தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன?

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன?

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன?

           சென்ற இதழின் தொடர்ச்சி…..

திருவருட்பா 6-ம் திருமுறை. 78 பாங்கி தலைவி பெற்றி உரைத்தல் பாடல் எண் 1064:

      “……பிறர் பெயர் கேட்டிடிலோ

     நாராசம் செவி புகுந்தால் என்ன நலிகின்றாள்

     நாடறிந்தது இது எல்லாம் நங்கை இவள் அளவில்

     நீர் ஆசைப்பட்டதுண்டேல் வாய் மலர வேண்டும்

     நித்திய மாமணிமன்றில் நிகழ் பெரிய துரையே

விளக்கவுரை: “….பிறர் பெயர் கேட்டிடிலோ……என்ன நலிகின்றாள்” “இறைவனது பெயரைத்தவிர, வேறு பெயர்களை கோபிகை செவிமெடுக்க நேர்ந்தால், இரும்பினாலான அம்பு ஒன்று செவிக்குள் புகுந்து குடைந்தால் உண்டாகும் துன்பத்திற்கொப்பான துன்பத்தை அவள் அடைகின்றாள்”, என்பதுதான் இதன் பொருள். பொதுவாக, சத்திய மார்க்கத்தில் தீவிரமாக இருப்பவர்கள், இந்த உலக ஆசைகளின் பின்னால் விரைந்து சென்று கொண்டிருப்பவர்களுடன் இணைந்து செல்ல முடியாது என்பது ஓர் வெளிப்படையான உண்மை. கடவுளின் பெயரைக் குறித்து தெளிவான வெளிப்படுத்தலை, அவரது அருளால் பெற்றுக்கொண்ட கோபிகை அந்தப் பெயரின்மீதில் தீவிர பக்தி கொண்டு, பல அற்புதங்களைத் தனது வாழ்க்கையில் கண்டிருப்பது மட்டுமல்ல, உண்மையான, நிலையான உள்ளச் சாந்தியையும் பெற்றிருக்கிறாள். இறையன்பை தனது வாழ்க்கையில் அனுபவித்துப் பார்த்து அதைப்பற்றி பிறருக்கும் சொல்லி வருகிறாள்.

ஆகவே சத்திய தேவனை மிக பெரியவராக காண்கிற கோபிகைக்கு, இந்த உலகத்தின் மகிமை (கீர்த்தி) தூசியாக தெரிகிறது. அதனால்தான், இந்த உலகத்தில் உள்ள கடவுளற்ற பெரிய மனிதர்களின் பெயர்களைக் குறித்தும், அவர்களுடைய மகிமைகளைக் குறித்தும், அவளிடம் எவரேனும் பெரிதாகப் பேசினால், அந்த வார்த்தைகள் அவளுடைய செவிக்குள், இரும்பினாலான அம்பைக்கொண்டு குடைந்தால் ஏற்படும் பெரும் துன்பத்தை விளைவிப்பதற்கு ஒப்பாக இருப்பதாக உணர்கிறாள் என்று வள்ளலார் நயம்படக் கூறுகிறார். ஏனென்றால் இறைவனுடைய நித்திய மகிமையைப் பற்றிய காரியங்கள் அவளுக்கு ஏற்கனவே இறை அருளால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய ஈடில்லாத மகிமைக்கு முன்பாக, இந்த உலகத்தின் மகிமைகள் ஒன்றுமில்லை என்றும், அவை கானல் நீர் போல உண்மையானதுமல்ல, நிலையானதுமல்ல என்றும் அவள் தெளிவாக அறிந்திருக்கிறாள். ஆகவேதான் இந்த உலகத்தவரின் மகிமைகளை செவிமடுக்க நேர்ந்தால், மிகுந்த துன்பம் அடைகிறாள். விவிலிய நூலில் ஏசாயா 40:6-8 வரையுள்ள வசனங்களில் இறைவனது மகிமைக்கும் உலகத்தவரின் மகிமைக்குமுள்ள வேறுபாடு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. அது வருமாறு:

ஏசாயா 40:6-8: “பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும் போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வார்த்தையோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது”.

