தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » காலதாமதம் எனும் மெதுவாக செயல்படும் விஷம்!

காலதாமதம் எனும் மெதுவாக செயல்படும் விஷம்!

ஒருமுறை இப்படி நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சாத்தான் காத்திருந்தும் நரகத்திற்கு ஒருவர்கூட வரவில்லை. அவர் நரகத்திற்கு வருபவர்களை வரவேற்க காத்துக்கொண்டிருந்தபோதிலும், உலகம் நல்லபடியாக இயங்கிக்கொண்டிருந்ததாலும், மக்கள் நல்லவர்களாக வாழ்ந்து வந்ததாலும் யாருமே நரகத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையே ஏற்படவில்லை. சாத்தானிற்கு இது மிகவும் கவலையளித்தது. இப்படியே நிலைமை நீடித்தால் நரகத்தை இழுத்து மூடிவிட்டு போய்விட வேண்டியதுதான். எத்தனை நாட்கள்தான் ஒருவருமே இல்லாமல் நரகம் வெறிச்சோடி கிடப்பது? சாத்தானிற்கு இது மிகவும் ‘நரக வேதனையாக’ இருந்தது. வேறு வழியில்லாமல் ‘நரக சபையின்’ அவசரகால கூட்டத்தை உடனே கூட்டினான். கூடியிருந்தவர்களிடம் நிலைமையை சமாளிக்க ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டான். ஒவ்வொருவரும் பல கருத்துக்களை கூறினார்கள். எதுவும் சாத்தானை கவரவில்லை. அப்போது ஒருவன் “சாத்தான் மகா பிரபு! நாம் பூவுலகத்திற்கு சென்று மனிதனிடம் கடவுள் இல்லை என்றும், மதங்கள் எல்லாம் பொய்யானவை என்றும் அவனுக்கு புரியும்படி எடுத்துக்கூறினால் அவன் அதை நம்பி தவறுகள் செய்வான். பிறகு நரகம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிடும்”என்றான். இதைக்கேட்ட சாத்தான் இது சாத்தியப்படாது என்று நிராகரித்துவிட்டான்.

இன்னொருவன் எழுந்து சாத்தானை வணங்கிவிட்டு, “அரசே! பூலோகத்திற்கு சென்று மனிதனிடம் வேதங்கள் எல்லாம் உண்மையையே கூறுகின்றன. கடவுள் இருக்கிறார், சொர்க்கமும் இருக்கிறது. ஆனால் சாத்தான் இல்லை, நரகம் என்பதும் இல்லை. ஆகவே பயப்பட வேண்டாம் என்று கூறினால் மனிதன் சற்று அலட்சியமாகவும், பயமின்றியும் செயல்படத்தொடங்கி பல தவறுகளை செய்வான். பயமில்லாததால் அவன் மதக்கோட்பாடுகளை கைவிடுவான். ஏனெனில் எல்லா மதங்களுமே பயத்தின் அடிப்படையில்தானே செயல்படுகின்றன” என்றான். இதை கேட்ட சாத்தான் இந்த யோசனை ஓரளவிற்கு நன்றாகத்தான் இருக்கிறது. இதைவிட வேறு யோசனை இருக்கிறதா என்று பார்ப்போம் என்றதும், நரகத்தின் மூத்த உறுப்பினர் எழுந்து “எனக்கொரு வாய்ப்பு தாருங்கள் அரசே! நான் மனிதனிடம் போய் எல்லா மதங்கள் சொல்வதும் சரியே என்று முதலில் சொல்வேன். பின்பு கடவுள் இருக்கிறார், சாத்தானும் இருக்கிறார்.

சொர்க்கமும் உண்டு, நரகமும் உண்டு என்று எடுத்துரைத்து, ஆனால் இப்போது அவசரமில்லை. நீங்கள் எதைச் செய்வதானாலும் இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவேன்” என்றான். இந்த யோசனையை சாத்தான் உடனே ஏற்றுக்கொண்டார். சிறிது காலத்தில் நரகம் ஜனத்தொகையால் திக்குமுக்காடியது. அன்பு உள்ளங்களே, இந்த ஆலோசனையால் நரகம் நிரம்பி வழிவது ஏனென்று தெரிகிறதா? பொதுவாக நாம் நற்காரியங்கள் செய்வதற்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம். இன்னும் காலம் இருக்கிறது என்று தள்ளிப்போட்டு விடுவோம். ஆனால் பாவ காரியங்களை உடனே செய்து முடித்துவிடுவோம். எனவே எந்த நல்ல காரியத்தையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணாமல், அறத்தை நாள்தோறும் செய்ய வேண்டும். தர்மம் தலைகாக்கும் என்பதற்கேற்ப அதுவே நம்மை காக்கும்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து