தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கீதாஞ்சலி – 7

கீதாஞ்சலி – 7

“உன் உலகத்தில் எனக்கு செய்வதற்கு வேலை இல்லை. என்னுடைய பயனற்ற வாழ்க்கை, குறிக்கோள் இல்லாத நாதங்களில் வெளிப்படுகின்றது. நேரம் வரும்போது, என் தெய்வமே உன் சந்நிதானத்தில் உன் எதிரே நின்று பாடுவதற்கு எனக்கு உத்தரவிடு! இந்த உலகின் பெருவிழாவிற்கு எனக்கு அழைப்புக் கிடைத்து விட்டது. ஆகவே என் வாழ்வு வளம் பெற்று விட்டது. என் கண்கள் பார்த்து விட்டன. என் காதுகள் கேட்டுவிட்டன”.

இந்த உலகின் பெருவிழாவிற்கு எனக்கு அழைப்பு கிடைத்து விட்டது என்று கவிஞர் கூறுகிறார். “உலகின் பெருவிழா” என்பது என்ன? அதுதான் இறைவன் எல்லாரையும் அழைக்கும் கலியாண விருந்தாகும். கலியாண விருந்தைக் குறித்து இயேசுபிரான் ஒரு கதையை கூறியுள்ளார். “இறைவனுடைய ராஜ்யம் என்பது, தன் குமாரனுக்கு கலியாணஞ் செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. ராஜா தன் பணிவிடைக்காரரிடம் அழைக்கப்பட்டவர்களை கலியாணத்திற்கு அழைத்து வரச்சொல்லும்படி அனுப்பினான். ஆனால் அழைக்கப்பட்டவர்கள் வர மறுத்துவிட்டு, நொண்டிச் சாக்கு கூறினார்கள். ஒருவன் நான் ஒரு நிலத்தை வாங்கினேன். நான் அவசியமாக அதை சென்று பார்க்க வேண்டும், என்னை மன்னிக்கும்படி கூறு என்று ராஜாவின் பணிவிடைக்காரரிடம் கூறினான்.

வேறொருவன் ஐந்தேர் மாடுகளை வாங்கினேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி கூறு என்றான். மூன்றாமவன் ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறேன். அதினால் என்னால் வர முடியாது என்று கூறினான். ராஜாவின் பணிவிடைக்காரர் ராஜாவிடம்: அழைக்கப்பட்டவர்கள் கூறிய நொண்டிச்சாக்குகளை அறிவித்தனர். அப்பொழுது ராஜா அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனும் என் விருந்தை ருசி பார்ப்பதில்லை என்று கூறி, நீங்கள் பட்டணத்தின் தெருக்களிலும், வீதிகளிலும் சென்று ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும் விருந்திற்கு அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். அதன்பின்னரும் விருந்து சாலையில் இடம் இருக்கிறது என்றனர். அதற்கு ராஜா விருந்துசாலை நிறையும்படியாக பெருவழிகளுக்குச் சென்று நல்லவர்களையும், கெட்டவர்களையும் வரும்படி வருந்தி அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றார்”.

இதற்கு ஸ்ரீமந் நாராயணர் லஹரி கிருஷ்ணா பின்வருமாறு விளக்கம் கூறுகிறார்: யாராவது ராஜாவின் கலியாண விருந்திற்கு வரமாட்டேன் என்று கூறுவார்களா? இல்லை. ஆனால் இங்கே மூன்று பேர் வரமுடியாது என்றனர். அது மூன்று மதங்களை குறிக்கிறது. நான் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளேன் என்று ஒரு மதத்தினர் கூறுகிறார்கள். அவன் தன் மனைவியை கலியாணத்திற்கு அழைத்துச் செல்லலாமே! ஓ! நாங்கள் கோயிலுக்குச் செல்வோம் என்கிறார்கள். இன்னொருவன் நிலத்தை வாங்கினேன், அதை சென்று பார்க்க வேண்டும் என்கிறான். நிலத்தைப் பார்க்காமல் யாராவது அதை வாங்குவார்களா? இவர்கள் நான் புனித ஸ்தலத்திற்கு சென்றால்தான், இறைவனை காண முடியும் என்பார்கள்.

ஐந்தேர் மாடுகளை வாங்கினேன், நான் அவற்றை சோதித்துப் பார்க்க வேண்டும் என்று கூறியவன் இன்னொரு மதத்தை சேர்ந்தவனாவான். யாராவது சோதித்து பார்க்காமல் ஏர்மாடுகளை வாங்குவார்களா? மதங்களால் இறைவன் கூறும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. ராஜா என்பவர்தான் இறைவன். இறைவன் ஆன்மீக உணவை அளிக்க மக்களை அழைக்கிறார். அதைத்தான் கலியாண விருந்து என்கிறோம். ஆனால் அழைக்கப்பட்டவர்கள் பெயரையும், புகழையும் எதிர்பார்த்ததினால் அவர்களால் வர முடியவில்லை என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விளக்கமளிக்கிறார்.

ஆன்மீகம் என்பது எளிய மக்களுக்குரியது. மதங்களை கடந்து வாழும் எல்லா மக்களுக்குமுரியது. “இந்த விருந்தில் என் பங்கு யாழில் இசை எழுப்புவதேயாகும். என்னால் செய்ய முடிந்ததை எல்லாம் செய்து விட்டேன். நான் கேட்கிறேன், இப்பொழுது கடைசியில் நேரம் வந்து விட்டதா? நான் இப்பொழுது உள்ளே போகலாமா? உன் முகத்தைப் பார்க்கலாமா? உனக்கு என்னுடைய மௌன அஞ்சலியை செலுத்தலாமா?”

அப்படி இறைவன் அழைத்த உலகின் பெருவிழாவிற்கு அழைப்பு கிடைத்திருக்கிறது என்று கவிஞர் கூறுகிறார். உலகின் பெருவிழாவில் தேசிய கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் கலந்துகொண்டு விட்டார் என்பதை அவர் எழுதிய கவிதையிலிருந்து நாம் அறிந்துகொள்ளுகிறோம். அதனுடன் அவர் மதங்களை கடந்து வாழ்ந்தவர் என்பதும் தெள்ளத் தெளிவாக புலப்படுகிறது.

– தொடரும்…

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்