வசனம் 8-ல் “நமது தேவனுடைய வார்த்தை” என்னும்போது, அது வார்த்தையானவர் அல்லது ஓம் என்ற பரமபுருஷரையே குறிக்கும். அவரே இறைவன் என்பது கோபிகைக்குத் தெரியும். அவரே அன்பின் பூரண வெளிப்பாடாக, மனித உருவமெடுத்து, இந்த பூமிக்கு வந்துள்ளார் என்பதை கோபிகை அறிந்து அந்த தெய்வீக அன்பிற்குள் மூழ்கி திளைத்திருக்கிறபடியால், அந்த இறைவனின் பெயரைத் தவிர வேறு எதுவும் அவளுக்கு மேலானதாகத் தெரியவில்லை. மாறாக, இறைவனற்ற உலகப் பொருட்கள் அவளுக்கு துன்பத்தையே தருகின்றன. பகவத்கீதையில், அர்ச்சுனன் ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வ ரூப மகிமைகளைக் கண்ட பின்னர், தான் அவரை சாதாரண மனிதன் என்று தவறாக கருதி அவரை கேலி செய்ததற்காக மன்னிப்புக் கோருவதை நாம் காணலாம்.

“நாராயணருடைய பெயரைத்தான் உயர்த்துவேன்” என்று தனது தந்தையிடம் எதிர்த்து நின்று பல துன்பங்களை அதினிமித்தமாக எதிர்கொள்ள நேர்ந்தும், நாராயணரின் அருளால் வெற்றி கண்ட பக்த பிரகலாதனின் சரித்திரம் நாம் யாவரும் அறிந்ததே. ஆகவே நாம் இறைவனுடைய பெயரை மாத்திரம்தான் உயர்த்த வேண்டுமேயொழிய நம்முடைய பெயரை அல்ல. அனைத்துப் புகழும் இறைவனுக்கே சென்றடைய வேண்டும் என்பதில் நாம் மிகுந்த ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நாடறிந்தது இது எல்லாம்: கோபிகையின் பக்தியின் மேன்மையை தேசத்தார் அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். அது ஓர் மறைபொருள் அல்ல. கோபிகை குடத்திலிட்ட விளக்குபோல அல்ல. குன்றின் மேலிட்ட விளக்குபோல ஒளிவீசுகிறாள். இயேசுபிரான் தமது மலைப்பிரசங்கத்தில் (விவிலியத்தில் மத்தேயு 5:14-16 வரையுள்ள வசனங்கள்) கூறியவற்றை கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கவிதை நடையில் மிக எளிமையாக கூறுவது அனைவருடைய மனதிலும் நன்று பதியக்கூடியதாக இருக்கிறது. அது வருமாறு:-

     “கலை வண்ண விளக்கை ஏற்றிக்

     கட்டிலின் கீழ் வைப்பாரா?

     விலையிலா ஒளியை வீச

     விளக்கினைத் தூக்கி வைப்பார்!

     அலை புகழ் மனித வாழ்க்கை

     அடுத்தவர் அறியத்தானே!

     மலைமீதில் உள்ளபட்டி

     மறைவாக இருப்பதுண்டோ?”

     “நல்லொளி பரவுதல்போல்

     நாட்டினில் ஒளியாய் நின்று

     இல்லத்தில் மட்டும் இன்றி

     எங்கணும் வழியைக் காட்டிச்

     செல்லுங்கள், உங்கள் வாழ்க்கைத் 

     திரைபோட்டு மறைக்க அல்ல

     துல்லிய வானில் உள்ள

      தூயவன் மகிழ” என்றார்.

“நங்கை இவள் அளவில் நீர் ஆசைப்பட்டதுண்டேல் வாய் மலர வேண்டும். நித்திய மாமணிமன்றில் நிகழ்பெரிய துரையே”. “ஆகவே நித்தியமான அழகிய சத்-சங்கத்தில், எழுந்தருளியிருக்கும் பெரிய சீமானே! இந்தப் பெண்மீது நீர் ஆசை வைத்து, இவளை உமது மனைவியாக ஏற்றுக்கொள்ள உமக்குப் பிரியமாக இருப்பின், அதை உமது திருவாயை திறந்து சொல்லியருள வேண்டுகின்றேன்” என்று கோபிகையின் தோழி இறைவனிடம் விண்ணப்பிக்கிறாள்.

