தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » சித்தர்கள் எதிர்பார்ப்பு

சித்தர்கள் எதிர்பார்ப்பு

மனிதன் வளமாகவும், நலமாகவும், சந்தோஷமாக வாழவும் அத்துடன் இம்மானிட தேகத்திலிருந்து விடுபட்டு இறைவனுடன் ஒன்றர கலந்து நித்திய நித்தியமாக வாழ வேண்டும் என்று சித்தர்கள் எதிர்பார்க்கின்றனர். அதை தங்கள் பாடல்களின் வாயிலாக எழுதியும் நமக்கு கொடுத்துள்ளனர். அதையே நாம் “சித்தர்களின் எதிர்பார்ப்பு” என்ற தலையங்கத்தில் கூறி வருகிறோம். இது குறித்த கருத்துக்களை அநேகர் கடிதங்கள் மூலம் தெரிவித்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
சித்தர்களின் எதிர்பார்ப்பு என்ற இந்த மனுஜோதி இதழில் நாம் பார்க்க இருப்பது 131-ம் பாடலாகும்.
“சாவதான தத்துவச் சடங்குசெய்யு மூமைகாள்
தேவர்கல்லு மாவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்”
இன்றைய உலகில் மனிதன் தன்னைப் பாதுகாத்து கொள்ள அநேக வழிகளை கையாள்வதை காணலாம். இள வயதில் தன் உடல் வலிமையை நம்பி, சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை, ஜூடோ போன்ற கலைகளை கற்று அதுதான் தன்னை பாதுகாக்க முடியும் என்று நினைக்கிறான். தன் இளமை நாட்கள் போன பின் வேறு வழிகளை தேடுகிறான். அப்போது மத சடங்காச்சாரங்களில் ஈடுபட்டு, அதிலும் திருப்தி இல்லாமலேயே மடிகிறான்.
இதனைக்கண்ட சிவவாக்கியர் “சாவதான தத்துவங்கள்” ஒன்றுக்கும் உதவாத தத்துவ சடங்குகள் செய்து செத்தும் போகும் உண்மையை உணராத ஊமை மனிதர்களே! என்று சாடுகிறார். அதேசமயம் மானிடர்க்கு சரியான வழியை காண்பிக்கும் வண்ணமாக,
“மூவராலு மறியொணாத முக்கணன்மு தற்கொழுந்து
காவலாக வும்முளே கலந்திருப்பன் காணுமே!” என்று கூறுகிறார்.
அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றிலும் அறிய முடியாத இறைவன் நமக்குள் இருப்பதை காண வேண்டுமென அறிவுறுத்துவதை காண்கிறோம். இதை அறிவுறுத்தவே இறைவன் மனிதனுக்கான எல்லாவற்றையும், ஆதியிலேயே படைத்து வைத்தார். பகவத்கீதை 3:1: “ஆதியில் பிரம்மா யஜ்ஞங்களுடன் மனிதர்களைச் சிருஷ்டித்து கூறினார்: இதனால் வளர்ச்சியடைவீர்கள், இது உங்களுக்கு விரும்பியதை அளிக்கும் காமதேனுவாக இருக்கட்டும்” என்று கூறியுள்ளது. இதற்கான சரியான விளக்கத்தை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கூறுகிறார். அழியாத யோகம் அல்லது ஆதிபலி என்பது நிச்சயமாக நடந்த ஒரு சம்பவமாகும். வேதங்களிலும், பவிஷ்ய புராணத்திலும், விவிலியத்திலும், மற்ற வேதங்களிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத்தின் சிருஷ்டிப்பின் சமயத்தில் தேவலோக மக்களின் நலனுக்காக ஸ்ரீமந் நாராயணர் ஒரு வேள்வியை நடத்தினார் என்று வேதங்களில் எழுதப்பட்டுள்ளது. அதை அவர் எப்படி நடத்தினார், ஏன், என்ன காரணத்திற்காக அவர் அதை நடத்தினார்? இப்படிப்பட்ட எல்லா இரகசியங்களும் மறைக்கப்பட்டுள்ளது. பிரம்ம யஜ்ஞம், ஆதிபலி, அழிவற்ற யோகம் நடத்தப்பட்டபோது, அவருடைய பரிசுத்த ஆவி அல்லது ஸ்ரீமந் நாராயணரின் ஜீவ-ஆத்மா அவருக்கு கீழ்ப்படிகின்ற மக்களை ஆட்கொண்டது. இதை இன்றளவும் மக்கள் உணராமல் இருக்கிறார்கள்.
