தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள் » சாலையில் கிடைத்த ஞானம்

சாலையில் கிடைத்த ஞானம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய!

இறையே அபயம்! யாவும் இறையின் உபயம்!

ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ஜீவனுள்ளும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சுடர் நான்!

பிரம்ம தேசத்தின் மாமன்னர் தன் பரிவாரங்களுடன் நைமிசாரணத்திற்கு வந்து சேர்ந்தார். நைமிசாரண்யத்து ரிஷிகள் மகிழ்ச்சியோடு பேரரசனை வரவேற்று உபசரித்தார்கள். பிரம்ம தேசம் ஆர்யவர்த்தத்தின் பெரும் பகுதியை தன்னகத்தே கொண்ட நாடு. மிகவும் வளமான தேசமாகும். நைமிசாரண்யம் தவ ரிஷிகளும், ஞானிகளும் நிறைந்த வனப்பு மிக்க வனப்பிரதேசமாகும். ஆசிரமங்கள் அநேகம் அங்கேயிருந்தன.

மாமன்னர் மகரிஷிகளின் சபையைக் கூட்டினார். அவருக்கு வெகுநாட்களாகவே ஓர் ஆசை இருந்தது. ஆத்ம அறிவு பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அவர் எத்தனையோ நூல்கள் படித்தார். பல பண்டிதர்களிடம் பயின்றார். அப்படியும் அறிவு தெளிவு ஏற்படவில்லை. சபை கூடியதும் மகரிஷிகளே, ஆத்மா என்பது என்ன? அதின் தத்துவம் என்ன? எனக்கு அறிவூட்ட வேண்டுகிறேன் என்று பேரரசர் வேண்டிக்கொண்டார். மகரிஷிகள் தாங்கள் கற்றதையும், ஆராய்ந்ததையும் வைத்துக்கொண்டு பலபடியாக விளக்கிக் கூறினார்கள். ஆனாலும் விளக்கம் தான் ஏற்படவில்லை. அவர்களுக்கே தம் திறமை குறைவைப்பற்றி நாணம் ஏற்பட்டது. மன்னர் நிராசையுடன் திரும்பினார். நடுவழியில் இருபாதைகள் பிரியும் இடத்தில் மன்னருடைய மணிரதம் சற்று நின்றது. சாரதி அரசரிடம் ஏதோ மெதுவாக கூறினான். அரசர் எட்டி வெளியே பார்த்தார்.

சாலையை மறித்தாற்போல் அங்கமெல்லாம் கோணல்மாணலாக குள்ளமாய், விகாரமாய், ஒரு மனித உருவம் மரத்தடியில் படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்தது. அதைத் தாண்டிச் செல்ல முடியாமல் குதிரைகள் நின்று விட்டன. சாரதி இறங்கி வந்தான். குள்ளனிடம் நெருங்கி அவனை வழிவிட்டு அப்பால் நகர்ந்து போகும்படி கூறினான். அரசரின் ஆணை இது என்றான் மிடுக்காக சாரதி. அதைப் பார்த்து சிரித்தான் குள்ளன். பிறகு உன் மன்னரை இங்கே வரச்சொல்லு, நீ போ என்றான். அவன் வழியைவிட்டு விலகவில்லை, சாரதி வந்து குள்ளன் கூறியதை மன்னரிடம் சொன்னான். இதைக்கேட்ட மாமன்னருக்கு ஆத்திரம் வந்தது. ரதத்தை அந்த குரூபியின் அருகில் கொண்டு போய் நிறுத்தச் சொன்னார். ரதம் அருகில் வந்ததும் படுத்திருந்த குள்ளன் கூறினான்: அரசனே, நான் மிகவும் களைப்படைந்திருக்கிறேன். என்னால் விரைவாக நடக்க முடியாது. நான் இங்கே இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேறு வழியாக போகலாமே என்றான்.

குரூபி சொன்னதும் மாமன்னருக்கு ஆத்திரம் வந்தது. இந்த குரூபி பிண்டத்தை அப்பால் கொண்டு போய் போடு என்று கத்தினார். அரசனுடன் வந்த ஏவலாளர்கள் குள்ளனை நோக்கி வந்தார்கள். ஆனால் அவர்களும் அந்த குள்ளன் உருவத்தைக் கண்டதும் அடங்கி நின்றுவிட்டார்கள். குள்ளன் உதட்டில் புன்னகை அரும்பிற்று, அவன் அரசரே!, கஜ, துரக, பதாதி என்கிற நால்வகைச் சேனைகளையுடையவர் நீங்கள். அப்பேர்ப்பட்டவர்க்கு இந்த எளியவனை அப்புறப்படுத்துவதிலா பெருமை வந்துவிடும். அதோ வேறு ஒரு வழியொன்றும் இருக்கிறதே, அந்தப் பாதையில் செல்லுங்களேன் என்றான். பேரரசருக்கு மிகவும் ஆத்திரம் அதிகரித்தது. முடியாது, இந்த வழியாகத்தான் செல்வேன் என்றார். இந்த வழியாகப் போனால் உங்களுக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது என்றான் குரூபி. எந்த லாபமும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இருந்தாலும் இந்த வழியில்தான் நான் போகப்போகிறேன் என்று வெறிச்செருக்கில் கர்ஜித்தார் அரசர். குள்ளன் மிகவும் அடக்கமாக அதேசமயம் மிக அழுத்தமாக சொன்னான். எந்த வழியில் போனால் ஒரு லாபமும் இல்லையோ, அந்த வழியில் தெரிந்தே போவது மதியீனமில்லையா அரசே, எதற்கு இந்த வீண் பிடிவாதம் என்றான். பேரரசர் சற்று சிந்திக்கத் தொடங்கினார்.

