தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கோபம்

கோபம்

‘ஆறுவது சினம்’ என்றார் ஒளவை. ‘சினம் என்பது சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு, ஒருவனுடைய இனம் என்னும் இன்பத்தெப்பத்தையும் சுட்டெரிக்கும்’ என்ற பொருளில்

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

          ஏமப் புணையைச் சுடும் என்றார் வள்ளுவர்.

‘கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம். கொடுங்கோபம் பேரதிர்ச்சி’ என்று பேசுவார் பாரதி. ‘கர்வம் உள்ளவன் இறைவனை இழக்கிறான். பொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான். கோபக்காரனோ தன்னையே இழக்கிறான்’ என்பது நம் ஆன்றோர்களின் அனுபவத்தில் பிறந்த பொன்மொழி. ‘காமம், கோபம், பேராசை மூன்றும் நரகத்தின் முக்கிய வாயில்கள். இவை நம் ஆன்மாவை அன்றாடம் களங்கப்படுத்தும் மோசமான எதிரிகள்’ என்கிறது விதுரநீதி. கூடாத குணங்கள் பதினெட்டு என்று மகாபாரதத்தில் சாந்தி பருவம் பட்டியலிடுகின்றது. அவற்றுள், ‘இல்லாத குற்றத்தைச் சுமத்துவது, குற்றமற்றவனை தண்டிப்பது, வஞ்சனையாக கொலை செய்வது, பிறர் பெருமையில் பொறாமை கொள்வது, அடுத்தவர் குணங்களை குற்றமாகக் கூறுவது, உரிமையற்ற பொருளை கவர்வது, கடுஞ்சொற்களைப் பேசுவது, கொடுந்தண்டனை அளிப்பது ஆகிய எட்டும் கோபத்தின் கூட்டாளிகள்’ என்று கோடிட்டு காட்டுகிறது பாரதம்.

காமம், குரோதம் என்று சேர்த்து சொல்வது வழக்கம். காமம் என்பது ஆசை. குரோதம் என்பதுதான் கோபம், ஆத்திரம், துவேஷம் இவை எல்லாமாகும். மனிதனை பாவத்தில் தள்ளுபவை காமமும், குரோதமுமே என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறியிருக்கிறார். ஒரு வஸ்துவிடம் ஆசை உண்டாகிவிட்டால், அதை தவறான வழியிலாவது அடைய முயல்கிறோம். இப்படியாக காமம் என்பது நம்மைப் பாவத்தில் தள்ளுகிறது. அது நமக்கு பெரிய சத்துரு, அதேபோன்ற இன்னொரு சத்துருவே கோபமாகும். நாம் ஆசைப்படுகிற வஸ்து நமக்கு கிடைக்காதபொழுது இதற்கு தடையாக இருக்கிறவர்கள்மீது அல்லது தடை என்று நாம் நினைத்தவர்கள்மீது கோபம் வருகிறது. அதாவது நிறைவேறாத காமமே கோபம் என்று பெயர் கொள்கிறது. ரப்பர் பந்தை சுவற்றில் எறிந்தால் அது எதிர்த்துக்கொண்டு நம்மிடமே திரும்பி வருகிறது. எறியப்படும் பந்து காமம். அதே பந்து திரும்பி வரும்போது கோபமாகிறது. திரும்பி வருகிற பந்து நம்மையே தாக்குகிறது. அப்படியேதான் நம்முடைய கோபத்தால் பிறரை தாக்குவதாக நாம் நினைத்தாலும், அது நம்மையேதான் அதிகம் தாக்குகிறது. கோபத்தில் நம் உடம்பெல்லாம் ஆடிப்போகிறது. நம் தேகம், மனது இரண்டிற்கும் கோபத்தினால் பெரிய கிலேசத்தை நாம் உண்டாக்கிக்கொள்கிறோம்.

