தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கீதாஞ்சலி – 9

கீதாஞ்சலி – 9

தோழனே! நீ ஒருவன்தான் என்னுடைய ஒரே நண்பன். என் உயிரினும் இனியவனே! கனவைப்போல் என்னைப் பாராமுகமாக கடந்து சென்று விடாதே!

அவர் வந்து என் அருகில் உட்கார்ந்தார், நான் எழுந்திருக்கவில்லை. நான் மோசம் போனேன்! என்ன பாழும் தூக்கம்! ஐயோ! என் இரவுகள் எல்லாம் ஏன் வீணாயின? ! அவர் வருகையை என் தூக்கத்தில் உணர்ந்தபோதிலும் நான் ஏன் அவரைப் பார்க்க முடியாமல் போகிறது?

இறைவனிடம் கனவைப்போல் என்னைப் பார்த்த பின்னரும் கடந்து சென்று விடாதேயும் என்று கேட்ட கவிஞரிடம் இறைவன் அருகில் சென்று உட்கார்ந்தபோது கவிஞரால் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. ஆகையால் பாழாய்ப்போன தூக்கத்தினால் என்னால் அவரை பார்க்க முடியாமல் போனதே என்கிறார். இறைவன் அநேக சமயங்களில் நம் அருகே வந்து உட்காருகிறார். ஆனால் நாம் தூங்குகின்றோம். நாம் ஏன் அவ்வாறு தூங்குகிறோம்? தூக்கத்தை உதறி விட்டு நாம் எழுந்திருக்கலாம். ஆனால் நாம் அவ்வாறு செய்கிறதில்லை. அன்பில் பற்றாக்குறை உள்ளது. அதினால் நாம் அவ்வாறு தூங்குகிறோம். எழும்பி அவரை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்குகிறதில்லை என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விளக்கம் கூறுகிறார்.

என்னுடைய இரவுகள் எல்லாம் அவரை காணாமல் வீணாகிவிட்டன என்று கவிஞர் அங்கலாய்க்கிறார். அவர் வருகையை என் தூக்கத்தில் உணர்ந்தபோதிலும், நான் ஏன் அவரைப் பார்க்க முடியாமல் போகிறது? இறைவன் கவிஞரின் அருகில் வந்து உட்கார்ந்தபோது, அவரின் சுவாசக்காற்று அவர்மேல் பட்ட பின்னரும் அவரால் தூக்கத்திலிருந்து எழும்பி இறைவனை பார்க்க முடியவில்லை.

ஒளியே! நீ எங்கிருக்கிறாய்! கிளர்ந்தெழும் ஆசையால் அதைத் தூண்டிவிடு. உன் வாழ்க்கையின் உயிர் மூச்சால் காதல் விளக்கத்தைத் தூண்டிவிடு”

இறைவன்மேல் ஆசையை, அன்பை தூண்டிவிடு என்று கவிஞர் கூறுகிறார். “எனக்கு வேண்டியது விடுதலை அதற்காக நான் ஏங்கும்பொழுது நான் மிகவும் வெட்கப்படுகிறேன். விலைமதிக்க முடியாத பொருள் உன்னிடம் இருக்கின்றது என்று எனக்குத் தெரியும். மேலும் நீ என்னுடைய உற்ற நண்பன். ஆனாலும் என் அறையினின்று பயனற்ற மதிப்பில்லாத பகட்டுத் தகட்டைக்கூட எறிவதற்கு எனக்கு மனமில்லை”. பயனற்ற மதிப்பில்லாத காரியங்கள் உங்கள் வீட்டிலிருந்தால் இறைவன் எவ்வாறு வர முடியும்? என்பதுதான் இக்கவிதை வரிகளின் பொருளாகும்.

முதலாவதாக பயனற்ற மதிப்பில்லாதவைகள் எவை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதன்பின்னர் அவற்றை நம் வீட்டிலிருந்து அகற்ற வேண்டும். அப்பொழுது இறைவன் வீட்டிற்கு வருவார். விவிலியத்தில் பயனற்ற மதிப்பில்லாதவைகளை தூர எறிந்தால்தான் நாம் இறைவன் வாசம் செய்யும் ஆலயமாக முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

II கொரிந்தியர் 6:19:உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிற தென்றும், நீங்கள் உங்களுடையவர் களல்லவென்றும் அறியீர்களா?”

