தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » சாந்தியளிக்கும் ஆன்மீகம்

சாந்தியளிக்கும் ஆன்மீகம்

இன்றைக்கு அநேக மக்கள் இறைவனை உடையவர்களாக இல்லை. அநேக மக்கள் இறைவனைப் பற்றிய குழப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். மேலும் தற்காலத்தில் எங்கும் வன்முறை காணப்படுகிறது. வன்முறையினால் எல்லாவற்றையும் அடைந்துகொள்ளலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த உலகத்தில் நீதி இல்லை. எங்கும் பிரிவினைகள் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். உலக அழிவினை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இந்த உலக மக்களை அழிப்பதற்கு எதுவும் நடைபெறலாம் என அனைவரும் அச்சம் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே இன்று அதற்கு தீர்வுதான் என்ன? இந்தியாவில் நம்மைப் பிரிக்கக்கூடிய பிளவுகளை நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் சுயநலம் கொண்டவர்களாக இருந்துகொண்டு, தங்களுடைய சொந்த மதத்தைப் பற்றித்தான் நினைக்கிறார்கள். தேசம் முழுவதைப் பற்றியும் நினைப்பது கிடையாது. கிறிஸ்தவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ மதத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ரோமாபுரி முதலிய நாடுகளுக்குச் செல்வது பற்றி பேசுகிறார்கள். முஸ்லீம்கள் மெக்காவுக்கு செல்வது பற்றி பேசுகிறார்கள். இந்துக்கள் எங்கே செல்வார்கள்? ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களுடைய மதமே மிகச் சிறந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் ‘ஒரே இறைவன்தான் உண்டு’ என்று சொல்லக்கூடிய சில மக்கள் இருக்கிறார்கள். காரியம் அப்படி இருக்குமாயின், நம்மில் அநேக மக்கள் வித்தியாசமான பெயர்களில் இறைவனை வழிபடுகிறோம்.

இறைவனுடைய குணாதிசயம் என்ன? அவர் நம்மிடம் பணம் கேட்கிறாரா? அவர் காணிக்கை வாங்கி பிழைத்திருக்க வேண்டுமா? இப்பொழுது நாம் சூரியனை காண்கிறோம். அவ்வளவு பெரிய சூரிய ஒளியை இறைவன் நமக்கு இலவசமாக கொடுத்தார். அது மாத்திரமல்ல, சந்திரன் ஒளி, நட்சத்திர ஒளி ஆகியவற்றையும் கொடுத்தார். தண்ணீரை அவர் இலவசமாக கொடுத்தார். காற்றை இலவசமாக கொடுத்தார். ஒரு சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு பணம் கேட்கிறார்கள். ஆனால் அனைவரும் ஆக்ஸிஜனை சுவாசித்து, ஒவ்வொரு வினாடியும் வாழ வேண்டியதிருக்கிறது. அதை அவர் இலவசமாக கொடுத்திருக்கிறார். இறைவன் அப்படிப்பட்ட தயாள குணமாக இருக்கும்போது, மத சம்பந்தமான மக்கள் இறைவன் ஒரு பிச்சைக்காரராக இருப்பதுபோல காணிக்கை, நன்கொடை என்று ஏன் பணத்தை வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் உண்மையான இறைவனைப் பற்றி பிரசங்கித்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தங்களுடைய வயிறு, தங்களுடைய குடும்பம், கட்டிடங்கள் ஆகியவைகளை மட்டுமே விருத்தியடைய செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் இறைவனை ஒருபோதும் அறியவில்லை.

இறைவன் உங்களுக்கு தேவையென்றால், உங்களுக்கு அவருடன் ஒரு அனுபவம் இருக்க வேண்டும். ராஜீவ்காந்தி எனக்கு தெரியும் என்று நான் சொல்லக்கூடும். ஆனால் அவரைப் பற்றி அறிவதற்கு நான் அந்த குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். ஒரு புஸ்தகத்தை வாசிப்பதினால் நான் அவரை அறிந்துகொள்ள முடியாது. அதைப்போல இறைவனைப் பற்றி பேசலாம். இறைவனைப் பற்றி மணிக்கணக்காக பேசக்கூடிய மகத்தான மக்கள் இருக்கிறார்கள். முடிவில் அவர்கள் பணம் தாருங்கள் என்று கேட்பார்கள். இறைவன் இன்றைக்கு அந்தவிதமாகத்தான் கிரியை செய்து கொண்டிருக்கிறாரா?

