தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » சிந்தை மாற்றம்

சிந்தை மாற்றம்

நம்முடைய சிந்தைதான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது!

நம்முடைய சிந்தைதான் நமக்கு பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது. இறைவனின் மக்கள் இதிலிருந்து எவ்வாறு விடுதலை பெற வேண்டும் என்பதை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விளக்கிக் கூறுகிறார்: “ஒரு பெண் திடீரென்று ஒரு பல்லியை விழுங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டாள். ஆகவே அவள் தனது வயிற்றின் வெவ்வேறு பாகங்களைக் காட்டி “பல்லி இங்கு வந்துவிட்டது, இங்கு வந்துவிட்டது” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். “இல்லை சகோதரனே, நான் ஒரு பல்லியை விழுங்கிவிட்டேன். அது அங்குதான் இருக்கிறது” என்று மறுபடியும் மறுபடியுமாக கூறிக்கொண்டே இருந்தாள். இதை நினைத்தே அவள் மிகவும் சுகவீனமாகி விட்டாள்.

டாக்டர் அந்த பெண்ணை பரிசோதித்து விட்டு, “நான் ஒரு ஊசி போடுவேன், பல்லி வெளியே வந்துவிடும்” என அவர் கூறினார். அவளும் ‘சரி ஐயா’ என்றாள். அவர் அவளுக்கு ஒரு தூக்க மாத்திரையைக் கொடுத்தார். “நீ தூங்கி எழுந்த பிறகு, அந்த பல்லியானது வெளியே வந்து விடும்” என்று அவர் கூறினார். அவள் தூங்கிய பிறகு அவர் ஒரு பல்லியை அடித்து, தலையணைக்கு அருகே வைத்தார். அவள் தூங்கி எழுந்தபோது, “பல்லி நிச்சயமாக வெளியே வந்திருக்க வேண்டும், நான் போட்டுக்கொண்ட ஊசியினிமித்தம், உண்மையாகவே பல்லி வெளியே வந்திருக்க வேண்டும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். அது வெளியே வந்து, அது அங்கு இருக்கக் கண்டாள். பல்லி வெளியே வந்துவிட்டது என்ற சிந்தை அவளுக்கு வந்த அந்த நாளிலிருந்து அவள் சரியாகி விட்டாள். எனவே நம்முடைய சிந்தனைதான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது.

அதேபோல ஒரு வயோதிக மனிதனைப் பார்த்தேன். அவன் கடந்த ஆண்டில் ஒரு இளைஞனைப்போல நல்ல ஆரோக்கியமாக இருந்தான். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இப்போது அவன் வயோதிகனைப்போல, தலை நரைத்து காணப்பட்டான். அப்போது நான் அவனிடம், “நீ ஏன் இந்தவிதமாக மாறிவிட்டாய்?” என்று கேட்டேன். “இனிமேல் நான் மரிக்க வேண்டாமா? ஓய்வுபெற்ற ஜீவியம்” என்று கூறினான். அப்போது நான் அவனிடம், “இந்தவிதமாக நீ நினைத்துக்கொண்டேயிருப்பாய் என்றால், நீ சீக்கிரமாய் மரித்துவிடுவாய் மனிதனே” என்று கூறினேன். அதன்பிறகு அவனுக்கு ஓர் அறிவுரையை கொடுத்தேன். ஒரு வினாடியில் அவன் மீண்டும் இளைஞன் ஆகிவிட்டான்.

“நீ உன்னை வயோதிகன் என்று நினைக்காதே” “உன்னுடைய வயது என்ன?” என்று அவனிடம் கேட்டேன். “அறுபது வயதாகிவிட்டது அய்யா, சுடுகாடு வா, வா என்று என்னை அழைக்கிறது. வீடு போ, போ என்று சொல்லுகிறது என்று அவன் கூறினான். அதற்கு நான், “எனக்கு 65 வயதாகிறது, நான் உன்னைவிட மூத்தவன்” என்று கூறினேன். “நீங்கள் ஒரு வயோதிகனைப் போல தோற்றம் அளிக்கவில்லை, நீங்கள் ஒரு ரோலரைப் போல (Roller -சுழல் ஊர்தி) இருக்கிறீர்கள்” என்று அவன் கூறினான். “உனக்கு அறுபது வயதுதானே ஆகிறது, அதற்குள் நான் வயோதிகனாகி விட்டேன் என்று எப்படி கூறுகிறாய்? என்றேன். அப்பொழுது அவனுடைய சிந்தையானது மாறியது. இறைவனுடைய சிந்தைக்கு நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் நீங்கள் வாழ்ந்தாலும், நான் அவருக்குள் இருக்கிறேன் என்ற சிந்தை உங்களுக்கு இருக்குமாயின், வித்தியாசமான மனிதனாக உணர்ந்துகொள்வீர்கள்.”

எனவே உங்களுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் முக்கியமானவர்கள் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். தாழ்மையாக இருங்கள்; அப்பொழுது இறைவன் உங்கள் மனக்கண்களைத் திறப்பார். நம்முடைய புரிந்துகொள்ளும் தன்மையையும் திறக்கின்றார்.

✡✡✡

 

கோபம் கொடிய விஷம் போன்றது, அதை தேனில் கலந்து பரிமாறினாலும் அதின் விஷத்தன்மை போய்விடுமா? விஷமானது தேனில் கலந்து கொடுக்கப்பட்டாலும் உயிரை மாய்க்கும்.

– ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்