தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு » ஜூலை 2019

ஜூலை 2019

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்.

மனுஜோதியை படித்து, நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உங்கள் கடிதங்கள் மூலமாக கிடைக்கப் பெறுகிறோம். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவ மாணவியர்களுக்கான கோடைகால விடுமுறை முகாம்  மே மாதம் 5-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்திலும், மே மாதம் 3-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், ஆந்திர மாநிலம் அசரடா பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவியர் அனைவரும் மனுஜோதி ஆசிரமத்தின் சட்டதிட்டங்களையும், வேதங்களையும், ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளையும், கடவுள் ஒருவரே என்ற சத்தியத்தையும் கற்றுச் சென்றனர். மேலும் பல மாணவ மாணவியர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள்.

மனிதன் தன் எல்லையை விட்டு சந்திரனுக்குச் சென்றபோது, இறைவன் தான் பூமியில் இருக்கிறேன் என்று நிரூபித்தார். இறைவன் விஸ்வரூபத்தை காண்பித்த நாளை கல்கி ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு பொன்விழாவாக கொண்டாடப்படவிருக்கிறது. ஒரு மனிதன் சந்திரனுக்குச் சென்றான் என்றால், வைகுண்ட லோகத்தை சேர்ந்த ஒருவனாலும்கூட பூமிக்கு வந்துவிட்டு வைகுண்ட லோகம் செல்ல முடியும் என்பதற்கு அது ஒரு உதாரணமாக உள்ளது. அவனின்றி அணுவும் அசையாதுஎன்பதின் அடிப்படையில் இறைவன் நினைத்தால் மனிதன் சந்திரனுக்கு செல்லாமல் தடுத்திருக்கலாம். ஆனால் இறைவன் அவ்வாறு செய்யவில்லை. ஏன்? ஏனெனில் மனிதனுக்கு சுயாதீனம் அல்லது சுதந்திரம் அல்லது தெரிந்தெடுக்கும் உரிமையை அளித்திருக்கிறார். இறைவன் மனிதர்கள் எல்லாருக்கும் சுயாதீனத்தை கொடுத்திருக்கிறார். சுயாதீனம் இல்லாமல் மனிதன் ஒரு இயந்திரத்தைப்போல இருப்பான். இறைவன் ஒரு சர்வாதிகாரியாக திகழ்ந்திருப்பார். மானுடர்கள், அவரின் பிள்ளைகள், வேலைக்காரர்கள் அல்ல. பிள்ளைகள் தந்தையிடம் அன்புகூருவதுபோல மனிதர்கள் தாமாகவே அவர்மேல் அன்பு செலுத்த வேண்டும். கட்டாயத்தினால் அன்பு செலுத்தக்கூடாது என்று இறைவன் விரும்பியதால் மனிதர்களுக்கு சுயாதீனத்தை வழங்கினார்.

ஆதியில் இறைவன் உயிர்களை சிருஷ்டித்தபோது, மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள் போன்ற எந்த உயிரினங்களுக்கும் சுயாதீனத்தை கொடுக்கவில்லை. யானையிடம் நீ புல்லைத்தான் உண்ண வேண்டும் என்றார், குதிரையிடமும் அவ்வாறே கூறினார். அவைகள் சலிக்காமல் புல்லை மாத்திரமே தீவனமாக ஏற்றுக்கொண்டன. ஆனால் மனிதனுக்கு தன் உணவை தேர்ந்தெடுக்கும் சுயாதீனத்தை வழங்கியுள்ளார். ஒருநாள் ஆப்பிள் பழம் வேண்டும் என்கிறான், ஒருநாள் இனிப்பு வகைகளை உண்கிறான். இவ்வாறாக வெவ்வேறு ருசிகளை மனிதன் கேட்கிறான். ஒருநாள் சினிமா பார்க்க செல்கிறான். ஏன்? ஏனெனில் மனிதனுக்கு சுயாதீனம் இருக்கிறது. அதினால் அவன் எதை வேண்டுமானாலும் சாப்பிட்டு பல நோய்களுக்கு உட்படுகிறான். அதினால்தான் இறைவன் மிருகங்களையும், பறவைகளையும் கவனிக்கும்படி கூறினார். அன்னப் பறவையைப்பற்றி உவமையாக நாலடியாரில் கூறப்பட்டுள்ளது.

கல்வி கரைஇல கற்பவர் நாள் சில

மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்

ஆராய்ந்(து) அமைவுடைய கற்பவே நீர்ஒழியப்

பால்உண் குருகின் தெரிந்து”                   – நாலடியார் (135) சமண முனிவர்கள்

கற்க வேண்டியவை அளவற்றவை, ஆனால் கற்பவரின் வாழ்நாளோ குறைந்தவை. சற்று எண்ணிப்பார்த்தால் அந்த குறைந்த வாழ்நாளிலும் நம்மைத் துன்புறுத்தும் நோய்நொடிகள் ஏராளம். ஆகையால் தண்ணீர் கலந்த பாலில், பாலை மாத்திரம் தனித்து பருகும் அன்னப் பறவைப்போல் தெளிந்து தேர்ந்தெடுத்த நல்லவற்றையே கற்க வேண்டும்.

