தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » காலஞானம்

காலஞானம்

தீர்க்கதரிசிகள் நாரயணருடைய மகிமைகளையும், வல்லமைகளையும், அற்புதங்களையும் அவரால் தங்களுக்கு அருளப்பட்ட ஆவியின் மூலமாக அநேக அதிசயங்களைச் செய்திருக்கின்றனர். அதேபோல போத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களும் நிகழ்த்திய ஒரு அற்புத காரியத்தை இங்கே கூற விரும்புகின்றேன்.
ஒரு முறை வீரபிரம்மம் கர்நூல் நவாபை சந்திக்க சென்றிந்த சமயம் இவருடைய பூஜையின் நேரம் நெருங்கியது. அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி நவாபிடம் கேட்டுக்கொண்டார் வீரபிரம்மம். ஏற்பாடுகளை செய்து தருமாறு சொன்ன நவாபும் தன்னுடைய மனதில் இவரை சோதித்துப் பார்க்க வேண்டும் என விரும்பினார். பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். அவர் விளக்கேற்றுவதற்கான எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரை வைத்தார். ஆனால் வீரப்பிரம்மனோ நவாபுக்கு இறைவனின் சக்தியை உணர்த்த வேண்டும் என எண்ணம் கொண்டார். தாங்கள் ஒரு இஸ்லாமியராக இருந்தபோதிலும் இந்து மதத்தின் பூஜை முறைகளை அறிந்து, அதனுடைய தேவைகளை பூர்த்தி செய்ததற்காக மகிழ்சியடைகிறேன். இந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிப்பதற்காக தாங்களே தீபம் ஏற்றுங்கள் என கேட்டுக்கொண்டார்.
இதைக் கேட்ட நவாப் அதிர்ச்சியடைந்து, எல்லா தீபங்களிலும் தண்ணீரையே ஊற்றி, அதில் திரியிட்டு தீபங்களை ஏற்றினார். என்ன ஆச்சரியம்! எண்ணெயில் சுடர்விட்டு எரியும் தீபங்களைப்போல பிரகாசமாக எரிவதைக் கண்டார். இந்த நிகழ்ச்சியைக் கண்ட நவாப் ஆச்சர்யம் அடைந்தவராய் தன்னுடைய தவறை உணர்ந்து, வீரப்பிரம்மனின் கால்களில் விழுந்து மன்னிக்குமாறு வேண்டினார். வீரப்பிரம்மனும் அவரை மன்னித்து கலியுகத்தில் நடைபெறவிருக்கும் காரியங்களை காலஞானம் என்ற உரையை அவருக்கு விளக்கிக் கூறினார். அவர் கூறிய காரியங்கள் இந்த கலியுகத்தில் நிறைவேறுகிறதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
“உலகில் அநியாயச் செயல்கள் தலைவிரித்தாடும். பொய்யானது உண்மையாகவும் உண்மையானது பொய்யாகவும் செயல்படும். நல்லவைகளுக்கு நாட்டில் பெருமையில்லாது போகும். உலகில் தீமை பிரகாசமாகும். அதையே மக்கள் விரும்புவர். தந்தை மகனையும், மகன் தந்தையையும் மோசம் செய்வார்கள். அரசர்கள் ஆட்சி செய்வதற்கு பதிலாக மக்களே இராஜாங்கத்தை நடத்துவார்கள். கோவில்களில் பிரமாண அர்ச்சகர்களுக்குப் பதிலாக சூத்திரர்களே அர்ச்சகர்களாக இருப்பார்கள்.
குதிரை, மாடு போன்ற நான்கு கால் பிராணிகளுக்குப் பதிலாக புதிய (இயந்திர) வாகனங்கள் உருவாகும். நாட்டில் உணவு விளைச்சல் குறைந்து பஞ்சம் தோன்றும். ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்ல முயல்வார்கள். ஒருவனின் மனைவி மற்றொருவனுக்கு மனைவியாய் இருப்பாள். பகலில் நட்சத்திரம் தோன்றும். அதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும். திருப்பதி வெங்கடாசலபதியின் சொத்துக்கள் மற்றவர்களால் திருடிச் செல்லப்படும். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, உற்றார் உறவினர், நண்பர் என்ற ஆசாபாசங்களில் பங்கம் விளைவிக்கும். போதை பொருட்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு மக்களில் பெரும்பாலானோர் போதைக்கு அடிமையாகி அதில் மூழ்கி இருப்பார்கள். தேசத்தில் புதியவிதமான அரசியல் அமைப்புகள் உண்டாகி, அராஜகமான முறையில் குடிமக்கள் நடத்தப்படுவார்கள்.