45 வருடங்களாக இறைவனை நாங்கள் உறுதியாக நம்பினோம். இறைவன் எங்கள் தேவைகள் அனைத்தையும் சந்தித்து வருகிறார். எவரிடமும் நாங்கள் பணம் கேட்பதில்லை. நாங்கள் இங்கே யாரையும் வேறொரு மதத்திற்கு மாற்றுவதற்காக வரவில்லை. உங்களுடைய பெயரையும் மாற்றுவதற்காக நாங்கள் வரவில்லை. இறைவனிடமிருந்து ஒன்றை எங்களுடைய இருதயங்களில் கண்டு கொண்டோம். அந்த சாந்தியை நாங்கள் உங்களுக்கு கொடுக்க விரும்புகிறோம்.

நீங்கள் கிறிஸ்தவனாக இருக்கலாம், நீங்கள் ஒரு முஸ்லீமாக இருக்கலாம், நீங்கள் ஒரு இந்துவாக இருக்கலாம். நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று நான் உங்களை கேட்கவில்லை. நீங்கள் இன்றைக்கு ஒரு உண்மையான இந்தியனாக இருப்பீர்களென்றால் நீங்கள் அந்த சாந்தியை பெற்றிருக்கிறீர்களா என்பதை கண்டுபிடியுங்கள். இறைவன் பட்சபாதமுள்ளவர் அல்ல. அவர் எல்லோருக்கும் சாந்தியை அளிக்க விரும்புகிறார். மேலும் நீங்கள் எந்த இறைவன் அந்த சாந்தியை எனக்குத் தருவார் என்று  கேட்கலாம். உங்களை சிருஷ்டித்த ஒருவர், ஒரே ஒரு இறைவன்தான் உண்டு. அவர் நம் அனைவரையும் சிருஷ்டித்தார். மேலும் நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ வேண்டுமென அவர் விரும்புகிறார். ஆனால் இன்று அவ்விதமாக நடைபெற்றுக்கொண்டிருக்க வில்லை. ஒவ்வொருவரும் தங்கள் மதமே பெரிய மதமாகும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் இறைவன் கீழே இறங்கி வரவேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அவ்விதமாக காரியங்கள் நடைபெற அவர் அனுமதிக்க முடியாது.

நான் உங்களுடைய மதத்தைக் குறித்து கவலைப்படுகிறதில்லை. ஏன்? மதம் உங்களுக்கு உதவி செய்யாது. ஏனென்றால் எந்த மதமும் யாருக்கும் உதவி செய்ய முடியாது. பணம் கொடுத்து உங்களுக்கு உதவி செய்யக்கூடும். ஆனால் ஆவிக்குரிய பிரகாரமாக அவர் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. நீங்கள் இறைவனுக்கு அருகே சென்று அவரை தொடும்போது, அது யாராக இருந்தாலும் சரி, அவர் உங்களுக்கு உதவி செய்கிறார். இறைவன் தொலைவில் இல்லை. அவர் உங்களுடைய சுவாசத்திற்கு அருகே இருக்கிறார். நீங்கள் அவரை எங்கும் தொட முடியும். நீங்கள் ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கோ அல்லது ஒரு இந்து கோவிலுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. யாராக இருந்தாலும் இந்த சாந்தியை பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே இன்று அநேக மக்கள் இந்த உலகமானது இப்படியே போய்க் கொண்டிருக்கும் என்று நினைக்கிறார்கள். இன்றைக்கு மதம் என்ற பெயரில் அநேகர் தங்கள் தேசத்தை விற்றுவிட்டார்கள். நீங்கள் இந்த தேசத்தில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் இந்த தேசத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். நாம் இறைவனுக்கும், நம்முடைய தேசத்திற்கும் உண்மையாக இருக்க வேண்டும். இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்களை நாம் பார்க்கும்போது, அவர்கள் ஆயுதங்களை கண்டு பிடித்து வைத்திருப்பதினால், இந்த உலகம் நீண்ட காலம் இருக்க முடியுமா? அப்படியானால் நீங்கள் மத சம்பந்தமான புஸ்தகங்களைப் படித்து, இறைவன் நமக்கு என்ன கூறியிருக்கிறார் என்பதைப் தெரிந்துகொள்ள வேண்டும்.

– தொடரும் ……
J. பாலசந்தர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்