நாம் மிகவும் ஆவேசமாக சத்தம் போடும்போது நம்மை யாரேனும் புகைப்படம் பிடித்து பின்னர் நம்மிடம் காட்டினால் போதும், கோபாவேசத்தினால் நம்மை நாமே எத்தனை கோரமாக்கிக்கொள்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு வெட்கப்படுவோம். சாதாரணமாக மனிதர்களுக்கும், பிராணிகளுக்கும் வயிற்றிற்கு ஆகாரம் கொடுத்தால் அப்போதைக்கு பசி அடங்குகிறது. அடுத்த வேளை மறுபடியும் பசி ஏற்படுகிறது. நெருப்புக்கு மட்டும் நாம் ஓர் ஆகாரத்தைப் போட்டால் அது அடங்குவதேயில்லை. இன்னும் அதிகமாக கொழுந்து விட்டு எரிகிறது. மேலும் பல பொருட்களை தகித்து கபளீகரம் செய்கிறது. நெருப்பு பிரகாசமாக இருந்தாலும், தான் ஸ்பரிசித்துவிட்டு செல்கிற பண்டங்களையெல்லாம் கன்னங்கரேல் என்று கருப்பாக்கிக்கொண்டு போகிறது. இதனால் நெருப்புக்கு “கிருஷ்ணவர்த்மா” என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. கோபம் தீயாக எரிகிறது. அதற்குப் பிரியமான வஸ்துவைக் கொடுப்பதால் பசி அடங்காமல் அதிகமாகிக்கொண்டே போகிறது. அது நம் மனதையே கறுப்பாக்கிவிடுகிறது. ஓர் இச்சை பூர்த்தியாகிறபோது தற்காலிகமாக ஒரு மகிழ்ச்சி உண்டானாலும், பிற்பாடு அதையே மீண்டும் தேடி அலைந்து அமைதியையும், சந்தோஷத்தையும் குலைத்துக்கொண்டு அழுகையையும், கோபத்தையும் உண்டாக்கிக் கொள்கிறோம். அழுகை என்பது துக்கத்தில் உண்டாவதாகும்.

நிறைவேறாத ஆசையின் இரண்டு உருவங்கள்தான் துக்கமும், கோபமுமாகும். நம் ஆசையின் நிறைவேற்றத்துக்கு தடையாக இருந்தவர்கள் நம்மைவிட கீழ்ப்பட்டவர்களாக இருந்தால் அவர்களிடம் கோபத்தை காண்பிக்கிறோம். அவர்கள் நமக்கு மேலே இருந்துவிட்டால் கோபித்துக்கொள்ள முடியாமல் நமக்குள்ளேயே துக்கப்பட்டுக்கொண்டு அழுகிறோம். கோபத்தின் கெட்ட சக்தி காமத்தின் சக்தியை விடப் பெரியது. இதை நள சரித்திரமான “நைஷதம்” வெகு அழகாக சொல்கிறது. கலி அரசன் வருகிறான். அவனது சேனாதிபதிகளாக காமனும், குரோதனும் வருகிறார்கள். கட்டியக்காரன் இவர்களுடைய பெருமைகளைப் பாடுகிறான். குரோதனைப் பற்றி அவன் என்ன பாடுகிறான்? காமன் புகாத இடமில்லை என்பார்கள். ஆனால் காமனும் புகாத ஒரு கோட்டை உண்டு. அந்த கோட்டைக்குள்ளும் இந்த குரோதன் குடிகொண்டிருக்கிறான். அது எந்த கோட்டை தெரியுமா? துர்வாசருடைய இதயம்தான் என்று குரோதனின் புகழைப் பாடுகிறான். காமமே அறியாத துர்வாச மகரிஷியும் கோபத்துக்கு ஆளானவர் என்பது தாத்பரியமாகும். நாம் இந்த மகாபாவியான குரோதத்திடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சற்று யோசித்தால் நமக்கே தெரியும். யாரையும் கோபித்துக்கொண்டு சத்தம்போட நமக்கு சிறிதும் யோக்கியதை என்பதே இல்லை என்றும், யாரை நாம் கோபித்துக்கொள்கிறோமோ அவர்கள் செய்கிற தவறுகள் மற்றும் அதைவிட பெரிய தவறுகளை நாம் செய்திருக்கிறோம் என்பதுவும் நம் ஆழ்மனதிற்கு தெரியும். அப்படியே நாம் தவறு செய்யாவிட்டாலும்கூட, அந்த மனிதன் அந்த சூழ்நிலையில் செய்த தவற்றை நாமும்கூட அந்த சூழ்நிலையில் இருந்தால் செய்திருக்கக்கூடும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