மேலும் நாடும் நாட்டு மக்களும் கீழான நிலைக்குச் செல்வார்கள். நீரில் முழ்கி விடும் தன்மையுள்ள உலோக பொருட்கள் தண்ணீரில் மிதக்கும் தன்மையை (கப்பல்கள்) பெரும். அரசாங்கமே பெண்கள் கருச்சிதைவு செய்வதை ஆதரிக்கும். க்ஷத்திரியர்கள் வம்சமே உலகில் இல்லாது அழிந்துபோகும். செம்பு, பித்தளை போன்ற உலோகப் பொருட்கள் தங்கத்தில் கலப்படம் செய்யப்பட்டு சுத்தமான தங்கம் என்று மக்களுக்கு விற்பனை செய்வர். வியாபாரிகள் உணவுப் பொருட்களை குறைவான அளவு முறையில் அதிகமான விலைக்கு விற்பார்கள். பணத்திற்காக ஒருவரை ஒருவர் நிந்தித்துக்கொண்டு அதன் மூலம் சண்டை போடுவார்கள் என்று வீரப்பிரம்மம் நவாப்பிடம் கூறினார்.”
மேற்சொன்ன காரியங்கள் அனைத்தும் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நிறைவேறி வருவதை நாம் காண முடியும். உதாரணமாக கிருஷ்ண அவதாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றிய பின்னர்தான் கம்சனின் கொடுமைகள் அதிகரித்தன. அதேபோல இராம அவதாரத்திலும் ஸ்ரீ இராமர் தோன்றிய பின்னர்தான் இராவணனின் கொடுமைகள் அதிகரித்தன. இப்போதும் கல்கி மகா அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் தோன்றிய பின்னர்தான் வீரப்பிரம்மம் சொன்ன காலஞான தத்துவத்தில் கூறியபடி கொடுமைகள் இப் பூமியில் தலைவிரித்து ஆடுகின்றன என்பதை நம்மால் காணமுடிகின்றது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களும் தம்முடைய சொற்பொழிவில் இவ்வாறு கூறுகிறார்.
“இன்றைக்கு நாம் ஒரு மகத்தான யுகத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். புறஜாதிகளின் யுகம் முடிவடைகிறது. தர்மயுகம் (இராம ராஜ்யம்) வரவிருக்கிறது. அதற்கு முன்னதாக ஆயிரக்கணக்கானோர் மரிக்க வேண்டும். பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், வாதைகள், சாபம் நிறைந்த கலசங்கள் இவையெல்லாம் விழவேண்டும். ஓ! இது எப்படி நடக்கும்? என்று மக்கள் கூறுகிறார்கள். பஞ்சம் உலக முழுவதிலும் வருவதை என்னால் பார்க்க முடிகிறது. மக்களுக்கு சாப்பிடுவதற்கு ஒன்றுமேயில்லை. இப்பொழுது நமக்கு சாப்பிடுவதற்கு ஏதோ இருக்கிறது. ஆனால் சாப்பிடுவதற்கு ஒன்றுமேயில்லாத மக்கள் அநேகர் இருக்கிறார்கள். உங்களை பாதுகாத்துக்கொள்ள பரம புருஷரை நோக்கிப் பாருங்கள்.”
இந்த கலியுகத்தில் ஸ்ரீமந் நாராயணரே அவதரித்து தன்னை நோக்கிப் பார்க்க வேண்டும் என்று முன்னுரைத்திருக்கிறார். எனவே அந்த பரம புருஷராகிய ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் சரணடைவோம்.

– தொடரும்…

✍ D. பத்மநாபன், இறைத்தொண்டர், நெல்லூர்

✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்