தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » கடிதங்கள்

கடிதங்கள்

பேரன்புடையீர்,
தங்களின் இந்த மனுஜோதி மாத இதழ் எனக்கு கிடைத்ததற்கு மிக்க நன்றி. இந்த இதழ் பல தகவல்களையும், ஆன்மீக சிந்தனையும் தடையின்றி நம் மனதில் நல்ல சிந்தனைகளை வளர்க்கிறது. தொடர்ந்து இந்த இதழை எனக்கு அனுப்பி ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த இதழை படிப்பதால் நாம் வாழ்வில் பல முன்னேற்றங்களையும், இறைவனின் பல வழிகாட்டுதலையும் காண முடிகிறது. தொடர்ந்து படிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். இந்த இதழ் வீட்டிற்கு வந்ததற்கு மிக்க நன்றி.  

– s.M. அகமது அலி, மேலப்பாளையம்

******

ஐயா, ஜனவரி 2015 மனுஜோதி இதழை படித்தேன். மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரும் இந்த இதழ் மாதம் ஒன்று வரக்கூடாதா என்ற ஆவல் ஏக்கம் மனதிற்குள் வருகிறது. பொதுவாக இந்த இதழை கையில் எடுத்தாலே ஒருவித மகிழ்ச்சி. அதைப் படித்தாலே மனதிற்கு ஒரு தெளிவு. கிருபானந்த வாரியாரின் “ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றமே” கட்டுரை அருமை. “ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்”, “சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்”, “சித்தர் வாக்கு” கட்டுரைகள் எல்லாம் படிக்கத் தகுந்தவை. நன்றி.

 – பொதிகை சு. முத்துச்சாமி, தூத்துக்குடி

******

என் இனிய ஆசிரியர்க்கு, இம்மாத இதழ் கிடைத்தது. நலம். நலமறிய ஆவல். சித்தர் வாக்கு பற்றிய சிறப்பான தகவல் மிக பயன் தந்தது. பாராட்டுக்கள். கிழக்கே தோன்றிய மின்னல் அய்யா, லாறி முத்துக்கிருஷ்ணாவைப் பற்றிய பல்வேறு தகவல் பார்த்து பயன் பெற்றேன். பாராட்டுக்கள். சிருஷ்டிப்பிலுள்ள அதிசய தகவல்களையும், தேனீயின் பணியின் வேகம் பற்றியும் மிக சிறப்பாக தந்தது அருமை. 34 பக்கங்களும் புதிய ஆன்மீகம், அன்பு, இறைபக்தி  போன்ற பல புதிய தகவல்கள் தந்த மனுஜோதி மாத இதழுக்கு கிரீடம் வைத்ததுபோல இருந்தது. தனி பாராட்டுக்கள். நன்றி, வணக்கம். 

– s. பொருநை பாலு, திருநெல்வேலி

******

அன்புடையீர், சென்ற மனுஜோதி இதழை மனம் ஒன்றிப் படித்தேன். எளியேனின் தேடலுக்கு, அட்சயபாத்திரமாக மனுஜோதி ஒளிவீசக் காண்கிறேன். மனம் சமநிலை பெற்று, ஒருமைப்பாடு அடைவதற்கு, அறநூல்களைப் படிக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் நிறைந்த 1987 -ம் ஆண்டு அக்டோபர் 3-ம் நாளன்று,  ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களது உரை, ஆன்மீகத் தென்றலாய் வீசிற்று. அகந்தை நீங்கிடத் தூண்டலாய் வரும் ‘ஆசிரியர் பக்கம்’, வாழ்வியல் செம்மைக்கான வழிகாட்டலாகும். ‘மகா சோமாஸ்கந்த மூர்த்தி அவர்களது சொற்பொழிவில்’, மனுஜோதி வளாகம், உலகோர் அனைவரையும் செதுக்கி ஒன்றிணைக்கும் திருக்கோயிலாய்த் தெரிகிறது. தந்தை மகனுக்கிடையேயான உறவை இறைமையுடன் தொடர்புபடுத்தி “ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்” என்ற தத்துவ இயலின் தந்தையாம் திருவள்ளுவர் உலகுக்கு சொன்ன அறத்தை சாராகப் பிழிந்து தருகிறது. மதுரை, சதீஷ்குமாரின் ‘ஐம்புலன்களினால் ஏற்படும் மனோபாவம்’ புலன்களைச் சரியான திசையில் திருப்பி மேன்மையடைவதற்கான மந்திரமாக வந்தது. அன்பை விதைத்து, ஆன்மீகத்தை வளர்த்து, உயிர்களனைத்தும் உயிர்ப்பும் பெற்று, மனிதத்தைப் புனிதமடையச் செய்வதற்கான பாதை காட்டும், மனுஜோதி அனைத்து அன்புள்ளங்களையும், மனத்தால் வணங்கி வாழ்த்துகிறேன். மனுஜோதி மனச்சோர்வை நீக்கும் அருமருந்தாக இருக்கிறது.

 – நா. முத்தையா, மதுரை

******

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமம் வாழ்க! மனுஜோதியைப் படித்தேன் புதியதொரு ஆன்மீக அனுபவமாக இருந்தது. உண்மையான, நேர்மையான  இறை தேடலுக்கு மனுஜோதி இதழ் சரியான மார்க்கம் சொல்லும் வழிகாட்டியாகத் திகழ்கிறது. இனி ஸ்ரீ லஹரி  கிருஷ்ணாவின் புகழ்பாட எனது மனம் தயாராகிவிட்டது.

 – D. சத்தியநாராயணன், சென்னை

*******

ஐயா, ‘மனுஜோதி ஆசிரியருக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் மனுஜோதி இதழை நான் பணிபுரியும் எரிவாயு நிறுவனத்தின் நிர்வாகியின் மூலம் படிக்க நேர்ந்தது. மதத்தால் நான் வேறுபட்டவள். ஆனாலும் உங்கள் மனுஜோதி இதழின் சிறுகதைகள் கூறும் கருத்துக்களுக்கு மனத்தால் ஒன்றுபட்டவளானேன். தங்கள் இதழில் வெளிவந்துள்ள ‘நான்கு கேள்விகள்’, ‘ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றமே’ என்ற கதைகள் மூலம், ஆன்மீகம் பற்றிய விளக்கங்களை எளிய முறையில் உணர்த்தியது வரவேற்கத்தக்கது. இன்று முதல் தங்கள் ‘மனுஜோதி’ இதழுக்கு புது வாசகியாக அறிமுகமாகின்றேன். மேலும் இனி வரும் இதழ்களை படித்து அறிவையும் வளர்த்துக் கொள்கிறேன். நன்றி! 

– S. ஜெயகணபதி, தூத்துக்குடி

******

Filed under: வாசகர் கருத்து