குரூபியின் முகப்பொலிவும் அவன் பேச்சில் தொனிக்கும் கருத்துச் செறிவும் அவரைத் திகைக்க வைத்தன. நீ என்ன கூறுகிறாய்? என்று கேட்டார் மன்னர். கண்ணை மூடிக்கொண்டு செல்பவருக்கு வழியில் ஏதும் புலப்படவில்லையென்றால் அதற்கு நைமிசாரண்யத்து முனிவர்களும், ஞானிகளும் என்ன வழிகாட்டிவிட முடியும்? மன்னர் அதிர்ந்து போனார். குரூபி குள்ளனை ஆதரவோடு பார்க்கத் தொடங்கினார். அவமதிப்பு விலகி மதிப்புணர்வு தலையெடுத்தது. ரதத்திலிருந்து இறங்கி வந்தார். சுவாமி! தாங்கள் யார்? ஏதோ அறியாமையால் செய்து விட்டேன் என்றார். அதற்கு அந்த குள்ளன் இந்த குரூபியை தெரிந்துகொண்டு உங்களுக்கு என்ன லாபம்? ஆனால் லாபமில்லாத காரியத்திலே தான் உங்களுக்கு நாட்டம் அதிகமாயிற்றே என்றான். என் பெயர் அஷ்டவக்கிரன் (எண் கோணல் உடைய உரு) என்றான். அதிர்ந்தார் அரசர். பிரம்ம தேசத்தின் பேரரசர் இதுவரை வெறுத்து வந்த குரூபி குள்ளரின் பாதங்களில் தலைசாய்த்து வணங்கினார்.

மகாத்மாவே! என்னை மன்னித்தருள வேண்டுமென்று புலம்பினார். கல்விக் கடலான உத்தாலகரின் பெண் வயிற்றுப் பேரனா நீங்கள்! மகாஞானியாகிய கஹோடரின் தவப்புதல்வரா தாங்கள்! சுவாமி நான் உங்களுடைய அபார மேதையைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களை தரிசித்ததில்லை. அதனால்தான் இந்த தவறு நேர்ந்தது. மன்னித்தருள வேண்டுமென்று கெஞ்சினார் மன்னர். அஷ்டவக்கிரர் கூறினார்: பேரரசரே! இதுதான் ஆத்ம ஞானம். உங்கள் கலக்கம் நீங்கி, அறிவு ஏற்பட்டு விட்டது. ஒவ்வொரு கணமும் ஜீவனுக்குள் இந்த சுய அறிவு ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பாவம்! காண்பதை ஆன்மாவோடு ஒப்பிட்டுப் பார்க்கும் கவனத்தை பெரும்பாலானவர்கள் கைவிட்டு விடுகிறார்கள். நீங்கள் பார்ப்பதும் உங்களுக்கு அறிவூட்டுகிறது. அந்த அறிவுதான் அனுபவம் மூலமாக நித்திய தத்துவத்தை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. கண்ணால் அறிவு பெறுங்கள். அறிவால் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அவைமூலம் உள்ளுணர்வைத் தூண்டி விடுங்கள். அந்த உள்ளுணர்வே பல அரிய உண்மைகளை விளக்கும் கருவூலமாகிடும். பேரரசர் பரிபூர்ண திருப்தியுடன் அஷ்டவக்கிரரை வணங்கி விட்டு புது வழியை நோக்கிப் புறப்பட்டார். நேரிய அறிவுப் பாதை அது!

குறிப்பு: 1. தாயின் கர்ப்பத்தில் இருந்தபோது தந்தை சொன்ன மந்திரங்களின் பிழையால் அவருக்கு எட்டுக்கோணமுள்ள (அஷ்டவக்கிரர்) உருவம் ஏற்பட்டது. மந்திரங்களை பிழைபட உச்சரித்தல், கேட்டல் ஆகாது. விளைவு விபரிதமாகும்.

2. தாயின் கர்ப்பத்தில் இருந்தபோது ஸ்ரீமந் நாராயண மந்திரத்தை நாரதர் சொல்லக்கேட்டு (எட்டெழுத்து மந்திரம்) மனனம் செய்த பிரஹலாதன் இறை அடியார்களின் தலை சிறந்தவன்.

கண்டு எடுத்தோன், சத்திய நகரக்குடிமகன்,

தேவகவிசுவாமிஜிஅன்பிற்கரசு

வான் மறையாக ()ரும்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கதைகள்