தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கீதாஞ்சலி

கீதாஞ்சலி

“நீ என்னிடம் பெருமகிழ்ச்சி கொண்டிருக்கிறாய். நான் உன்னை முற்றிலும் உணர்ந்திருக்கிறேன். நீ இறங்கி என்னிடம் வந்திருக்கிறாய். எல்லாம் வல்ல இறைவா நான் இல்லாவிட்டால் நீ யாரிடம் அன்பு செலுத்துவாய்? என் உள்ளத்தில் உன் இன்பம் எல்லையில்லா விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது. என் வாழ்வில், உன் எண்ணம் எப்பொழுதும் ஈடேறிக் கொண்டிருக்கிறது.

நான் இல்லையென்றால் நீ யார்மீது அன்பு செலுத்துவாய்? நான் எவ்வாறு உம்மை ஒரு மனிதனாக காணமுடியும்? நீர் என்னை சிருஷ்டித்தபடியால் உம் அன்பை நீ என்மேல் காண்பிக்கிறாய். நீ என் இதயத்தில் சதா நடனம் புரிகின்றாய் என்று கவிஞர் கூறுகிறார்.

இறைவனைப்பற்றி நன்கு கிரஹித்து உணர்ந்தவர்களில் இரவீந்திரநாத் தாகூரும் ஒருவர். அதினால்தான் என் உள்ளத்தில் உன் இன்பம் எல்லையிலா விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது என்பது இவரின் கருத்து. இதைப்போன்றே மற்றவர்களும் கூறுகிறார்கள்.

“தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை!

வான்ஒரு கூறு மருவியும் அங்குஉளான்!

கோன்ஒரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற

தான்ஒரு கூறு சலமயன் ஆமே.

– திருமந்திரம் 112

இறைவன் என்று பேசினால் அவனது இருப்பு எப்படி, அவனது வண்ணம் எவ்வண்ணம், யார் அவன் என்ற கேள்விகள் வரும். ‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாதே’ என்று, விடை சொல்ல முடியாமல் கைவிரித்த தருணங்களும் உண்டு. திருமூலரைப்போல முரட்டு துணிச்சலுடன் சுட்டிக்காட்ட முயன்ற தருணங்களும் உண்டு. இறைவன் எங்கிருக்கிறான், எப்படி இருக்கிறான் என்று கேட்பவர்களே! நீங்கள் பார்க்கின்ற எல்லாவற்றிலும் அவன் இருக்கிறான். உங்களுக்கு உள்ளே நின்று இயக்குகின்றவனாகவும் அவன் இருக்கிறான். அவனே இயக்கமாகவும் இருக்கிறான். இறைவன் அசைவில்லாமல் நிலைகுத்தி நிற்கிறவன் அல்லன். அசையாமல் இருந்த இடத்தில் இருக்க அவன் என்ன ஜவுளிக் கடைப்பொம்மையா? அவன் இயக்கமயமாக இருக்கிற சலமயன். ஆடிக்கொண்டே இருக்கிறவன். சலமயன் என்றால் நீரைப்போல அசைந்து மாற்றத்தை ஏற்படுத்துகிறவர்.

“காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்

மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்

சாலும் அவ்ஈசன் சலவியன் ஆகிலும்

ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய்தானே

– திருமந்திரம் 182

காலையில் எழுகிறோம், உண்கிறோம், உடுத்துகிறோம், திரிகிறோம், மாலையில் உறங்குகிறோம். வாழ்நாள் முடிகிறது, வீழ்நாள் வருவதற்குள் அவனை தேடிக் கொள்ளுங்கள் என்றால், அவன் சுடுகாட்டையே அரங்கமாக்கி ஆடிக்கொண்டிருக்கிற சலவியன். இறைவன் சல சல என்று ஓடுகிற நீரைப்போல எப்பொழுதும், எல்லாவற்றையும் இயக்குபவனாதலால் சலவியன் என கருதப்படுகிறான். எந்த சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருக்கிறானோ? எங்கே தேடுவது என்கிறவர்களே! நினையுங்கள்! உங்கள் உள்ளக்காட்டிலும் ஆட அவன் வருவான். இவ்வாறு தன் அடியார்களின் உள்ளத்தில் விளையாடுவது இறைவனுக்கு பிடித்தமான பொழுது போக்காகும். அத்துடன் அந்த பொழுதுபோக்கினால் ஒரு நன்மையும் ஏற்படுகிறது என்பதை எறிபத்தர் நாயனாரின் வாழ்க்கையில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

எறிபத்தர் கரூரின்கண் அமைந்திருந்த திருஆனிலைக் கோயிலில் உறைந்து அருட்பாலித்து வரும் இறைவனை வழிபடுவதை தன் வழக்கமாக கொண்டு வந்தார் சிவகாமியாண்டார் என்னும் அடியவர். இவர் வைகறைப்பொழுதில் எழுந்து நீராடித் தூய்மை உடையவராய்த் தன் வாயினைத் துணியால் கட்டிக்கொண்டு நந்தவனம் சென்று மலர்களைப் பறிப்பார். பின் அவற்றை பூக்கூடையில் கொண்டுசென்று இறைவனுக்கு படைப்பார்.

