தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » தக்ஷிணாமூர்த்தி

தக்ஷிணாமூர்த்தி

தெற்கு நோக்கி ஆலமரத்தின்கீழ் வீற்றிருக்கிறார் தக்ஷிணாமூர்த்தி. வாஸ்து சாஸ்திரத்தின்படி அத்திசை மரணத்தின் திசையாகும். ஆம், அது எதினுடைய மரணமாகும்? ‘நான்’என்ற அகங்காரம் மரணித்தால்தான், புது பிறவியை ஒருவன் அடைய முடியும் என்பதை காண்பிப்பதாக உள்ளது. தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதால் சிவன் மரணத்தையும், காலத்தையும் வென்றவராவார். சர்ப்பங்களை தம்முடைய கழுத்தில் மாலையாகவும், தம் கரத்திலும் சிவன் அணிந்திருக்கிறார். சர்ப்பம் என்பது ஞானம் மற்றும் நித்தியத்திற்கு அடையாளமாக இருக்கின்றன. அவர் முடிவில்லாதவர் மற்றும் ஞானத்தின் மூலமானவர் என்பதைக் குறிக்கிறது.

சிவபெருமானை லிங்க வடிவத்திலும் வழிபடுகிறார்கள். அவர் ஏன் லிங்க வடிவத்தில் பூஜிக்கப்படுகிறார்? சிவன் என்றால் ஜீவன் அல்லது உயிர் என்று பொருளாகும். உயிரை அல்லது ஜீவனை எவ்வாறு விளக்கி கூற முடியும்? சிறு பிள்ளைகளுக்கு சூரியன் எப்படியிருக்கும் என்பதை விளக்கி கூற, ஒரு வட்டத்தை வரைந்து சிறு கோடுகளை வரைவோம். அது சூரியனா? இல்லை. அதைப்போலவே சிவபெருமான் எல்லா ஜீவராசிகளுக்கும் ஜீவனாக, உயிராக திகழ்கிறார் என்பதை காண்பிக்க மிக சிறந்த உதாரணம் லிங்கமாகும்.

சிவபெருமான்தான் இந்திய கர்நாடக இசையில் இரகசிய ராகங்களை மஹரிஷி நாரதருக்கு வெளிப்படுத்தி கூறினார். சிவபெருமான்தான் யோகாவின் கர்த்தாவாக விளங்குகிறார். அது சரீரம் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த உதவி செய்கின்றது. அவர் அணிந்திருக்கும் வஸ்திரம் இயற்கையானது. அவருக்கு பச்சை பால் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இயற்கையோடு இசைந்து வாழ வேண்டும் என்ற கருத்தை கூறுகிறது. சிவபெருமான் ரிஷிகளுக்கு ஆதரவாளராக, ரக்‌ஷகனாக இருந்தபோதிலும், அவர் திருமணம் செய்து பிள்ளைகளை பெற்றெடுக்கிறார். சம்சாரியாக இருந்தாலும் பற்றில்லாமல் வாழ வேண்டும் என்ற கருத்து புலப்படுகிறது. முரணான கருத்துக்களை கூறுபவராக சிவபெருமான் சித்தரிக்கப்படுகிறார்.

ஏனென்றால் அதுதான் நமக்கு தேவையானது. அவர் நம்மை தம்பால் ஈர்க்கிறார். அதன்பின்னர் அவர் நம்மை நடுநிலைமை வகிக்கும்படி செய்கிறார். கலைகளின் நாயகனாக திகழ்வதால் செல்வந்தர்கள் அவர்பால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் உண்மையான சிவபக்தர்களாக இருந்தால், பற்றில்லாதவர்களாகவும் எளிதில் உணர்ந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை சிவபெருமானிடம் கற்றுக்கொள்வார்கள்.

