தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » சாந்தியளிக்கும் ஆன்மீகம் – 3

சாந்தியளிக்கும் ஆன்மீகம் – 3

இந்துக்கள் எல்லாருமே விக்கிரக ஆராதனைக்காரர்கள், நாங்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் அல்ல என்று இன்றைக்கு அநேகர் வெறுமனே கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் இந்து மதத்தை சரியாக அறிந்திருக்கவில்லை. இந்துக்கள் தத்துவத்தை வணங்குகிறார்கள்.

இன்றைக்கு நாம் அநேக போலியான மதங்களை காண்கிறோம். மேலும் அவர்கள் பணம் சேகரித்து நன்கு வளமுடன் வாழ எத்தனிக்கிறார்கள். ஆனால் நாங்கள் பணத்துக்காக வரவில்லை. உங்களுக்கு சத்தியத்தை கூற விரும்புகிறோம். நீங்கள் சத்தியத்தை நம்பினால், வருங்காலத்தில் இந்தியா ஒரு பலமிக்க நாடாக இருக்கும். இந்தியாவை ஒரு பலம்மிக்க தேசமாக ஆக்க கடவுள் என்னை எழுப்பியுள்ளார் என்று நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன். இன்றைக்கு எல்லா ஜனங்களும் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய மாநிலமே தலைசிறந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடவுள் அதைச் செய்ய வில்லை. ஒவ்வொரு தேசமும் மற்றொரு தேசத்தின்மீது சார்ந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உணவு பொருட்களை இறைவன் வைத்திருக்கிறார். அந்த தேசம் சிறந்தது, இந்த தேசம் சிறந்தது என்று நாம் கூற முடியாது. ஆனால் நமக்கு ஒரு கடமை உண்டு. நாம் இறைவனுக்கென்று ஒரு ஐக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும். மேலும் கடவுள் திட்டமாக அதை நிறைவேற்றுவார்.

உங்களைப் படைத்த கடவுளின்கீழ் ஐக்கிய இந்தியா உருவாகும் என்று நீங்கள் நம்பினால், உங்களுடைய மதத்தையும், மாநிலத்தையும் நீங்கள் மறந்துவிட்டு என்னைப் பின்பற்றுங்கள். அப்பொழுது நீங்கள் ஒரு ஐக்கியமான இந்தியாவை உருவாக்குவதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். பின்னர் நீங்கள் உங்களுடைய வேதங்களை கொண்டு வாருங்கள். நான் உங்களுக்கு விளக்கி கூறுகிறேன். ஒரே கடவுளை பற்றித்தான் எல்லா வேதங்களும் போதிக்கின்றன. ஒரு மனிதன் “அல்லாஹ்” என்று கூறுகிறான். ஒரு மனிதன் “ஓம் நாராயணா” என்று கூறுகிறான். அது ஒரு கிறிஸ்தவனுக்கு விஷமாக இருக்கிறது.

ஒரு சமயம் ஒரு மனிதன் என்னிடம் வந்தான். அவன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று கூறினான். மற்றொரு சிநேகிதன் “ஓம் நாராயணா” என்று கூறினான். இந்த நேரத்திற்குள்ளாக அந்த மனிதனுக்கு நெஞ்சுவலி (மாரடைப்பு) வர துவங்கிவிட்டது. யாருக்கு வந்தது? அந்த கிறிஸ்தவனுக்கு வந்தது. இவன் கூறினான்: சகோதரன் லாறி அவன் “ஓம் நாராயணா” என்று கூறினான். நீங்கள் மௌனமாக இருந்துவிட்டீர்களே, அந்த நபரின் முகத்தில் ஒரு அடி வைத்திருக்க வேண்டும் என்று கிறிஸ்தவன் கூறினான். ஆனால் அந்த மனிதன் என்ன கூறினான் என்பது உங்களுக்கு தெரியுமா? சகோதரன் லாறி, நீங்கள் என்னுடைய நாராயணரை புரிந்துகொள்வீர்கள் என்று கூறினான். மேலும் அவனுடைய அனுபவத்தை கூறினான்.

ஒருநாள் நான் வறட்சியாகவும், தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்தபோது, “ஓம் நாராயணா” என்று கூறினேன். அந்த நேரத்தில் ஒரு நபர் என்னை தூக்கி சுமந்து, மேலே கொண்டு வந்து விட்டு விட்டார். அந்த நாராயணரை நான் எப்படி மறக்க முடியும்? என்றான். இந்த நபருக்கு அந்தவிதமாக அனுபவம் கிடைத்தது. அந்த நபர், அந்த கிறிஸ்தவனிடம் நீ என்றைக்காவது தண்ணீர் இல்லாத கிணற்றிற்குள் விழுந்து, உன்னுடைய தலை நொறுங்கிப் போகாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறாயா? என்று கேட்டான். நான் அந்த நாராயணரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறினான்.

அதன்பின்னர் அந்த இந்து மனிதன் என்னுடைய வீட்டிற்கு வந்தான். அவன் என்னுடைய நெருங்கிய நண்பனானான். அவன் எப்பொழுதும் என்னை பார்ப்பதற்காக வருவான். நான் அவனை சந்திக்கும்பொழுதெல்லாம் நாங்கள் ஒன்றாக சாப்பிடுவோம். மேலும் அவன் ஒரு தரிசனம் கண்டான். அவன் சகோ. லாறி உங்களுடைய போட்டோவையும் எங்களுடைய வீட்டில் நான் வைக்க வேண்டும் என்றான். அதற்கு நான் ஏன்? என்று கேட்டேன். அதே நாராயணர் உங்களை நம்பும்படி என்னிடம் கூறினார். ஆகவேதான் உங்களைப் பார்க்க இங்கு வந்திருக்கிறேன் என்றான். இன்றைக்கு அநேக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களிடம் பகைமையின் ஆவி இருக்கிறது. அது இறைவனுடைய ஆவி அல்ல. இறைவன் உங்களை ஆசீர்வதிக்க உங்களிடம் வருகிறார்.

உங்களுடைய இருதயம் உண்மையாய் இருக்குமென்றால், நீங்கள் சமாதானம் பெற வேண்டுமென்று விரும்பினால் அதற்கு வயது வரம்பு கிடையாது. ஒரு சிறு பிள்ளைகூட அந்த சாந்தியை இன்று பெற முடியும். ஒரு மதச்சார்புள்ள மனிதனாக இருந்துகொண்டு நான் உங்களை அழைக்கவில்லை. ஒரு இந்திய நண்பனாக வெறுப்பு எதுவும் இல்லாதவராக இருப்பீர்களென்றால் நீங்கள் இங்கே வரக்கூடும்.

அப்படியானால் வாருங்கள், ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். எந்த இறைவனை தொழுதுகொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்டால் உங்களை சிருஷ்டித்த இறைவனை நம்பி வாருங்கள். “என்னை சிருஷ்டித்த இறைவனே நீர் வந்து என் வாழ்க்கையை தொடும்” என்று நீங்கள் கேட்டால் அப்பொழுது இறைவன் உங்களுடைய இதயத்தை திறக்கிறார். உங்கள் கர்மவினைகளை நீக்குகிறார். அப்பொழுது நீங்கள் சாந்தியைப் பெறுகிறீர்கள், அவ்வாறு நீங்கள் பெறவில்லையென்றால் பிரார்த்தனை செய்து சாந்தியைப் பெறுங்கள். சாந்தியை அளிப்பதே உண்மையான ஆன்மீகமாகும்.          – முற்றும்

9-5-1986 அன்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் சொற்பொழிவின் தொகுப்பு:

– J. பாலசந்தர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்