தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » காலஞானம்

காலஞானம்

காலஞானம் என்பது இறைவனின் தீர்க்கதரிசியாகிய போத்தலூரி வீரப்பிரம்மம் தன்னுடைய காலத்தில் நிகழ்ந்த இறை நிகழ்ச்சிகளை மட்டும் குறிப்பதல்ல. வருங்காலத்தில் நடக்க இருக்கும் காரியங்களைக் குறித்தும், இறைவனுடைய வருகையைக் குறித்தும், அவரைக் கண்டுகொள்ளும் வழியைக் குறித்தும், இறைவனுடைய பெயரையும் சூட்சமமாக மக்களுக்கு எடுத்துரைத்த உபதேசமே காலஞானம் என்ற நூலாகும். அவருடைய காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்களையும், அவர்கள் இறைவனுடைய திட்டத்தை அந்த காலகட்டத்தில் எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பதைக் குறித்தும் உங்களுக்கு தொடர்ந்து எழுதி வருகின்றோம்.

இன்றைய நாட்களில் சினிமா நடிகர் நடிகைகள் குறித்தும், அரசியல்வாதிகளைக் குறித்தும், மக்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இறைவனை அடையாளம் காட்டிய அந்த தீர்க்கதரிசிகளைப் பற்றிய காரியங்களை மறந்து விடுகிறார்கள். எனவே மக்கள் ஆன்மீக விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த மனுஜோதி இதழ்களில் தீர்க்கதரிசிகளைக் குறித்து விளக்கமாக எழுதி வருகின்றோம். சென்ற இதழில் வீரப்பிரம்மம் கர்நூல் நவாப் கோட்டையில் செய்த அற்புதத்தைப் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் பிணி மற்றும் மரணத்திலிருந்து ஒருவரை உயிர்ப்பித்த சம்பவத்தைப் பார்க்கலாம்.

ஸ்ரீ போத்தலூரி வீரப்பிரம்மம் அவர்கள் தன்னுடைய சீடர்களுடன் ஒரு ஊருக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அப்போது இரவு நேரமாகி விட்டபடியால் அவர் ஒரு மரத்தடியில் தங்க நேரிட்டது. தன் சீடர்களுடன் அவர் அளவளாவிக் கொண்டிருக்கையில், சிறு தூரத்தில் ஒரு மரத்தடியிலிருந்து யாரோ அழுது புலம்பும் குரல் கேட்டது. தன்னுடைய சீடர்களுடன் அங்கு சென்ற அவர், ஒரு பிராமணனும், அவனது மனைவியும் அங்கிருப்பதைக் கண்டார். புலம்பல் சத்தத்தின் காரணம் என்னவென்று அவர்களிடம் கேட்டார். அந்தப் பெண் அய்யா என்னுடைய கணவனுக்கு குஷ்டரோகம் இருக்கின்றது. எந்த தெய்வத்திடம் சென்றபோதும் யாராலும் அந்த நோயைத் தீர்க்க முடியவில்லை. எனவே என்னுடைய கணவனின் நோயைத் தீர்க்க தெய்வத்தால் முடியாதா என்று அழுது புலம்பினாள்.

வீரப்பிரம்மம் அம்மா உன் கணவனின் நோயைத் தீர்க்க இறைவனால் முடியும், வருந்தாதே என்று கூறி, தம்முடைய கைகளால் அந்த பிராமணனின் உடல் முழுவதும் தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சர்யம்! அந்த பிராமணனின் நோய் மறைந்து புதிய மனிதனாக காட்சி தந்தார். இருவரும் வீரப்பிரம்மத்தின் கால்களில் விழுந்து அவரை வணங்கினார்கள். அவர்களும் அவரைப் பின்தொடர்ந்து அவருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். அதற்கு வீரப்பிரம்மம் நீங்கள் இல்லற தர்மத்தை பின்பற்றி வாழுங்கள். நீங்கள் நல்வாழ்வு பெறுவீர்கள். அந்த காலக்கட்டத்தில் இறைவன் கிரியை செய்யும் மந்திரத்தை அவர்களுக்கு உபதேசித்தார். தினந்தோறும் காலையும் மாலையும் ஸ்ரீ வீரப்பிரம்மேந்திர ஸ்வாமி நம என்ற மந்திரத்தை கூறி ஜெபிக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

அந்த காலகட்டத்தில் அவர் கற்றுக்கொடுத்த மந்திரத்தை உச்சரிப்பதின் மூலமாக இறை அருளை மக்கள் பெற்றுக்கொண்டார்கள். இந்த காலகட்டத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஒரு சாதாரண மனிதனாக வந்து, கலியுகத்தில் இறை அருளைப் பெறுவதற்காக அவர் கற்றுக்கொடுத்த திரு மந்திரம் என்னவென்றால், “ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒருவரே பரிசுத்தர்! பரிசுத்தர்!! பரிசுத்தர்!!! அவர் சதா காலங்களிலும் ஜீவிக்கிறவர், ஆதிபலி அன்பினால் நம்மை மீட்டுக்கொண்டவர், அவரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதுஎன்று ஜெபிக்கும் பொழுதுதான் நாம் இறை அருளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது மனுஜோதி வாசகர்களுக்கு தெரிந்ததே.

ஒருமுறை வீரப்பிரம்மம் தபசில் வீற்றிருந்தபோது, அவ்வழியாக ஒரு சவ ஊர்வலம் செல்வதைப் பார்த்தார். உடனே அவர்களை நிறுத்தினார். அவர்களிடம் குழந்தைகளே, நீங்கள் என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? உயிருடன் இருப்பவனை ஏன் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லுகிறீர்கள்? இது சரியா?” எனக் கேட்டார். இறந்த ஒருவரைப் பார்த்து வீரப்பிரம்மம் உயிருடன் இருக்கின்றார் என்று சொல்வதைக் கேட்ட மக்கள், அவரை ஒரு பைத்தியக்காரன் என்று எண்ணினார்கள். எண்ணியது மட்டுமல்லாமல் கேலி செய்து நகைத்தார்கள். அதைக் கேட்டு கோபமடைந்த வீரப்பிரம்மம் சுடுகாட்டிற்கு சென்ற பிறகு பைத்தியக்காரர்கள் யார் என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்று கூறினார்.

