தமிழ் | తెలుగు

» பிரமுகர்களின் உரை » 45-கல்கி ஜெயந்தி விழா

45-கல்கி ஜெயந்தி விழா

பத்மஸ்ரீ அவ்வை நடராசன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

அன்பார்ந்த தலைவர் பெருந்தகை மீனாட்சி சுந்தரம் அவர்களே, நீதியரசராகத் திகழும் பெருந்தகை வள்ளிநாயகம் அவர்களே, என் வாழ்நாளில் பல்லாண்டுகளாக என்னோடு பரிவும், உறவும் காட்டி உலகமெல்லாம் வலம் வருவதற்கு வழிகாட்டியாகத் திகழும் பெருந்தகை டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்களே, அறிஞர் பெருமக்களே, நண்பர்களே, காதார கேட்டு மகிழத்தக்க களிப்பூட்டும் பாடல்களையெல்லாம் ‘அமிர்த கானம்’  என்ற பெயரில் வடித்திருக்கும் நண்பர் மதுசூதனன் அவர்களையும் நான் மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன். எளிய மக்கள் பல நூறு மைல்களைக் கடந்து, நாம் கலி தெலுங்கு என்று பாராட்டுகிற ஆந்திர மாநிலத்தின் மக்களெல்லாம் இங்கே ஆர்வத்தோடு கூடியிருப்பதைக் காணும்போது நமக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. பொதிகை ஆற்றங்கரையின் புகழ் வளர்க்கின்ற ஒரு பெருநகரம் என்று பாராட்டப்படுகிற நெல்லையை அடுத்த பகுதியில் ஒரு பல ஏக்கர் பரப்பளவில் இப்படிப்பட்ட ஒரு சமய நல்லிணக்க சன்மார்க்க சபையை, மனுஜோதி ஆசிரமத்தை நடத்துகிற முயற்சியை நான் கண்டு வியக்கின்றேன்.மதம் என்று சொன்னால் கொள்கை என்றுதான் பொருள். தமிழிலேகூட ஏதாவது ஒரு கருத்தை வலியுறுத்துகிறார்கள் என்று சொன்னால் அது அவருடைய மதம் என்று சொல்லுவார்கள். மதம் என்று சொன்னால் கொள்கைதான். கொள்கை ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கையாக இருக்கும். கணவருடைய கொள்கையும், மனைவியினுடைய கொள்கையும் ஒரே கொள்கையாக இருக்க வேண்டும் என்ற ஒரு தேவையில்லை. நு]ற்றுக்கணக்கான கொள்கைகள் உலகத்தில் பரந்திருந்தாலும்கூட உறவு என்ற வகையில் ஒருமையைத்தான் காண முடிகிறது. ஆந்திர மாநில மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆந்திர மொழியாகிய தெலுங்கில் அற்புதமான கீர்த்தனைகளை எழுதிய தியாகராயர் தமிழ்நாட்டில் திருவையாற்றில் வாழ்ந்தவர்தான். திருவையாற்றில் வாழ்ந்துகொண்டு, அவர் தன்னுடைய தாய்மொழியாகிய தெலுங்கில் எழுதிய கீர்த்தனைகள்தான் நாடு முழுவதும் பரவியிருக்கிறது. அதுபோலத்தான் பிறந்தது ஒரு சமயமாக இருந்தாலும்கூட வளர்ந்ததும், உணர்ந்ததும், தெரிந்ததும் உலகமெல்லாவற்றையும் அரவணைக்கிற ஒரு சமயம் என்று கண்டறிந்த பெருந்தகை நம்முடைய தவத்திரு லஹரி கிருஷ்ணா அவர்கள்தான் என்று சொல்லி நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்.

