தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கீதாஞ்சலி-8

கீதாஞ்சலி-8

            அவன் கைகளில் கடைசியாக அர்ப்பணிப்பதற்கு,

            அவன் அருளுக்காகக் காத்திருக்கிறேன்

            அவர்கள் சட்டத்தின் துணைகொண்டு வருகிறார்கள்.

            ஒழுங்கு முறைகளைக்கொண்டு விரைவில்

            என்னை கட்ட வருகிறார்கள். ஆனால் எப்பொழுதும்

            நான் நழுவி விடுகிறேன். ஏனெனில்

            உன்னிடம் என்னை அர்ப்பணிப்பதற்காக

            உன் அன்பிற்கு நான் காத்திருக்கிறேன்”.

எல்லா மத சம்பந்தமான ஸ்தாபனங்களும், சங்கங்களும் தங்களுடைய மதத்தில் சேரும்படி கேட்டு கவிஞரிடம் வருகிறார்கள். அதைத்தான் அவர் “ஒழுங்கு முறைகளைக் கொண்டு விரைவில் என்னை கட்ட வருகிறார்கள்” என்று கூறுகிறார். ஸ்தாபனங்களிலும், சங்கங்களிலும் சேரும்போது அவர்களுக்கென்று தனி சட்டங்கள், ஒழுங்குமுறைகள் இருக்கின்றது. அவற்றால் தன்னை வரைமுறைப்படுத்த விரும்புகிறார்கள் என்று கவிஞர் கூறுகிறார்.

இப்படிப்பட்ட சட்டங்களினாலும்,  ஒழுங்கு முறைகளினாலும் அவர் கட்டப்படவில்லை. நம் நாட்டின் தேசிய தந்தை மகாத்மா காந்தியடிகள் அவரை அரசியலில் சேரும்படி அழைத்தபோது மறுத்து விட்டார். எவ்விதமான கட்டுகளினாலும் கட்டப்பட அவர் விரும்பவில்லை. இப்பொழுது வீதிக்கு ஒரு கட்சி என்ற அவல நிலை தோன்றியிருக்கிறது.

ஆனால் தேசத் தந்தை அழைத்தபோதும்  நோபல் பரிசு பெற்ற கவிஞர் மறுத்திருக்கிறாரென்றால் அது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.  அவர் ஏன் யாராலும் கட்டப்பட விரும்பவில்லை? ஏனெனில் அவர் தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிக்க காத்துக் கொண்டிருந்தார். “ஏனெனில் என்னை அர்ப்பணிப்பதற்காக உன் அன்பிற்கு நான் காத்திருக்கிறேன்” என்ற வரிகளிலிருந்து அதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இதை புரிந்துகொள்ளாத மனிதர்கள், அவர்மேல் கோபமடைந்து சென்று விடுகிறார்கள் என்பதை இவ்வரிகளிலிருந்து அறிந்து கொள்கிறோம். “என்னைக் கூப்பிட வந்தவர்கள் பலனில்லாமல், கோபத்தில் திரும்பி இருக்கிறார்கள்”.

            “யார் கண்ணிலும் படாமல் இரவைப் போல

            நிசப்தமாக, மழை மாத ஜூலையில்

            அடர்ந்த நிழலில் நீ ரகசியமாக நடக்கிறாய்”

இறைவன் கல்கி அவதாரமாக பூமிக்கு வருவதை தேசிய கவிஞர் காண்கிறார். ஆகையால்தான் அவர் இவ்வாறு கூறுகிறார். 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தம்முடைய விஸ்வரூபத்தை காண்பித்தார். இதைத்தான் கவிஞர் மழை மாத ஜூலையில் நீ இரகசியமாக நடக்கிறாய் என்கிறார். ‘இரகசியமாய் நடக்கிறாய்’ என்று கவிஞர் ஏன் கூறுகிறார்? இதற்கு பதில் விவிலியத்தில் உள்ளது.

வெளிப்படுத்தல் 16:15: “இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்” II பேதுரு 3:10: “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்”. I தெசலோனிக்கேயர் 5:2: “இரவிலே திருடன் வருகிற விதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்”.

