தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கீதாஞ்சலி -10

கீதாஞ்சலி -10

“என்னை மறைத்துக் கொண்டிருப்பது, புழுதியும், இறப்புமே; இருந்தும், ஆசையோடு அதை அணைத்துக் கொள்கிறேன்.”

தூக்கம் என்பது இறப்பிற்கு சமானம் என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியுள்ளார். அதே கருத்தை இங்கே கவிஞர் கூறுகிறார். தூக்கத்தில் இறைவன் வருவதை உணர்ந்த பின்னரும் எழுந்திருக்காமல் தூக்கத்தை அணைத்துக் கொள்கிறேன் என்கிறார். இறைவனை காணாதபடி தன்னை மறைத்துக் கொண்டிருப்பது புழுதியும் இறப்பும் என்கின்ற தூக்கமாகும். தூங்கும்போது யாராவது எழுப்பினால், தூக்கம் எவ்வளவு சுகமாக இருக்கிறது என்று நாம் எழும்புகிறதில்லை. நன்றாக தூங்குகின்றோம். காலையில் எழுந்து இரவு நேரம் நான் தூங்கும்போது என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி என்று நாம் இறைவனுக்கு கூறுகிறதில்லை.

உண்ணுவதற்கும், உறங்குவதற்கும், பணத்திற்கும், புகழுக்கும் பின்னால் ஓடுவதற்கே நாம் வாழுகிறோம். இதற்காகவா நாம் சிருஷ்டிக்கப்பட்டோம்? சிந்தியுங்கள். “என் கடன் சுமைகள் அதிகம்; என் தோல்விகள் அநேகம். என் அவமானம் கனமானது, இரகசியமானது. இருந்தும், உன்னிடம் என் நலத்தை நாடும்பொழுது, என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு வேண்டிய வரத்தைக் கொடுத்துவிடப் போகின்றீர்களே என்று நான் பயத்தில் நடுங்குகிறேன்”.

நாம் கேட்கின்ற வரம் கிடைக்க வேண்டுமென்றுதான் நாம் ஆசைப்படுவோம். ஆனால் இங்கே கவிஞர் நான் கேட்கும் வரத்தை இறைவன் கொடுத்துவிடுவாரோ என்று பயப்படுகிறேன் என்கிறார். அப்படி என்றால் அவர் என்ன வரத்தை கேட்டிருப்பார்? இந்த கேள்விக்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விடையளிக்கிறார். இறைவன்மேல் அன்பு செலுத்துவதைப் போல கவிஞர் யார்மீதோ அன்பு செய்கிறார். அந்த அன்பு நீங்க வேண்டுமென கேட்கிறார்.

ஆனால் அவர் கேட்பது நடந்துவிட்டால் கவிஞரின் மனம் உடைந்துவிடும். அந்த அன்பு நீங்கிவிட்டால் நான் எவ்வாறு வாழ்வது? என்ற பயம் கவிஞருக்கு ஏற்படுகிறது. அதினால்தான் நான் கேட்கும் வரம் அருளப்படுமோ என்று பயத்தால் நடுங்குகிறேன் என்கிறார். நம் அனைவருக்கும் இத்தகைய அனுபவம் இருக்கிறது. இறைவனைப் பார்க்கிலும் அதிகமாக யார்மீதாவது அன்பு செலுத்துகிறோம்.

அதன்பின்னர் அதை உணர்ந்துகொண்டு, இந்த அன்பு நீங்க வேண்டும் என்கிறோம். அந்த அன்பு நீங்கி விட்டால் நாம் என்ன செய்வது? “அவள் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை” என்று பாடலையும் பாடுகிறோம். “யாருக்காக இந்த தடயத்தை உண்டாக்குகிறேனோ அவன் இந்த இருட்டறையில் அழுது கொண்டிருக்கிறான். எப்பொழுதும் சுற்றிலும் சுவர் எழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். நாளுக்கு நாள் வானத்தை நோக்கி இந்த சுவர் மேலே எழும்பும்போது, நிழலில் உண்மை வாழ்க்கை பார்வையினின்றும் மறைந்து விடுகிறது”.

இங்கே கவிஞர் மிக அழகான உவமையை கையாண்டிருக்கிறார். இருட்டறை என்பது நமது உடல். அதினுள்ளே அழுது கொண்டிருப்பவன் தான் நம் ஆன்மா. இருட்டறை என்ற உடம்பை பேணுகின்றோம். அதுதான் சுவர் எழுப்புவதாகும். உடலில் ஐம்புலன்களை திருப்திபடுத்திக் கொண்டேயிருக்கிறோம். அதுதான் வானத்தை நோக்கி சுவர் மேலே எழுப்பப்படுவதாகும். இதினால் உள்ளே உள்ள உண்மையான ஆன்மா வாடி, மெலிந்து கடைசியில் அது மறக்கப்பட்டு விடுகிறது என்று கவிஞர் கூறுகிறார்.

உடலை பேணி, ஆன்மாவை பேண மறந்துவிடுகிறோம் என்று கவிஞர் மிக தெளிவாக எடுத்துக்கூறுகிறார். உடலை பேணுவது என்பது உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வது, தன் இனத்தை காப்பது என்ற மிருக வாழ்க்கையாகும். ஆன்மா என்பது ஒன்று உடலில் உறைகிறது என்பதை முதலில் நாம் உணர வேண்டும். அடுத்த கட்டமாக எவ்வாறு ஆன்மாவைப் பேணுவது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான வாழ்க்கை ஆகும். “என்னுடைய சந்திப்புக்கு நான் தனியாக வந்தேன். இந்த நிசப்தமான இரவில், யார் என்னை பின் தொடர்ந்து வருவது?” “இறைவன் தன்னை பின்தொடர்ந்து வருவதாக” கவிஞர் கூறுகிறார். இப்பொழுது பாருங்கள். நாம் அடிக்கடி தவறுகள் செய்கிற போதிலும் இறைவன் நம்மை அவர்பால் அருகாமையில் இழுத்துக் கொண்டு நமக்கு மெதுவாக கற்றுத் தருகிறார், விரைவாக அல்ல. நாம் இதிலிருந்து இறையன்பை உணர்ந்து கொள்ளலாம். இறைவனை சந்திக்க தனியாக வந்தேன். யார்மேலும் எதற்காகவும் சார்ந்திராமல் இருக்கும்போதுதான் இறைவனை சந்திக்க முடியும் என்ற உண்மையை கவிஞர் கூறுகிறார்.

– தொடரும்…

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்