லஹரி என்று சொன்னால் தெலுங்கில் உள்ளவர்களுக்கு வேண்டுமென்றால் தெரியும். சமஸ்கிருதத்தில்கூட சௌந்தர்ய லஹரி என்று ஒரு நூல் இருக்கிறது. லஹரி என்றாலேயே ஆனந்த வெள்ளம் என்று பொருள். அலை கடந்து, கரை கடந்து, பொங்கி வருகின்ற வெள்ளத்தைத்தான் லஹரி என்பார்கள். தன்னுடைய நெஞ்சில் பட்ட உணர்வுகளையெல்லாம் எப்படி பொங்கி பொழிய முடியும் என்கிற வகையிலேதான் சமயங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக காண்கிற ஒரு உன்னத முயற்சியை லஹரி கிருஷ்ணா அவர்கள் தொடங்கியதை அவர்கள் வழிவழியாக வந்திருக்கின்ற பெருமக்கள் உப்பாஸ் அவர்களும், லியோ அவர்களும் இவ்வளவு பெருங்கூட்டத்தை திரட்டி அமைத்திருக்கிறார்கள் என்று சொன்னால், அது உண்மையிலேயே நமக்கெல்லாம் ஒரு சிலிர்ப்பை உண்டாக்குகிறது. நண்பர்களே, சென்னையிலும்தான் கூட்டங்கள் கூடும். அந்த கூட்டங்களெல்லாம் அது வரவழைத்த கூட்டம். அல்லது வலிந்து, இழுத்து வந்த கூட்டம் அல்லது பணம் பெற்று எப்படியாவது லாரிகளிலே ஏற்றிக்கொண்டு வந்து இறக்கிவைத்த கூட்டமாக இருக்கும். ஆனால் இந்த சிறு பிள்ளைகளும் இங்கே அமர்ந்திருக்கிற தாய்மார்களையும் காண்கின்றபோது, அருமை அண்ணாச்சி அவர்கள் சொன்னதுபோல அவர்கள் மன ஏக்கத்தினாலும், மன சோர்வினாலும், உள்ளத்தினுடைய எதிர்பார்ப்பினாலும் ஓர் உயர்ந்த பொருளை கண்டறிவதற்கு வாய்ப்பு இதுதான் என்று எண்ணி இங்கே நிரம்பியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால், இதுதான் உண்மையான ஒரு சமுதாயத்தொண்டு என்று நான் மகிழ்ச்சியோடு சொல்ல விரும்புகிறேன்.

பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி, அவர்கள் மனத்தின் கவலைகளையும், அவலங்களையும் போக்கிவிட்டு அவர்களுக்கு நல்லுணர்வை ஏற்படுத்துகிற பணி என்பதைத்தான் மாபெரும் தலைவர்களெல்லாம் உலகத்தில் செய்திருக்கிறார்கள். தன் இனத்தைச் சார்ந்தவர்களை ஒன்றாக திரட்டுவார்கள். மார்ட்டின் லூத்தர் கிங்கையும், நெல்சன் மண்டேலாவையும் நாம் நினைத்துப் பார்த்தால், வாழ்வதற்கு வாட்டமுற்றிருந்த மக்களையெல்லாம் எப்படி உண்மையான தேடுதலுக்கு உருவாக்க முடியும் என்பதற்காக அவர்கள் திரட்டிய பெருங்கூட்டத்தின் விளைவாகத்தான் அமெரிக்க நாட்டு அதிபராக ஒபாமா அவர்களால் வரமுடிந்தது. அதுபோல இன்றல்ல, நாளையல்ல உப்பாஸ் அவர்கள் இதே இடத்தில் ஒரு மாபெரும் மண்டபத்தைக் கட்டக்கூடிய நாள் வரும். அப்படிப்பட்ட மண்டபம் வருகிறபோது ஒரு சமய நல்லிணக்க கல்லூரியை தொடங்குகிற வாய்ப்பு வரும். காரணம் உலகத்தில் அனைவரையும் ஒன்றாக காண்கிற பழக்கம் என்பது இன்னும் நமக்குள் சரியாக வரவில்லை. இப்போதும்கூட ஒரு நாட்டுக்கும் ஒரு நாடு வேறுபடுவதும், அதனால் விபத்துக்கள் ஏற்படுவதையும் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நினைக்கிற நினைப்பைத்தான் உலகத்தினுடைய தலைவர்கள் அவ்வளவுபேரும் சொல்லியிருக்கிறார்கள்.