II கொரிந்தியர் 6:16,17: “……நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்”.

சினிமா நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை ஒரு சிலர் வீட்டில் வைத்துக்கொள்கிறார்கள். இறைவனின் திரு உருவப்படத்தை வீட்டில் வைத்திருக்கும்போது அவர்களின் படங்களை வைக்கக்கூடாது. உலக அதிசயமான தாஜ்மஹால் பொம்மை, தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மை, கரடி பொம்மைகளை வீட்டில் அலங்காரப் பொருளாக வைக்க முடியாது. பொம்மைகளை வைத்து குழந்தைகள் தான் விளையாடும். நாம் அவற்றை அலங்கார பொருளாக வைக்கக்கூடாது. உறவினர்கள், தாய், தந்தையர் புகைப்படத்தை இறைவனின் திருவுருவப் படத்தினருகே வைக்கும்போது, அவர்களுக்கும் இறைவனின் ஸ்தானத்தை கொடுக்கிறோம் என்றாகி விடுகிறது. பெற்றோர்களை மதிக்க வேண்டும், போற்ற வேண்டும். ஆனால் அவர்களும் மானுடர்கள். அவர்களை இறைவனுக்கு இணையாக்கக்கூடாது.

இக்கருத்தை நாம் திருக்குர்ஆனில் பார்க்கிறோம். முதலாம் அத்தியாயம் ஸூரா 4:48: நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்; இதனைத் தவிர மற்ற எதனையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான்; எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர், திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாகக் கற்பனை செய்துவிட்டார்”. அது இறைவனுக்கு பிரியமான செயலாகாது. தளகட போட்டிகள், கால்பந்து, கூடைபந்து மற்றும் அநேக போட்டிகளில் நாம் பரிசு வாங்கியிருக்கலாம், பதக்கம் வென்றிருக்கலாம். அவற்றை நாம் வீட்டில் எல்லாரும் பார்க்கும் விதமாக வைக்கும்போது, நாம் நம்முடைய மகிமையை பிறருக்கு எடுத்துக் கூறுகிறோம். ஆனால் அந்த தாலந்தை, திறமையை கொடுத்தவர் இறைவன். அவருடைய அருளை, மகிமையை கூறுவதாக அவையில்லை. ஆகையால் அவற்றை நாம் வைக்கக்கூடாது.

கீதை 10:41:எந்தெந்த வஸ்து என் விபூதியை விளக்குவதாகவோ, லக்ஷ்மி கடாட்சம் பொருந்தியதாகவோ, உயர்ந்த சக்தி வாய்ந்ததாகவோ உள்ளதோ, அந்த வஸ்து என்னுடைய சக்தியின் அம்சத்தில் தோன்றியது என்று அறிதல் வேண்டும்”. மகிமை வஸ்துக்கள் யாவும், வெளிப்பிரகாரமாக நல்லதும், அழகானதும், அறிவைப் போன்றும் வல்லமையானதும், மனிதனால் போற்றப்படுகிற எந்த காரியமும் என்னிடத்திலிருந்து வருபவைகள். என்னுடைய மகிமையின் வெளிப்படுத்தலின் ஒரு சிறிய பகுதியாகவும் உள்ளது. யாரேனும் ஒருவன், தான் அறிவாளி என்று நினைத்து மகிமையை தானே எடுத்துக்கொண்டால், இறைவனுடைய வல்லமையை தவறாக உபயோகிக்கிறவனாவான் என்று இறைவன் கூறுகிறார்.

டி.வி. பார்ப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கும் அல்லது வேறு எதற்காவது அதிக முக்கியத்துவம் கொடுத்தால், அது இறைவனின் பார்வையில் அசுத்தமான காரியங்களாகும். நாம் அமெரிக்கா செல்லவிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். வீட்டிலுள்ள எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல முடியுமா? முடியாது. அமெரிக்கா செல்வதற்கே நாம் அநேக காரியங்களை தியாகம் செய்யும்போது, இறைவன் நம் வீட்டில் வாசம் செய்ய அவருக்கு பிரியமில்லாத காரியங்களை அகற்றுவது அவசியமல்லவா? இறைவனின் பார்வையில் மதிப்பற்ற, பயனற்ற அசுத்தமான காரியங்களை ஒழித்து நம் வீட்டையே ஶ்ரீநிவாசமாக்குவோம்!

தொடரும்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்