கோபமின்மையே பொறுமை. அனந்த குணங்களின் இருப்பிடமான ஆன்மாவினிடமிருந்து அதன் இயல்பு அல்லாத வேறான குணங்களுக்கு இடம் தரக்கூடாது. அதை அகற்ற வேண்டும். மறைத்துள்ளதை அகற்றினால் சுபாவ குணமானது வெளிப்படும். சுபாவ குணம் அதாவது பொறுமை இடையூறாக அதை வெளிப்படாது அழுத்திக்கொண்டிருக்கும் விபாவ குணம் குரோதம் அதாவது சினம், பிறவிதோறும் பழகிய தோஷத்தால் அதுவே சுபாவம்போல் தோன்றுகிறது. அழியாமல் நிலைத்திருப்பதே உன்னுடையது. அது முக்காலும் உன்னுடனே இருக்கும். இடையில் வருவதும், போவதும் உன்னுடையதல்ல. பொறுமை, அன்பு, சாந்தம் முதலான குணங்களே முக்காலும் ஆன்மாவுடன் இருப்பதாகும். குரோதம், பொறாமை முதலியன பிரிந்து செல்வனவாகும். இந்த உடலே உன்னுடையதல்ல எனில், உடலால் வந்த உறவுகளும், சேர்க்கும் செல்வம் முதலானவைகளும் உனதாகுமா? உனதல்லாத உடல், உறவுகள், செல்வம் முதலானவைகளை காப்பாற்ற முற்படும்போது, உனதல்லாத சினம் தோன்றுகிறது. எண்வினைகளுக்கும் வாகனம் இந்த உடல்தான். வினைகள் நமதல்ல. இவைகளை தனதாக கருதுபவன் அறிவிலியாவான். இவ்வாறு நம்முடையது எது? நம்முடையதல்லாதது எது? என்ற தெளிவு வந்துவிடுமானால் கோபம் வராது. ஞானி தனக்கு வரும் துன்பம் அல்லது இழப்பு வந்தால் அதற்கு காரணமானவர்கள்மீது கோபங்கொள்வதில்லை. தான் முன் செய்த வினையே காரணம் எனத் தெளிந்து பொறுமையைக் கையாள்வர்.

அடுப்பில் ஏற்றிய பால் பொங்குகிறது. தண்ணீர் தெளிப்பது தற்காலிக தணிப்பே, மீண்டும் பொங்கும். எரியும் விறகை அகற்றுவதே முறையாகும். அவ்வாறு பொங்கும் சினத்தை அகற்ற பற்று என்னும் தீயை அகற்ற வேண்டும். பற்றை விட்டால், அவற்றால் தோன்றும் விருப்பு, வெறுப்புகளை விட்டால், சினம் தோன்றாது. ஆன்மாவின் பொறுமை குணம் வெளிப்படும். கோபமோ வாழ்க்கை வசதிகள், படிப்பு, குடும்ப ஒற்றுமை என எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது. ஒரு பைசாவுக்கும் பிரயோஷனமில்லாத கோபத்தால், பண்புள்ள குடும்பம்கூட பாழாய் போய்விடுகிறதே! அதனால் வேண்டாம் இந்த கோபம் என்று சொல்கிறது ‘அறநெறிச்சாரம்’. அதையும் அதிகாரமாக சொல்லவில்லை, கடுமையாக சொல்லவில்லை. குழைவாக சொல்கிறது, கெஞ்சி கேட்டுக்கொள்கிறது. அதிலிருந்து பாடல் எண் 103:

உழந்து உழந்து கொண்ட

          உடம்பினைக் கூற்று உண்ண

          இழந்து இழந்து எகோபம்

          சுழன்று உழன்று

          சுற்றத்தார் அல்லாதார்

          இல்லையேல் – நல் நெஞ்சே!

