துக்களோ நமக்குப் பிரியமானதாக இருக்கிறது. நாம் ஞானோதயம் அடைவதற்கு அவை தடைகளாக உள்ளன. அவற்றை நீக்குவதற்கு சிவபெருமான் தயங்க மாட்டார். நேரம் வரும்போது நமக்கு பிரியமானவர்களால் அல்லது பிரியமானதை நம் கண்முன்பாகவே அழிப்பார். லௌகீக காரியங்களில் நாம் அவரை ஏமாற்றலாம். ஆனால் ஆன்மீக விஷயத்தில் நாம் அவரை ஏமாற்ற முடியாது. இப்படி அவர் நமக்கு பிரியமானதை அழிப்பதினால் ருத்ரன் அதாவது பயங்கரமானவர் என்று சிவபெருமானுக்கு பெயர் ஏற்பட்டது.

…..தொடரும்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்