தமிழ் | తెలుగు

» பிரமுகர்களின் உரை » சத்தியத்தைச் சொல்லும் சத்திய நகரம்

சத்தியத்தைச் சொல்லும் சத்திய நகரம்

தமிழ் நாடக மேதை, அவ்வை சண்முகம் அவர்களின் புதல்வர் திரு. டி.கே.எஸ். கலைவாணன் அவர்கள். சிறுவயதிலேயே இசையை இலக்கண முறைப்படி பயின்று அபூர்வ ராகங்களையும் அற்புதமாகப் பாடவல்லவர். ஒன்பதாம் வயதிலேயே திருமுருக கிருபானந்த வாரியார் முன் கந்தர் அனுபூதியைப் பாடி அவரது ஆசி பெற்றவர். 1330 குறட்பாக்களையும் பாடி ஒலித்தகடாகப் பதிவு செய்தவர். மேடைக் கச்சேரி, நடிப்பு, பாட்டு என்று பலதுறைகளில் திறமை கொண்டவர். சிறந்த எழுத்தாளர், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல புண்ணியத்தலங்களையும் தரிசித்து வந்தவர்.

திருமுருக கிருபானந்த வாரியார் மற்றும் இஸ்லாமிய பாடகர் நாகூர் அனிஃபா அவர்களும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவை சந்தித்து ஆசி பெற்ற மனுஜோதி ஆசிரமத்திற்கு, டி.கே.எஸ் கலைவாணன் அவர்களும் வருகை தந்தார்கள். டி.கே. எஸ். அவர்கள் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. அவர் மனுஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற கல்கி ஜெயந்தி விழாவில் நடைபெற்ற தேசீய ஒருமைப்பாடு கூட்டத்திலும், சர்வ சமய மாநாட்டிலும் பங்கேற்றார்கள். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் துதிபாடல்களை பாடி, தன்னுடைய இனிய குரலால் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களை வசீகரித்தார். அவர்களுடைய இசைக்கச்சேரியும் நடைபெற்றது. மேலும் இனிய சொற்பொழிவும் நிகழ்த்தினார்கள்.

வாசகர்களுக்காக டி.கே.எஸ். கலைவாணன் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்: நான் எத்தனையோ ஆசிரமங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு ஆசிரமமும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அதன் பின்னணியோ அதன் சரித்திரமோ தெரியாது. ஆனால் தெரிந்ததற்கு பிறகு நான் செல்வதில்லை. அப்படி எத்தனையோ சாமியார்களிடமும் எத்தனையோ ஆசிரமங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இந்த மனுஜோதி ஆசிரமமானது மிகவும் வித்தியாசமான ஒரு ஆசிரமமாகும். இதற்கு சத்திய நகரம் என்று பொருத்தமான பெயரை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் நீதிமன்றத்தில் சொல்வார்கள் அல்லவா! நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை என்கிற மாதிரி இங்கே சத்தியத்தை மாத்திரமே பேசுகின்றோம். இங்கே மேடையில் பேசிய ஆன்மீகவாதிகள் அனைவருமே அவர்கள் உள்ளத்தில் வந்த அனைத்தையுமே சத்தியமாக பேசினார்கள். இது வேறும் பகட்டுக்காக கூறப்பட்டவையல்ல. சத்திய வார்த்தைகள் என்று எனக்குத் தெரியும்.

நீதி சொன்ன சோழன் மனுநீதி அல்லவா! வள்ளலார் அனைவரிடமும் ஒற்றுமையைக் கண்டார். அருட்பெருஞ்ஜோதியைப் பரப்பினார். பசிக்கொடுமையை போக்கினார். அதில் இருக்கும் ஜோதியை எடுத்து மனுவையும் இணைத்து மனுஜோதி என்ற பொருத்தமான பெயரைத் தந்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து வள்ளுவர் சொன்னதுபோல அன்பின் வழியது உயிர்நிலைதான் என்று அவர் சொன்ன அதே கருத்துதான் இங்கே நிலவுகிறது. நீங்கள் அனைவரும் அதாவது குழந்தைகள், தாய்மார்கள், சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த பந்தலின்கீழ் அமர்ந்திருந்து இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். இந்த ஒற்றுமையை உண்மையிலேயே, நான் கண்டு வியக்கின்றேன். ஏனென்றால் நாங்கள் கச்சேரி செய்கிற இடத்தில்கூட இத்தனைபேர் அமர்ந்திருக்கமாட்டார்கள். ஏதோ பேருக்காக இருப்பார்கள். நீங்கள் இங்கே பெருந்திரளாக அமர்ந்திருப்பது எனக்கு ஒரு பெரும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணுகிறது.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளால்தான் இங்கே வருவதற்கு நான் தகுதி பெற்று இருக்கிறேன். எங்களுடைய வீட்டு வரவேற்பு அறையில் காந்தி, இயேசு, புத்தர் இந்த மூன்று பேருடைய படங்கள்தான் இருக்கும். எல்லா சமயத்தினரிடமும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என சிறுவயதிலேயே எனது தந்தையார் எனக்கு போதனை செய்தார். அதிலிருந்தே நாங்கள் அப்படித்தான் வளர்ந்தோம். நான் பள்ளிக்கு செல்லும்பொழுது ஆரம்பக் கல்வியை கிறிஸ்தவ பள்ளியிலே படித்தேன். நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியையும் இந்து பள்ளியிலேயே படித்தேன். கல்லூரிப்படிப்பை இஸ்லாமிய கல்லூரியிலே படித்தேன். இப்படி மும்மதத்தினருடைய கோட்பாடுகளும் தெரியும். அதிலுள்ள சிறப்பு அம்சங்களும் தெரியும். இம்மூன்று மதத்தினரைச் சேர்ந்த அநேக நண்பர்களும் எனக்கு உண்டு. தந்தையார் அவர்கள் ஒரு பெரிய நடிகராக இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். நாடகம் என்பது நடிப்பும் பாட்டும் சேர்ந்ததுதான். நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால், ஒவ்வொருவரும் மற்ற மதத்தினருடைய வேதங்களிலுள்ள கருத்துக்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நான் ஒரு சினிமாவில் நடித்திருக்கிறேன். அவர்கள் எனக்கு பேசிய ஊதியத்தை பெறுவதற்காக ஒருமுறை அல்ல, ஆறுமுறை சென்றிருக்கிறேன். எனக்கு அந்த ஊதியம் தரப்படவில்லை. நீங்கள் தருகிறீர்களோ இல்லையோ ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். “உங்களுக்காக உழைத்தவனின் வியர்வை காயும் முன்னே அவனுடைய ஊதியத்தை கொடுத்துவிடு” என்று குர்-ஆனில் நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன சக்தி வாய்ந்த பொன்மொழியை சொல்லி விட்டு திரும்பினேன். அவ்வளவுதான்! அவர் தன்னுடைய மேசை டிராயரைத் திறந்து பணத்தைக் கொடுத்துவிட்டார். அந்த பொன்மொழிக்குத்தான் என்ன சக்தி என்று நினைத்துப் பார்த்தேன். இப்படி அனைத்து வேதங்களிலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் உள்ளன. நாம் அதை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நமக்குள் ஒற்றுமை வரும். ‘கண்ணோட்டம்’ பத்திரிக்கையின் ஆசிரியர் சண்முகம் தன்னுடைய பத்திரிக்கையிலே ரமலான் சிறப்பு மலர் வெளியிட்டிருக்கிறார். இதுபோல் சிறந்த கருத்துக்களை பத்திரிக்கையிலே வெளியிட வேண்டும்.