ஸ்ரீமந் நாராயணரால் நிகழ்த்தப்பட்ட பலியானது அநேக பெயர்களால் அழைக்கப்படுகிறது்
1. பிரம்ம யஜ்ஞம் – ஸ்ரீமத் பகவத் கீதை
2. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி – பரிசுத்த விவிலியம்
3. நாராயணரின் வேள்வி – அகிலத்திரட்டு அம்மானை
4. விசுவாசம் – புதிய ஏற்பாடு – விவிலியம்
5. இறைவனுடைய ஞானம் – பழைய ஏற்பாடு – விவிலியம்
6. அன்னம் – ஸ்ரீமத் பகவத் கீதை
7. உன்னதபலி – பரிசுத்த குர்-ஆன்
இந்துக்கள் திருமணங்கள் மற்றும் முக்கியமான மதசடங்குகளை நிகழ்த்தும்பொழுது, அவர்கள் ஓமகுண்டம் வளர்த்து அதனுள் நெய்யை ஊற்றுவார்கள். புரோகிதர்கள் 33 கோடி தேவர்களை அல்லது தெய்வங்களை அழைத்து யஜ்ஞத்தின் தீயை மூட்டுவார்கள்.
இந்த பலி அல்லது யஜ்ஞத்தினுடைய காரணம் பொதுமக்களுக்கு தெரியாது. சில மக்கள் இந்த பலியைக் குறித்த சத்தியத்தை மறைத்தார்கள். அதன்மூலமாக ஜனங்கள் இந்த இரகசியத்தை புரிந்து கொள்ளாதபடிக்கும், பிசாசு அல்லது கலியன் என்பவன் இருப்பதை மறைப்பதற்கும் இவ்வாறு செய்தார்கள்.
பரிசுத்த விவிலியத்தில் “உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி” என்று இந்த இரகசியமானது முத்திரிக்கப்பட்டுள்ளது. இயேசு சிலுவையில் மரித்து அவர்களுடைய கர்ம பாவத்தை எல்லாவற்றையும் நீக்கினார் என்ற உபதேசத்தை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். பிரம்ம யஜ்ஞத்தை அல்லது ஆதிபலியை ஜனங்கள் மறந்தபொழுது அந்த அழிவற்ற யோகத்தை அல்லது பிரம்ம யஜ்ஞத்தை நினைவுபடுத்துவதற்காக இறைவன் தீர்க்கதரிசிகளையும், அவதாரங்களையும் எழுப்பினார்.
இந்த பிரம்ம யஜ்ஞத்தின் இரகசியத்தை கொண்டு வருவதற்காக பக்ரி-ஈத் என்ற பண்டிகையை துவக்க தீர்க்கதரிசியாகிய முகம்மது எழுப்பப்பட்டார். அதாவது ஆதிபலிக்கு அடையாளமாக ஒரு ஆட்டுக்குட்டியை பலி செலுத்துவதன் மூலம், ஸ்ரீமந் நாராயணருடைய ஆன்மாவை எவரும் தொட முடியும்.
தம்முடைய மக்களாகிய தேவலோக மக்களுக்கு தம்முடைய வல்லமையை காண்பிப்பதற்காக அல்லது நிரூபிப்பதற்காக, ஸ்ரீமந் நாராயணர் அழிவற்ற யோகம், அல்லது ஆதிபலியை நடத்தினார். அவருக்கு அழிவு அல்லது மரணம் என்பது இல்லை. பிரம்ம யஜ்ஞம் நடத்தப்பட்டபொழுது, இறைவனுடைய பிள்ளைகள் ஸ்ரீமந் நாராயணருடைய வல்லமையை, அமிர்தத்தை ஒரு வரமாக பெற்றார்கள். அது ஜீவன் முக்தி அல்லது நித்திய ஜீவன் என்று அழைக்கப்படுகிறது.
இதைத்தான் சிவவாக்கியர்:
“மூவராலு மறியொணாத முக்கணன்மு தற்கொழுந்து
காவலாக வும்முளே கலந்திருப்பன் காணுமே!” என்றார்.
ஆக, சிவவாக்கியர் கூறியபடி சாவதான தத்துவ சடங்கு செய்வதை விட்டுவிட்டு இறைவனின் அருட்கொடையாம் ஜீவ ஆத்துமா நம்முள் இருப்பதை அறிந்து அதன் வழிநடத்துதலை கண்டு நடப்போமாக! – தொடரும்….
– கு. இரவிக்குமார், இறைதொண்டர், சேலம்

Filed under: ஆன்மீக கட்டுரைகள்