          செற்றத்தால் செய்வது உரை – இவ்வாறு கூறுகிறது.

கருத்து: நல்ல நெஞ்சே- மிகவும் அரிதாக முயன்று பெற்ற இந்த மனித உடலை யமன் உண்டுவிடுகின்றான் அல்லது அழித்து விடுகின்றான். அதனால் பல பிறப்புகள் பிறந்து இறக்கின்றோம். பல பிறவிகள் எடுத்து, அலைந்து திரிந்து தடுமாறிய மக்களில், நமக்கு உறவினர் அல்லாதார் யாரும் இல்லை. ஆகையால் அடுத்தவர்களிடம் நீ கொள்ளும் கோபத்தினால் சாதிக்கக்கூடியது என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஆகவே நல்ல நெஞ்சே! கோபம் வேண்டாம் என்கிறது. என்ன அணுகுமுறை! கோபம் வேண்டாம் என்று சொல்லும் இந்த பாடல், அது உருவாகும் மனதை நல்ல நெஞ்சே என்று அழைக்கிறது. எத்தனையோ பிறவிகள் அவற்றில் எத்தனையோ உறவுகள், யார் யாருக்கு என்னென்ன உறவாக இருந்தோம் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும்போது ஏன் கோபம்? அந்த கோபத்தால் சாதித்தது என்னவென்று சொல்? என்று எவ்வளவு மென்மையாக கேட்கிறது பாருங்கள். கோபம் நம்முடைய மிகப்பெரிய சத்துருவாகும். அதை அண்டவிடாமல் எப்போதும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.

கோபம் – குரோதம் இதைப் பற்றி ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்ன கூறுகிறார் என்பதைக் காண்போம். “யார் சீக்கிரமாக கோபப்படுவார்கள்? அதிக பெருமையுடையவர்கள்தான் கோபப்படுவார்கள். பெருமை குறைய குறைய நம் கோபமும் குறைந்துவிடும். கோபம், பொறாமை, சுயநலம் இம்மூன்றும் ஆன்மீகவாதிகளின் எதிரிகளாகும். இறைவனில் பாகமாக இருப்பவர்கள் இவைகளை ஜெயித்து விடுவார்கள் என்று விவிலியம் கூறுகிறது. கோபப்படக்கூடாது என்று இறைவன் கூறவில்லை. ஆனால் கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதீர்கள் என்றுதான் கூறுகிறார். சூரிய அஸ்தமனத்திற்குள் உங்கள் கோபம் குறைந்துவிட வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த இறைவனின் அருளை நாடவேண்டும். கோபப்படுவதினால் நாம் பெலமானவர்கள் அல்ல. கோபத்தை அடக்கக்கூடியவன்தான் பெலமானவன் ஆவான். ஆன்ம பெலம் உள்ளவர்கள் கோபத்தை அடக்க வல்லவர்கள். இறைவா! கோபத்தை அடக்கும் சக்தியை எனக்கு தாரும் என்று நாம் கேட்க வேண்டும்.

