தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » கூர்மம்

கூர்மம்

உலகை காக்கவும், பக்தர்களை இரட்சிக்கவும் ஸ்ரீமந் நாராயணர் தசாவதாரம் எடுத்தார். அதில் ஒன்றுதான் கூர்ம அவதாரமாகும். கூர்மம் என்றால் ஆமைஎன பொருளாகும். ஸ்ரீமந் நாராயணர் இந்த வடிவத்தை தன் அவதாரத்திற்காக தேர்ந்தெடுத்தது ஏன்? ஆபத்து வரும்போது ஆமையானது, தன் உறுப்புகளை ஓட்டிற்குள் அடக்கி, பாதுகாத்துக்கொள்ளும் தன்மையுடையதாகும். அதேபோல மனிதனும் தீய சிந்தனைகள் எனும் அலைகளால் தாக்கப்படும்போது, தன் மனதைக் கட்டுப்படுத்தி, நன்மை பெற வேண்டுமென்பதே கூர்ம அவதாரம் உணர்த்தும் கருத்தாகும். கீதையை உரைக்க
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தபோதுகூட கர்மயோகியாக இருப்பவன் ஆமையைப்போல உலகப் பொருட்களிலிருந்தும் தன்னுடைய ஐம்புலன்களை இழுத்துக்கொள்கிறான் என்று கூறினார். ஸ்ரீமத் பகவத் கீதை 2: 58: மேலும், எப்போது இந்த யோகி ஆமையானது தன் அங்கங்களை செய்வது போலப் புலன்களை இந்திரிய வியங்களினின்று எல்லா வகையிலும் உள்ளே இழுத்துக்கொள்ளுகின்றானோ அவனுடைய ஞானம் உறுதியாக நிலைபெற்றதாகும்”.

இவ்வாறு நற்கருத்துக்களை உணர்த்தும் ஆமையைப்பற்றி பழமொழி ஒன்று உள்ளது. ஆமை புகுந்த வீடு உருப்படாதுஎன்பார்கள். அப்படியானால் இறைவன் ஆமை வடிவம் எடுத்தது சரிதானா என்ற கேள்வி எழும்புகிறது. இங்கு ஆமை என்று கருதப்படுவது பொறாமை, இல்லாமை, கல்லாமையாகும். பொறாமை புகுந்த மனம் உருப்படாது என்பதே இந்த பழமொழியின் உண்மைப் பொருளாகும். ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க(ல்) ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்துஎன்று வள்ளுவர் கூறியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரும், வள்ளுவரும் சுயகட்டுப்பாட்டிற்கு உதாரணமாக ஆமையை கூறுகிறார்கள். திருமூலரோ, நீண்டநாள் வாழ்வதற்கு ஆமையை உதாரணமாக கூறுகிறார். உயிரியல் கல்விபடி நீண்ட நாள் வாழும் பிராணி ஆமையாகும். ஆமையானது முந்நூறு வருடம் உயிர் வாழ்வதற்கு காரணம் நிதானம் மற்றும் ஒரு நிமிடத்திற்கு ஐந்திலிருந்து எட்டு முறைதான் சுவாசிக்கிறது என்ற உண்மையும் காரணமாகும். அவை மிகவும் நிதானமாக சுவாசிப்பதால் அவற்றின் ஆயுள் நீடிக்கிறது. இதைப்பற்றி ஸ்ரீமந் நாராயணர்
ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியதை பார்ப்போம். குறைகுடம் கூத்தாடும், நிறைகுடம் தளும்பாது. கடலின் ஆழத்திலுள்ள தண்ணீர் அதிகமாக அசையாது, மேலேயுள்ள தண்ணீர் இரையும். அதைப்போல உண்மையை, சத்தியத்தை அறிந்தவர்கள் அதிகமாக பேசாமல் அடக்கமாக இருப்பார்கள். அதிகமாக பேசுவது, மற்றவர்களின் காரியங்களைப்பற்றி அறிந்துகொள்ள ஆவலினால் சிலர் பேசிக் கொண்டேயிருப்பார்கள். அப்படி செய்கிறவர்கள் தங்கள் சக்தியை இழந்துபோகிறார்கள். பேசுவதினால் களைப்படையவில்லை என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் அவர்களின் ஆன்மீக சக்தியானது குறைந்து விடும். மூச்சை அதிகமாக உள்ளே இழுக்க வேண்டும். மூச்சை வெளியே விடும்போது சிறிதளவே வெளியே விட வேண்டும். அதிகமாக நாம் பேசிக்கொண்டிருக்கும்போது சுவாசிக்கின்ற காற்றானது அதிகமாக வெளியே வருகிறது. அது உங்களை கொல்லுகிறது. உலகத்தை படைத்த இறைவன் உங்கள் மனதில் வசிப்பாரென்றால் இந்த உலகம் சிறியதாக தென்படும். அத்துடன் உங்கள் பேச்சானது குறைவாகவும் இருக்கும். உங்களிடம் இறைவன் இல்லையென்றால் சகலமும் பெரியதாக தோன்றும். நான் ஒரு ஊமை என்று நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது உங்களுக்குள் இருக்கும் சக்தி சேமிக்கப்படுகிறது, செலவழிக்கப்படுகிறதில்லை. பேசுவதினால் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். மூச்சை நன்றாக உள்ளே இழுத்து சுவாசிக்க வேண்டும். அதிகமாக பேசி மூச்சை அதிகமாக வெளியே விடாதீர்கள். நாம் உணவு பற்றாக்குறையினால் உயிரிழக்கிறதில்லை. அதிகமாக பேசுவதினால் உயிரிழக்கிறோம்என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார்.