தண்ணீரும் பாலும், நல்லதும், கெட்டதும் கலவையாக இருந்தாலும் அன்னப் பறவை பாலை தேர்ந்தெடுப்பதுபோல மனிதனும் நல்லவற்றையே கற்க வேண்டும். கெட்டதை தேர்ந்தெடுக்கவும் அவனுக்கு உரிமையிருக்கிறது. இதுதான் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட வரமாகும். இந்த வரத்தை வைத்துக்கொண்டு அவன் நல்லதை தேர்வு செய்கிறானா அல்லது கெட்டதை தேர்வு செய்கிறானா என்று இறைவன் பார்க்கிறார். தேர்ந்தெடுப்பதே மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட சவாலாகும். 

ஒரு தொழிற்சாலையில் தொலைக்காட்சி பெட்டிகள் உற்பத்தி செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். விற்பனைக்கு செல்வதற்கு முன்பாக அவை சரியாக வேலை செய்கிறதா என்று சோதிக்கப்படுகிறது. அதின்பின்னர் சோதிக்கப்பட்டதுஎன்ற முத்திரை பெற்ற தொலைக்காட்சி பெட்டிகள் விற்பனைக்கு செல்கின்றன. அதைப் போலவே இறைவன் மனிதர்களை படைத்து அவர்கள் சரியாக இயங்குகிறார்களா? என்று சோதித்து பார்க்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட இந்த உலகம்தான் சோதனை கூடமாகும். இங்கே நன்மையும், தீமையும் கலந்துதான் இருக்கும். சிலர் நன்மையையும், சிலர் தீமையையும் தேர்வு செய்கிறார்கள். சிலர் இறைவனை ஏற்றுக்கொள்கிறார்கள், சிலர் அவனை புறக்கணிக்கிறார்கள்.

இப்படி மனிதனுக்கு தேர்வு செய்யும் சுதந்திரத்தை வழங்கியது இறைவனுடைய பெருந்தன்மை அல்லது தயாள குணமாகும். எனினும் தேர்வு செய்வதை விட சால சிறந்த வழி ஒன்று இருக்கிறது. சர்க்கரையும், உப்பும் கலந்து வைக்கப்பட்ட மூட்டைக்குள் எறும்பு புகுந்தால் அது உப்பை தவிர்த்து விட்டு, சர்க்கரையை மாத்திரம் எடுத்துக்கொள்ளும். இதுவே எறும்பின் வாழ்க்கை முறை மட்டுமன்று, அது தெய்வீகத் தன்மையின் ஒரு அம்சமாகும். இயற்கையின் மூலமாக மனிதர்களுக்கு  இறைவன் கற்றுக்கொடுக்கும் பாடம் இதுவாகும். இப்படி ஏராளமான உதாரணங்கள் இயற்கையில் இருக்கின்றது. அதாவது மனிதன் தன் சுயாதீனத்தை அல்லது தேர்வு செய்யும் ஆற்றலை தனதாக்கிக்கொள்ளாமல் இறைவன் மனிதனுக்கு விதித்தது எது என்று கண்டுகொள்ள வேண்டும். அதாவது தெரிந்தெடுக்கும் உரிமையை இறைவனிடமே திருப்பி கொடுத்து விட்டால், இறைவன் மனிதனுக்கு விதித்ததை எளிதாக கண்டுகொள்ளலாம். இதையே ஞானிகள் சரணாகதிஎன்று கூறினர். தானாக தேர்வு செய்வதை விட்டு விட்டு இறைவா நீ எனக்காக தேர்வு செய் என்று மனமார நாம் கூறும்போது தேர்வு செய்யும் செயலை இறைவன் செய்கிறார். நமக்காக ஏற்படுத்தி வைத்ததை இறைவன் காண்பிக்கிறார். இப்படிப்பட்ட நிலையை அடைந்த ஒருவனுக்கு ஞானம் பிறந்து விடுகிறது. இறைவனுடைய ஆசையின்படி, சித்தத்தின்படி நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்போது, நாம் தானாகவே அவரிடமே திரும்ப சென்று விடுகிறோம். தெரிந்துகொள்ளும் உரிமையை இறைவனிடம் அர்ப்பணிப்போம். சம்சார சாகரத்திலிருந்து மீளுவோம்.

உலகத் தமிழ் வாசகர்களுக்காக www.manujothi.com என்ற இணையதளத்திலும் மனுஜோதி இதழை வெளியிட்டு வருகிறோம். இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்.

வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

ஆசிரியர்

———✡✡✡✡✡✡———-

Filed under: ஆசிரியர் குறிப்பு