மரணத்தையே ஜெயிக்க பிறந்தவர்கள் இறைவைனில் பாகமாகிறார்கள். அவர்கள் மரணத்தை மேற்கொள்ளுவதற்கு முன்னர், பயம், காமம், குரோதம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என மகாகவி பாரதியார் கூறியுள்ளார். கோபம் வந்தவுடன் அந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டும். கோபத்தை குறைக்க இது ஒரு வழியாகும் அல்லது கோபம் வந்தவுடன் 1,2,3 என்று எண்ண ஆரம்பிக்க வேண்டும். 100, 1000 அல்லது 10,000 என்று எண்ணுவதற்குள் உங்கள் கோபம் குறைந்து விடும். அதேசமயத்தில் கோபமிருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும் என்பது பழமொழியாகும். சிலர் கோபப்பட்டாலும் மற்ற எல்லா நற்குணங்களையும் உடையவர்களாக இருப்பார்கள்.  பிள்ளைகள் கோபப்படும்போது பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? அநாவசியமாக பிள்ளைகள் கோபப்பட்டால் அல்லது தேவையற்ற நேரத்தில் பிள்ளைகள் பெற்றோர்மீது கோபப்பட்டால், பிள்ளைகளை அடித்து தண்டிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் செய்வது தவறு என்பதை அறிந்துகொள்வார்கள்.

இயேசுபிரானிடம் ஒருவன் வந்து என் சகோதரனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும் ஏழு முறையா என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழு முறை அல்ல 7X70 முறை அதாவது 490 முறை நீ மன்னிக்க வேண்டும் என்றார். தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள் 490 முறை மன்னிப்பார்கள், ஏனெனில் அவர்கள் இறைவனின் அருளைப் பெற்றவர்கள். இறைவன் சாந்த சொரூபி, நீடிய பொறுமையுடையவர். ஆகையால் அவரை அடைய விரும்புபவர்களும் அவரைப் போலவே இருக்க வேண்டும். அதற்காக நாம் கோபப்படக்கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். ஒரு கிராமத்தில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அங்கே ஒரு நல்ல பாம்பு எல்லாரையும் தீண்டியதால் அநேகர் இறந்தனர். இதனால் அக்கிராமத்து மக்கள் முனிவரிடம் அந்த நல்ல பாம்பு தங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும்படி செய்யுங்கள் என்றனர். முனிவரும் அந்த நல்ல பாம்பிடம் நீ இனிமேல் யாரையும் தீண்டக்கூடாது என்றார். அதற்கு அந்த நல்ல பாம்பு ஒத்துக்கொண்டது. சிறது நாட்கள் கழித்து நல்ல பாம்பு முனிவரிடம் வந்து என்னை எல்லோரும் கல்லால் அடிக்கிறார்கள், நான் என்ன செய்வது? என்று கேட்டது. அதற்கு முனிவர் நான் உன்னை தீண்டக்கூடாது என்றுதானே கூறினேன். நீ படமெடுத்து கோபப்படலாம் அல்லவா, அப்பொழுது யாரும் உன்னை அடிக்கமாட்டார்கள் என்றார். ஆக ஒரு மனிதன் எப்பொழுது கோபப்பட வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். எல்லா நேரத்திலும் கோபப்படாமல் இருந்தால் இவன் ஒரு கழுதை. நாம் இவனை என்ன வேண்டுமானாலும் கூறலாம், அடிக்கலாம் என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்கள். ஆகையால் நல்ல பாம்பைப்போல படமெடுத்து கோபப்பட்டால் மற்றவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். இதுவும் ஒரு தற்காப்பு கலையைப் போன்றதுதான். எனவே சினம்-குரோதத்தை அடக்க வேண்டும்” என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார். சினங்கொள்ளுவதினால் எந்த பயனுமில்லை என்று “வெகுளாமை” என்ற அதிகாரத்தில் 10 குறளை வள்ளுவர் வடித்துள்ளார். சினம் அல்லது கோபம் தீயைப் போன்றது, அது எல்லாவற்றையும் அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று திருவள்ளுவர் கூறுகிறார். கோபத்தை துறந்தால் அவன் முற்றும் துறந்த துறவிகளுக்கு இணையாவான் என்கிறார்.

“இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

          துறந்தார் துறந்தார் துணை”

கோபத்தை மிகுதியாகக் கொண்டிருப்பவர் இறந்தவருக்கு ஒப்பாவார். ஆக முக்தி நிலையை அடைய விரும்புகிறவர்கள் கோபத்தை துறக்க வேண்டும்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்