பாடல் எண் 1065:

          என்னுயிரில் கலந்து கொண்டார் வரில், அவர்தாம் இருக்க

          இடம்புனைக என்கின்றாள் இச்சை மயமாகித்

           தன்னுயிர் தன்னுடல் மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்

           தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித் தொருசார் திரிவாள்

           அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்

           அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள்

          மின் இவளை விழைவதுண்டேல் வாய் மலர வேண்டும்

           மெய்ப் பொதுவில் நடம்புரியும் மிகப் பெரிய துரையே

தெளிவுரை: “சத்திய ஞான சபையில் திருவிளையாடல் புரிகின்ற மிகப்பெரிய சீமானாகிய இறைவன், என்னுயிரில் கலந்துகொண்டார். அவர் (மனிதனாக) இங்கு வருவாரென்றால், அவர் தங்கியிருப்பதற்கு ஓர் இடத்தைத் தெரிந்தெடுத்து அதைத் தூய்மைப்படுத்தி அலங்கரிக்க வேண்டும் என கோபிகை தனது தோழியை வேண்டிக்கொள்கிறாள். இறைவன்மீதுள்ள அன்பே தனது மயமாகி, தன்னுடைய உயிரையும் உடலையும் மறந்துவிட்டாள். ஓர் இடத்தில் இருப்பதோ, படுத்திருப்பதோ செய்யாமல், எழுந்து ஓரிடத்திற்கு தனியாகச் சென்று உலாவுகிறாள். உணவு உண்ண அழைத்தாலும், அவள் அதற்கு செவிசாய்ப்பதில்லை. ஆகவே, உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் வியப்படையும் விதமாக தெய்வமகளின் அருங்குணங்களை இவள் பெற்றிருக்கிறாள். ஞான ஒளி வீசுகின்ற பெண்ணாகிய இவளை நீர் மணம் செய்துகொள்ள விரும்பினால், உமது திருவாய் மலர்ந்து என்னிடம் சொல்லியருள வேண்டுகிறேன்” என்று கோபிகையின் தோழி இறைவனிடம் விண்ணப்பிக்கிறாள்.

விளக்க உரை: “என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்……” கோபிகை தன் தோழியிடம் “இறைவன் என்னுயிரில் கலந்துகொண்டார்” என்று திட்டவட்டமாக கூறுகிறாள். இறையன்பின் தொடுதலை தனது வாழ்க்கையில் அனுபவியாமல், இப்படி அவள் ஒருபோதும் கூற முடியாது. ஓர் உயிர் மற்றோர் உயிரில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த இரு உயிர்களையும் இணைத்து வைக்கும் விசை ஒன்று அங்கு இருக்க வேண்டும். அதுதான் அன்பு. அது வெறும் மாம்சீக அன்பு அல்ல, தெய்வீக அன்பாகும். “கடவுளுடைய அன்பு மட்டுமே நித்தியமானது, அழியாதது. மற்ற எல்லா அன்புகளும் கடந்துபோகும் நிழல்களே” என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளியுள்ளார். ஆகவே இறைவனை கிரஹித்து உணர்ந்த ஒரு மனிதன், தனது முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும், முழு மனதோடும் கடவுள் ஒருவரையே நேசிக்க கடமைப்பட்டுள்ளான். மற்ற அன்புகள் யாவும் அவனது பார்வையில் இரண்டாவதாகும். நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் பத்து அடிகள் எடுத்து வைத்து நம்மிடம் வருகிறார் என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியுள்ளார். விவிலியத்தில் இயேசுபிரான் கூறிய கெட்ட குமாரன் உவமையும் இதையே வலியுறுத்துவதை நாம் காணலாம், கெட்டகுமாரன், புத்தி தெளிந்து, மனமாற்றத்துடன் தன் தகப்பனை நோக்கி வந்தான். “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன், அவனைக் கண்டு மனதுருகி ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் செய்தான்” என்று கூறப்பட்டுள்ளது (லூக்கா 15:20). தேவ அன்பு இத்தகையதே என்பதை வலியுறுத்தவே, இந்த உவமை இயேசுபிரானால்  கூறப்பட்டுள்ளது. “இறைவன் என்னுயிரில் கலந்துகொண்டார்” என்று கோபிகை கூறுகிறாளென்றால், அது ஒருதலைக்காதல் அல்ல. ஒருதலைக்காதல் ஏற்புடையதல்ல. குறுந்தொகை என்ற தமிழ் இலக்கியச் செய்யுள் ஒன்றில் ஆண்-பெண் இருவருக்குமிடையே மலர்ந்த காதலைப்பற்றி அடியிற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

“…….செம்புலப் பெயல் நீர்போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்ததுவே”.