எது புனிதம் என்று கேட்டால் எல்லா மக்களையும் ஒன்றாகத் திரட்டி ஒரு மனிதம் என்பதை உருவாக்கினால் அதற்குத்தான் புனிதம் என்பது பெயராக இருக்க முடியும். நண்பர்கள் சொன்னார்கள். இங்கே வழிபாடு நடக்கும். பண்பாடு மிளிரும். பண்பாடு நடைபெறுவது மட்டுமல்லாமல் வாய்ப்பு கிடைக்கிறபோது கலப்பு திருமணம் செய்துகொள்வதைக்கூட இந்த மனுஜோதி ஆசிரமம் நடத்துகிறது என்று சொன்னார். அது எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது பாருங்கள். கூட்டு வழிபாடு, கூட்டுறவு, பண்பாடு, வாழ்க்கையினுடைய பெருமிதம் என்று எல்லாவற்றையும் சொல்லி வருகின்ற நினைப்பு இருக்கிறதே, அது மிகவும் போற்றத்தக்கதாகும். இது பழைய நாள் முதற்கொண்டு எதுவும் நாடாகட்டும், எதுவும் ஊராகட்டும் யாரும் மக்களாகட்டும், யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றெல்லாம் பழைய தமிழ் முதுமொழிகள் இருக்கின்றன. அந்த முதுமொழிகளை சேர்த்துதான் யார் எங்கே பிறந்தாலும்கூட அவர்கள் ஒருவரையொருவர் அரவணைத்துக்கொண்டு வாழ்கிற வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் லட்சியமாகும்.

அந்த வகையிலேதான் அண்ணல் காந்தியடிகள் நினைத்ததுபோல அதற்கு முன்னால் என்று சொன்னால் கௌதம புத்தர் கருதியதுபோல அதற்கு முன்னால் சொல்வது என்று சொன்னால் இயேசு பெருமான் சொன்னதுபோல அதற்கும் தொடர்ந்து சொல்வது என்று சொன்னால் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கானத்தில் வந்த  பாடலைக் கேட்டபோது நான் உருகிவிட்டேன். சலாம் அலேக்கும் என்று வருகிற வார்த்தையும் இதைத்தானே குறிக்கிறது என்று சொல்லி இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், சமணம் இவைகளெல்லாம் ஒரு வகையான மதங்கள்தான். இந்த மதங்களையெல்லாம் ஒன்றாக இணைத்துக் காண்கிற உணர்வு இருக்கிறதே, பால் என்ற பெயரும் இருக்கிறது. உப்பாஸ் என்ற பெயரும் இருக்கிறது. லஹரி கிருஷ்ணா என்ற பெயரும் சேர்ந்திருக்கிறது என்றால் பெயரிலேயே எல்லாவிதமான ஒருமையையும் கலந்திருப்பதைக் கண்டு அந்த பெருமையை நான் மகிழ்ச்சியோடு புகழுகிறேன். இந்த நெல்லையிலேதான் கவியரசராக வாழ்ந்த பாரதியார் பாடியிருக்கிறார். எல்லாமே ஒரு கடவுள், ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று பேசுவதைக் காட்டிலும் ஒன்றே தெய்வம் என்று நாம் உணரலாகாதா என்று பாரதியார் எழுப்பிய குரலும் அதுதான்.