இந்த ஆசிரமத்திலே சர்வ சமய ஒற்றுமை மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேடையிலே அமர்ந்திருக்கிற அனைவரும் உதாரண புருஷர்கள். உதாரணமாக வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அப்படிப்பட்ட சிந்தனை உள்ளவர்கள்தான் இங்கு வேண்டும். இங்கு கூடியுள்ள அனைவருமே அன்பின் வழியில் ஒன்றுபட்டிருக்கிறீர்கள். அதைத்தான் இங்கே மேடையில் சொற்பொழிவு ஆற்றியவர்களிடம் நான் கண்டேன். நானும் அந்த வழியிலே வளர்ந்தவன். எல்லா மதத்தின் பாடல்களையும் நான் பாடி இசைத்தட்டையும் வெளியிட்டிருக்கிறேன். பிலிப்பைன்ஸ் ரேடியோவில் நிறைய கிறிஸ்தவ பாடல்கள், மற்றும் இஸ்லாமிய பாடல்கள், இந்து பக்திப் பாடல்கள் பாடி இருக்கிறேன். மறைந்துபோன அன்பு அண்ணன் நாகூர் அனிஃபா அவர்கள் என் இனிய நண்பர். அவருக்கு என்னுடைய குரலும் பாட்டும் ரொம்ப பிடிக்கும். என்னைப் பலமுறை வாழ்த்தி இருக்கிறார். அவர் நினைவாக என்னுடைய நிகழ்ச்சியில் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாட்டைப் பாடுவேன். எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால் அந்த அளவுக்கு இந்த மனுஜோதி ஆசிரமத்திலே அனைத்து மதத்தவரும் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படை அன்பு மட்டும்தான்.

மனுஜோதி ஆசிரம தலைவர் பால் உப்பாஸ் அவர்களை ஆஸ்திரேலியாவில் சந்தித்தேன். என்னை அவர் ஒருமுறை எங்கள் ஆசிரமத்திற்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இங்கே வந்தபிறகுதான் தோன்றுகிறது ஒருமுறை மட்டுமல்ல, எத்தனை முறை வேண்டுமானாலும் இங்கே வரலாம் என தோன்றுகிறது. காரிலே பேட்டரி சார்ஜ் இறங்கி விட்டது என்றால் அவ்வப்போது சார்ஜ் செய்து கொள்வார்கள். அதுமாதிரி நம் உள்ளத்தை சார்ஜ் செய்து கொள்ள வேண்டுமானால், இங்கே வருகை தந்திருக்கின்ற உங்கள் எல்லாரையும் சந்தித்து, அளாவளாவிச் சென்றோமென்றால், உண்மையிலேயே நம் உள்ளத்திலே உள்ள பேட்டரி சார்ஜ் ஆனதுபோல் இருக்கும். ஒரு மனோ தைரியமும், அன்பும் நம்மிடையே நிரம்பி வழியும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். நான் இங்கே வருகை தர காரணமாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். இறுதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த ஆசிரமமானது மிகவும் வித்தியாசமான இடமாகும். இப்படி ஒரு இடத்தை நான் வேறெங்கும் பார்க்கவில்லை. இந்த ஆசிரமம் அன்பை நமக்கு இன்னும் போதித்துக்கொண்டே இருக்கவேண்டும். அன்பின் வழியில் நிற்க வேண்டும். ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் புகழ் பாட வேண்டும் என்று கூறி டி.கே.எஸ். அவர்கள் தன் சிறப்புரையை நிறைவு செய்தார்.

✡✡✡✡✡✡✡

Filed under: பிரமுகர்களின் உரை