இவ்வாறே ஓர் அஷ்டமி நாளன்று இறைவனுக்கு தொண்டு செய்வதற்காக பூக்கூடையுடன் தெருவில் சென்று கொண்டிருந்தார். அவ்வேளையில் சோழ மன்னனின் பட்டத்து யானையானது பாகனுக்கும் அடங்காமல் மதம் பிடித்து தெருவில் ஓடி வந்தது. அந்த யானை சிவகாமியாண்டார் தன் கையில் வைத்திருந்த பூக்கூடையைப் பிடுங்கி தெருவில் எறிந்ததுடன், அந்த பூக்களையும் தன் காலால் மிதித்து நாசம் செய்தது. அதனைக் கண்டு கோபம் கொண்ட சிவகாமியாண்டார், அந்த யானையினைத் தனது தண்டத்தால் அடிக்க ஓடி, தன் வயதின் இயலாமையின் காரணத்தால் தவறி விழுந்தார். அந்நிலையிலும் சிவபெருமானை நினைத்து சிவதா, சிவதா என்று அரற்றினார்.

சிவகாமியாண்டாரின் அலறலைக் கேட்ட எறிபத்தர் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவருக்கு கடும் கோபத்தினை விளைவித்தது. யானையின் முன்சென்ற அவர், தமது மழுவினால் யானையின் துதிக்கையினை வெட்டி சாய்த்தார்.

தனது யானைக்கும், யானைப் பாகர்களுக்கும் நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்த சோழ மன்னன் அவ்விடத்திற்கு வந்தான். அங்கு கையில் மழுவுடன் நின்றிருந்த எறிபத்தரைக் கண்டான். தன்னுடன் வந்திருந்த படையினரைப் பின் நிறுத்தி, தான் மட்டும் முன்வந்து எறிபத்தரை வணங்கி இங்கு நிகழ்ந்தது யாது? என வினவினான். அதற்கு எறிபத்தர் யானையின் செயலினையும், அதன் செயலினை தடுக்காது நின்ற பாகர்களின் நிலையினையும் எடுத்து கூறினார். அதனை கேட்ட அரசன் தனது பட்டத்து யானை செய்த செயலிற்கு இத்தகைய தண்டனை போதாது, பட்டத்து யானையின் உரிமையாளனான தானே தண்டிக்கப்பட வேண்டியவன் என தாழ்ந்து நின்றான்.

மேலும் குற்றம் இழைத்தவனாகிய தன்னை மங்கல மழுவால் தண்டிப்பது அந்த ஆயுதத்திற்குப் பெருமை சேர்ப்பதாகாது. எனவே என்னை இவ்வாளினால் தண்டியுங்கள் என்று தன் உடைவாளினை தந்து நின்றான்.

சோழ மன்னனின் இத்தகைய செயலினைக் கண்ட எறிபத்தர் இம்மன்னன் சிவனடியார்கள்மேல் வைத்திருக்கும் அன்பினை அறிந்தேன் என மனத்தினுள் நினைத்தவராய், மன்னன் கொடுத்த வாளினை வாங்காதவராய் நின்றார். பின்னர் தான் வாளினை வாங்காது விடுத்தால் மன்னன் அவ்வாளினாலே தன்னை மாய்த்துக்கொள்வான் என கருதி அதனைத் தன் கையில் வாங்கிக் கொண்டான். அவரின் செயலினைக் கண்ட மன்னன் தன்னை கொல்லுமாறு வேண்டினான். எறிபத்தரோ இவ்வரசனை கொல்லக்கூடாது என எண்ணித் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள துணிந்தார். அதனைப் பார்த்த மன்னன் பெரியவரின் செயலினால் கெட்டேன் என சென்று தன் வாளினைப் பறித்துக்கொண்டான். அப்பொழுது வானிலே ஒரு அசரீரி எழுந்தது. அன்பர்களே, உங்களது திருத் தொண்டின் பெருமையினை உணர்த்தவே இத்திருவிளையாடலை நிகழ்த்தினேன் என்றது.

 – தொடரும்…

✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்