எனவே இந்த மண் ஒருமைப்பாட்டிற்குரிய மண். இந்த இடம் புகழ்வாய்ந்த இடம். எனவே நெல்லை என்ற கொல்லையில் பூத்திருக்கும் இந்த முல்லை இன்னும் பல்லாண்டு காலம் சிறப்புற்று, செழிப்புற்று ஒரு பல்கலைக்கழகமே உருவாக வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இங்கே வந்தவர்களையெல்லாம் நான் பார்த்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையிலேயே அமெரிக்காவிலிருந்து இரண்டுபேர் இந்த விழாவில் கலந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இங்கே தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தியில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கேட்பதைப் பார்க்கும்போது அவர்களுடைய மனப்போக்கையும், உணர்வுகளையும் பாராட்டுகிறேன். ஆஸ்திரேலிய நாட்டில் உப்பாஸ் ஆற்றிய உரைகளும், விசாகப்பட்டினத்தில் உப்பாஸ் அவர்கள் கொண்டுவந்து காட்டிய பெருங்கூட்டத்தினுடைய ஆர்வத்தையும் கண்டபோதெல்லாம் நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கட்குலத்திற்கே ஒரு பெயர் மனுக்குலம் என்பதுதான். மனமுடைய பெருமிதம் என்பது மக்களிடத்தில்தான் நாம் காண முடியும். எனவே மக்களையெல்லாம் மனுக்குல மக்கள் என்று சொல்லுகிற தொடர்புக்கேற்ப இந்த மனுக்குல மக்களையெல்லாம் ஒன்றாக இணைக்கின்ற மனுஜோதி ஆசிரமத்தினுடைய மங்காப்புகழ் என்றைக்கும் புகழோடு விளங்கும் என்பதில் ஐயமில்லை.

நெல்லைக்கு வருவதில் எனக்கு என்ன திகிலென்றால், நான் ஒருமுறை வந்தபோது நெஞ்சுவலியினால்  நெல்லையிலிருந்து அப்படியே திரும்பிவிட்டேன். ஆனால் இப்போது இங்கே வந்தபிறகு என் பக்கத்திலிருப்பவர் பெயரைக் கேட்டாலேயே உங்களுக்கு தெரியும், நெஞ்சுவலி பஞ்சாகப் பறந்துவிடும் வி.ஜி. சந்தோசம் அவர்கள்தான். எனவே மகிழ்ச்சி பெருவெள்ளத்தினாலும், என்னுடைய நெஞ்சுவலி போய் என்னுடைய நெஞ்சில் மகிழ்ச்சி கொஞ்சி விளையாடுகின்ற அளவுக்கு இந்த நிகழ்ச்சி அமைந்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ‘ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கானம்’ என்ற பாடல்களைக் கேட்டபொழுது உருக்கத்திற்கு உருக்கமும், மனித குலத்தின்மீது இரக்கம் காட்ட வேண்டும் என்ற எண்ணமும், அன்பு காட்டுவதினால் நாம் அடைகிற பண்பின் பெயரையும்கூட அந்த குரலைக் கேட்கும்பொழுதே நம்முடைய உள்ளத்தில் ஒரு பெரிய மேன்மையை உருவாக்குவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பணியை அருமை நண்பர் உப்பாஸ் அவர்கள் தமிழ்நாடு மட்டும் என்றில்லாமல், இந்திய மாநிலங்கள் முழுவதிலும் பரப்ப தொடங்குவதற்கு இது ஒரு தக்க காலமாகும். இந்த தக்க காலத்தை மிக முறைமையாகப் பயன்படுத்தி அவர் பெருமிதமடைய வேண்டும். நான் வந்ததற்கு நல்ல அறிகுறியாக கோவை வானொலி நிலையத்தைச் சார்ந்தவர் சொன்னதைக் கேட்டபோது, அத்தகைய புகழ் வாய்ந்த விருது நூறு கோடி மக்களுடைய நாட்டில் ஒரு பத்து பேருக்குத்தான் கிடைக்கிறது என்று சொன்னால், ஏறத்தாழ பத்துகோடி மக்களில் ஒருவர் என்கிற புகழ் உப்பாஸிற்கு வருகிறது என்று பொருள். எனவே லஹரி கிருஷ்ணாவுடைய புகழ் வாழ்க! வெல்க! நன்றி! வணக்கம்!

*******

Filed under: பிரமுகர்களின் உரை