இறைவன் இயேசுபிரானாக அவதரித்தபோது, அடுத்ததாக வரக்கூடிய அவதார புருஷர் திருடனைப்போல வருவார் என்று கூறினார். திருடன் எல்லாரிடமும் கூறிவிட்டு திருட வருவானா? இல்லை. இரகசியமாக திட்டமிட்டு நள்ளிரவில் வருகிறான். இறைவனும் இந்த யுக்தியை கையாளுகிறார். இரகசியமாக திருடனைப்போல வருவதின் அர்த்தமாவது: அவர் இறைவன் என்பதற்கு அறிகுறி இல்லாமல் சாதாரண மனிதனாக பிறந்து எந்தவிதமான மந்திரத்தையும், அற்புதத்தையும் செய்து பிரசித்தி பெற்றவராக இல்லாமல், எளிமையின் வடிவமாக வந்து, இந்த பூமியில் தம்முடைய மக்களை அழைக்கிறார். இதைத்தான் கவிஞர் நீ இரகசியமாக நடக்கிறாய் என கூறியுள்ளார்.

“இன்று எப்பொழுதும் பிரகாசமாக இருக்கும் நீலவானம், மேகத்தின் திரையால் மூடப்பட்டு ‘உஸ்’’ என்று விடாமல் வீசும் கிழக்கத்திய காற்றின் கூப்பாட்டையும், அலட்சியம் செய்து காலைப்பொழுது இன்னும் இன்று புலரவில்லை”. கிழக்கத்திய காற்றின் கூப்பாடு என்பது கிழக்கு தேசத்திலிருந்து கூறப்படும் கல்கி மகா அவதாரத்தின் கொள்கைகளாகும். காலைப்பொழுது இன்னும் இன்று புலரவில்லை. அதாவது இறைவன் பூமியிலிருக்கும்போது அது பகல் நேரமாகும். அவர் பூமியிலிருந்து சென்று விட்டால் இரவு நேரம் வருகிறது என்பதுதான் இதின் பொருளாகும்.

“காடுகளில் இனிய ஓசை ஓய்ந்து விட்டது. ஒவ்வொரு வீடும் மூடப்பட்டிருக்கிறது. ஒருவரும் இல்லாத இந்த தெருவில், நீ ஒருவன்தான் தன்னந்தனியான வழிபோக்கன்”. ஒவ்வொரு வீடும் மூடப்பட்டிருக்கிறது என்றால் மனிதர்கள் எல்லாரின் மனக்கதவும் மூடப்பட்டிருக்கிறது. அதினால் இறைவன், தான் வாசற்படியில் நின்று கதவை தட்டுகிறேன் என்று விவிலியத்தில் இயம்புகிறார். யார் வீட்டிலாவது தங்கும் வழிப்போக்கனாகவும், இறைவன் இருக்கிறார் என்று கவிஞர் கூறும் கருத்தை விவிலியமும் கூறுகிறது.

எரேமியா 14:8: “இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும், இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்?” இயேசுபிரான் தம்முடைய சீஷர்களின் வீட்டிலே தங்கினார்.  இச்சம்பவம் இயேசுபிரானின் காலத்திலும் நடந்தது. இனிமேலும் நடக்கவிருக்கிறது. ஆதலால்தான் விருந்தோம்பல் பழக்கம் தமிழ்நாட்டில் போற்றப்படுகிறது. யார் வந்தாலும் இன்முகத்தோடு உபசரிக்க வேண்டும்.

ஏனென்றால் அது இறைவனாகவும் இருக்கலாம் அல்லது இறைதூதனாகவும் இருக்கலாம். “அதிதி தேவோ பவ” என்று அதினால்தான் கூறப்படுகிறது. விவிலியத்திலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது. எபிரெயர் 13:2: “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.” அதிதிகளை உபசரிப்போமென்றால் நாம் இறைதூதர்களின் பாதுகாப்பையும், இறைவனின் அருளையும் பெற்றுக்கொள்வோம்.

– தொடரும்…

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்