“செம்மண் நிலத்தில் மழைத்துளிகள் விழுந்தால் அந்த நீர் செந்நிறத்தன்மையை அடைகிறதுபோல, காதலரின் அன்பு நெஞ்சங்கள் ஒன்றோடொன்று கலந்தன” என்பது இதன் கருத்தாகும். ஆகவே கோபிகை, இறைவனின் தெய்வீக அன்பைப் பெற்றுக்கொண்டு, அதை தன் வாழ்க்கையில் பிரதிபலிக்கிறாள். உதட்டளவில் இறைவனுடைய அன்பைப்பற்றி பேசிவிட்டு தனது வாழ்க்கை நடைமுறையில் அந்த அன்பை பிரதிபலிக்கவில்லையென்றால், அது மாய்மால பக்தி ஆகிவிடும். இறை அன்பை ருசித்து, அந்த ஒரே இறைவனுக்கு தொண்டு செய்து தங்களுடைய உடல், பொருள், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்து வாழ்ந்த அடியார்கள், ஞானபூமியாம் இந்த பாரத நாட்டில் வாழ்ந்து தங்கள் அடிச்சுவடுகளை விட்டுச் சென்றவர்கள், மிகுதியான அளவில் இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். ஆழ்வார்கள், நாயன்மார்கள், பதிணெண் சித்தர்கள், புரந்தரதாசர் முதலிய கன்னட பக்தர்கள், துக்காராம் முதலிய மஹாராஷ்டிர பக்தர்கள், துளசிதாசர் முதலிய ஹிந்துஸ்தானி பக்தர்கள், ராமதாஸ் முதலிய தெலுங்கு பக்தர்கள் இதில் அடங்குவர். மீராபாய், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் முதலிய பெண்மணிகளும் கடவுள் பக்தியில் சிறந்து விளங்கினார்கள். எந்த அதிகார வர்க்கங்களாலும் கட்டுப்படுத்தப்பட முடியாத ஈடு இணையற்ற இறைவன் ஒரு பக்தனின் எளிமையான, ஆனால் வலுவான அன்புக்கு கட்டுப்படுகிறார். இந்த உண்மையை விளக்க வள்ளலார் பாடியுள்ள பாடல் ஒன்று ஈண்டு நினைவு கூறத்தக்கது.

பரசிவ வணக்கம்-திருவருட்பா 6-ம் திருமுறை – பாடல் எண்: 3

     அன்பென்னும் பிடியில் அகப்படும் மலையே

     அன்பெனும் குடில் புகும் அரசே

     அன்பெனும் வலைக்கு உட்படும் பரம்பொருளே

     அன்பெனும் கரத்தமர் அமுதே

     அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

     அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

     அன்பெனும் அணுவுள் அடைந்த பேரொளியே

     அன்புருவாம் பரசிவமே

(கடம்-குடம், பரமசிவம்-கடவுள்) தாயுமானவர், பராபரக்கண்ணி என்ற தலைப்பில் பாடியுள்ள பாடல்களில் அரிய உண்மைகள், எளிய நடையில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று அன்பைப் பற்றியது அது பின்வருமாறு:

நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே

மஞ்சன நீர் பூசைகொள்ள வாராய் பராபரமே.

ஒரு பக்தனின் உயிரில் இறைவன் ஒன்றாக கலப்பது இங்கு தெளிவுபடுத்தப்பட்டது. அந்த அன்பு வடிவான இறைவன் மனித உருவில் வருகிறார். இது கோபிகையின் எதிர்பார்ப்பாகும்.

– தொடரும்…

– சா. செல்லப்பாண்டியன், மனுஜோதி ஆசிரமம்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்