முயலும் ஆமையும் யார் முதலில் வருவார்கள் என்று பந்தயம் வைத்து ஓடிய கதை நம் எல்லாருக்கும் தெரியும். விவேகமே வெற்றியை தரும் என்று அந்த கதை நமக்கு கூறுகிறது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இக்கதைக்கு புதிய கருத்தை கூறுகிறார். ஜீவன் முக்தியைப் பெற வேண்டும் என்ற ஓட்டப்பந்தயத்தில் அதைப் பெறுவோம் என்ற நிச்சயம், நம்பிக்கை உறுதிப்பாடுள்ளவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். அந்த நிச்சயத்தை ஏற்கனவே பெற்றவர்களோ அல்லது உடையவர்களோ வெற்றியை பெற முடியும்.

அத்துடன் ஆமையானது கடற்கரை மணலில் முட்டையிட்டு வந்துவிடும், அதன்பின்னர் முட்டையிலிருந்து வெளியே வரும் ஆமைகள் நிலவின் வெளிச்சத்தின் உதவியினால் தன் தாயை சென்றடையும். ஆமை முட்டையிட்டு வந்துவிடுவதைப்போல இறைவன் தனக்கானவர்களை தெரிந்துகொண்டு அவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார். சரியான நேரம் வரும்போது ஆமைக் குஞ்சுகள் தாயை நோக்கி செல்வதைப்போல இறைவனில் பாகமானவர்கள் வேதம் என்ற வெளிச்சத்தினால் அவரை அடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர் ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல் ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டேஎன்கிறார். திருமந்திரம் 2264, 2304 மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால், ஆமையைவிட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா மனுஜோதி ஆசிரமத்தை ஸ்தாபித்த முக்கிய குறிக்கோள் ஜீவன் முக்தியை ஆராய்ச்சி செய்வதேயாகும். ஜீவன் முக்தியை பெறுவதற்கு முன்பாக மனிதன் எவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழலாம் என்பதைக் குறித்து அடுத்த இதழில் பார்க்கலாம்.

– தொடரும்….

———✡✡✡✡✡✡———-

Filed under: ஆன்மீக கருத்து