சுடுகாட்டிற்கு சென்ற பிறகு, அந்த பிணத்தைச் சுற்றி அவர்கள் கட்டியிருந்த கட்டுகளை அவிழ்த்தார்கள். அப்போது உயிரில்லாத அந்த மனிதன் எழுந்து உட்கார்ந்தான். பிணமாக இருந்த அந்த மனிதன் உயிருடன் திரும்பி வந்ததைக் கண்ட பிறகு அவர்கள் திகைப்படைந்தவர்களாய், வீரப்பிரம்மத்தின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள்.

அப்போது அவர்: குழந்தைகளே என்னுள் இருக்கும் சக்தி எப்படிப்பட்டது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். எனவே என்னை பைத்தியக்காரன் என்று கேலி செய்தீர்கள். உங்கள் மீது எனக்கு எந்தவிதமான கோபமும் கிடையாது. ஆனால் நீங்கள் அனைவரும் கலியின் மாய வலையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதால் இறைவனுடைய காரியங்களை உங்களால் உணர முடியவில்லைஎன்று கூறினார்.

இறைவன் தன்னுடைய தீர்க்கதரிசிகளை அனுப்பும்போதும், தானே ஒரு மனிதனாக வரும்போதும் அவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட காரியங்களை செய்கிறார். மேலும் மனித சக்திக்கு மேலான சில அற்புதங்களை செய்து, மக்களுக்கு அவர்களை அடையாளம் காட்டுகின்றார். உதாரணமாக இயேசு, முகம்மது நபி, இராமர், ஸ்ரீ கிருஷ்ணர் போன்றவர்கள் இருந்த காலத்திலும் அவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள். அவர்கள் மூலமாக இறை தர்மமானது இவ்வுலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் மனிதனாக இருந்தபோது அவருடைய வாழ்க்கையில் அவர் செய்த அற்புதத்தை பார்க்கலாம். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் தானும் தன் குடும்பத்தினரும், நாசரேத்தில் வசித்து இறைத்தொண்டு செய்துகொண்டிருந்த கால கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியாகும்.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அவருடைய வீட்டில் இருக்கும்போது, ஒருநாள் காலையில் ஒருவர் வந்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவை சந்தித்தார். அவர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் என்னுடைய மனைவி இறந்துவிட்டாள். அவள் இறப்பதற்கு முன்பாக என்னிடம், என்னை அடக்கம் செய்வதற்கு முன்பாக நீங்கள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவை அழைத்து வந்து, எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று கூறியதாக அவரின் கோரிக்கையை ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் தெரியப்படுத்தினார். அன்று அவர்கள் மகனுக்கு திருமணம் நடைபெறவிருந்தது. உடனே ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அந்த வீட்டிற்குச் சென்றார். அவள் முற்றிலுமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் அவளது கணவர், “இன்றைக்கு என் மகனுக்கு திருமணம், என் மனைவியோ இறந்துவிட்டாள், தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்என்று மன்றாடினார். வீட்டில் திருமண நிகழ்ச்சி இருப்பதால் தாங்கள் ஜெபித்தால் அவளை அடக்கம் செய்து விடலாம் என்று கேட்டுக்கொண்டார். இதைக் கேட்ட ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவும்  இறந்த ஒருவருக்காக எப்படி ஜெபிப்பது என்று யோசித்துக் கொண்டே, இறைவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையுடன் இறந்த பெண்மணிக்கு ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் ஜெபித்தார்.

அப்போது அந்த பெண்மணி உயிருடன் திரும்பி வந்தாள். இதைக் கண்ட அவளுடைய கணவனும், மற்ற உறவினர்களும் ஆச்சர்யமடைந்தனர். திருமணமும் இனிதே நடைபெற்றது. அங்குள்ள மக்களும் இறைவனை மகிமைப்படுத்தினார்கள். இந்த அற்புதத்தை நாசரேத்தில் நிகழ்த்திக் காட்டினார். இதன் மூலமாக, தான் ஒரு சாதாரண மனிதனல்ல என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தினார்.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அற்புதங்களை செய்வதினால் மட்டுமல்ல, அவர் வேதங்களின் அடிப்படையில் அவதரித்தவரா என்பதையும் நாம் கண்டுகொள்ள வேண்டும். அவர் உபதேசிக்கின்ற அனைத்துக் காரியங்களும் வேதங்களில் சான்று உள்ளதா என்பதையும் நாம் கண்டுகொள்ள வேண்டும். அற்புதங்களும், வேதங்களும், தீர்க்கதரிசிகளும் சான்று பகர்ந்தால் அவர் ஒருவர்தான் உண்மையான கல்கி மகா அவதாரம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தற்காலத்தில் அநேகர் தாங்கள்தான் அவதார புருஷர் என்று பறைசாற்றுகிறார்கள். ஆனால் வேதங்களில் அவர்களைப்பற்றி சான்றுள்ளதா என்று கேட்டால் அவர்களுக்கு பதில் கூற தெரியாது. பொய்யான மக்களுக்கு வேதங்கள் சான்று அளிக்காது.                                             – தொடரும்…

 – D. பத்மநாபன், இறைத்தொண்டர், நெல்லூர்

Filed under: ஆன்மீக கட்டுரைகள்