தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள் » சந்நியாசியின் கமண்டலம்

சந்நியாசியின் கமண்டலம்

காட்டில் சந்நியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த நாட்டு அரசரை ஒருநாள் அந்த சந்நியாசி அரண்மனையில் சந்தித்தார். அந்த அரசனும் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுள்ளவனாக விளங்கினான். இதை அறிந்துகொண்ட சந்நியாசி, மன்னரின் ராஜபோகத்திற்கு ஆன்மீகத் தேடல் ஒத்துவராது என்று அலட்சியமாகப் பேசினார். சுகபோகங்களைத் துறந்து காட்டுக்குத் தன்னுடன் வருமாறு சவாலும் விட்டார்.

அரசனும் சம்மதித்து அரண்மனையைத் துறந்து சந்நியாசியின் பின் வந்தார். காட்டில் சிறிது தூரம் சென்றதும் தன் கமண்டலத்தை அரண்மனையிலேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது. “அடடா, என் கமண்டலத்தை அரண்மனையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். வாருங்கள், அரண்மனைக்குப் போகலாம்” என்று அரசனை அழைத்தார் சந்நியாசி. அதற்கு அரசன் மிக்க பணிவோடு, “நான் அரசையே துறந்து உங்கள் பின்னால் வந்துவிட்டேன். நீங்களோ, ஒரு கமண்டலத்துக்காக அரண்மனைக்குப் போகலாம் என்கிறீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் துறந்துவிட்டீர்கள் என்று சொல்வதை நான் எப்படி நம்ப முடியும்?” என்றார் அரசன். சந்நியாசி தலைகுனிந்தார்.

*******

Filed under: ஆன்மீக கதைகள்