ஒரு சாதாரண மனிதன் சிவபெருமானிடம் வசீகரிக்கப்படுகிறான். ஏன்? ஏனென்றால் சிவபெருமான் அவனைப் போலவே நடந்துகொள்ளுகிறார். காலப்போக்கில் தானும் சாதிக்க முடியும் என்பதை சிவபெருமானிடம் கற்றுக்கொள்ளுகிறான். போதைப்பொருளை உண்பவர்களும், சிவபெருமானிடம் தஞ்சம் அடைகிறார்கள். அவன் உண்மையான பக்தனாக இருக்கும் பட்சத்தில் போதைப் பொருளில் கிடைக்கக் கூடிய போதையைப் பார்க்கிலும் சிவபெருமானுடன் ஒன்றர கலக்கும்போது, அதைவிட அதிகமான போதை கிடைக்கிறது என்பதை புரிந்துகொள்வார்கள். மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று சிவபெருமானின் உருவம் கூறுவதாக அமைந்துள்ளது.

சிவன் இல்லையென்றால் சக்தியில்லை. சிவன் என்றால் என்ன? சக்தி என்றால் என்ன? என்பதை பற்றி ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார். ‘சக்தி’ என்பது பெண்பாலாகிய இறைவனின் பக்தர்களை குறிக்காது. ‘சக்தி’ என்பது பரமபுருஷரின் ஆன்மாவாகும். பரமபுருஷருக்கு கீழ்ப்படிந்து பிரம்ம வேள்வி அல்லது ஆதிவேள்வியில் பங்கெடுத்தவர்களுக்கு ‘சக்தி’எனப்படுகிற அவருடைய ஆன்மா அருளப்படுகிறது. காணப்பட முடியாத ஆன்மா பரமபுருஷருக்குள் இருக்கிறது. அவருடைய சுயமே ‘சக்தி’ என்று அழைக்கப்படுகிறது. அவரால் நேசிக்கப்படுபவர்களுக்கு ‘சக்தி’ அருளப்படுகிறது. ஏனென்றால் பரமபுருஷருடைய ஆன்மா அவர்களை தமக்கு கீழ்ப்படியும்படி செய்யும்.

முற்காலத்தில் பெண்கள் எவ்வாறு கணவனுக்கு கண்மூடித்தனமாக கீழ்ப்படிந்தார்களோ அவ்வாறு பரமபுருஷருக்கு கீழ்ப்படியும்படி செய்யும். தாமாகவே பரமபுருஷருக்கு கீழ்ப்படிவதாலும், முற்றிலும் அவருக்கு சரணடைவதாலும் ‘சக்தி’ பெண்பாலாக சித்தரிக்கப்படுகிறது. சக்தி உருவம் ஒரு ஆண் சவத்தின்மேல் நிற்பதாக சிலை வடிக்கப்பட்டுள்ளது. சிவன் எப்பொழுது சவமானார்? வேதங்களில் கூறப்பட்டுள்ள பரமபுருஷர்தான் சிருஷ்டி கர்த்தர் ஆவார், அல்லது நாராயணர் என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் நர உருவில் இருக்கிறார். அப்போது ஆதிவேள்வி அல்லது பிரம்ம வேள்வியில் அவர் தாமாகவே தம் உயிரை நீத்தார். அவரிடமிருந்து வெளியே வந்த ஆன்மாதான் சக்தி எனப்படுகிறது. ஆகவே அவர் ஆதிவேள்வி அல்லது பிரம்ம வேள்வி செய்தபோது, சக்தி அல்லது அவரது ஆன்மா வெளியே வந்தது என்பதை அச்சிலை கூறுகிறது. பிற்காலத்தில் சக்தி இன்றி சிவன் இல்லை என்று தவறான வாக்கு உண்டானது.

விஷ்ணு புராணம் 5-வது காண்டம் 1-ம் அத்தியாயத்தில் வேத வியாசரின் தந்தையான பரஸ்ஹர மஹரிஷி கலியுகத்தில் காளியும் மற்ற தெய்வங்களும் வணங்கப் படுவார்கள். சிருஷ்டி கர்த்தாவான விஷ்ணுவை மறந்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார். பரமபுருஷர் இல்லையென்றால் நாம் இல்லை என்பதைத்தான் சிவனின்றி சக்தியில்லை என்று கூறப்பட்டது. ‘அவனின்றி ஒரு அணுவும் அசையாது’, பரமபுருஷரை புறக்கணிப்பது மரணமாகும். ஜீவன் பரமபுருஷரில்தான் இருக்கிறது என்பதே சத்தியமாகும்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்