தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன? – 7

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன? – 7

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த
ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன?

பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்திருவருட்பா 6-ம் திருமுறை

பாடல் எண் 1064: ……உமது பேராசைப் பேய் பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்

பிச்சி எனப் பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ

நாராசம் செவிபுகுந்தால் என்ன நலிகின்றாள்

விளக்க உரை: உமது பேராசைப் பேய் பிடித்தாள்” கோபிகையின் தோழி, இறைவனிடம் கோபிகை அளவுமிகுந்த ஆசை வைத்துள்ளதைக் கண்டு இறைவனிடம் இந்த விதமாக கூறுகின்றாள். “இறைவனை கிரஹித்து உணர்ந்த பக்தர்கள், இறைவன் மீதுதான் தங்களின் ஆசையை வைக்க வேண்டும். உலகத்தின்மீதுள்ள ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை இங்கு வள்ளலார் வலியுறுத்துகிறார். அந்தவிதமாக இறைவனிடம் பிரேமை பக்தியின் உச்சநிலை அடைந்தவர்களைப் பார்த்து, இந்த உலகத்தவர்கள் பேய் பிடித்தவன், பைத்தியக்காரன் என்று கூறுகிறார்கள். அதை இறைவனை கிரஹித்து உணர்ந்த ஒரு பக்தன் பொருட்படுத்துவதில்லை. ‘உலகர்க்கு உய்வகை கூறல்’என்ற தலைப்பின்கீழ் உள்ள பத்து பாடல்கள் ஒவ்வொன்றின் இறுதி வரியிலும், எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே”என்று வள்ளலார் உலகத்தவரை சாடுவதை நாம் காணலாம். ஆகவே உலக ஆசைகளின் பின்னால் தீவிரமாக சென்று கொண்டிருப்பவர்களும், இறைவன்மீது தீவிரமான பக்தி கொண்டிருப்பவர்களும் ஒருபோதும் இணைந்து செல்ல முடியாது என்பது தெளிவான உண்மையாகும்.

கள்ளுண்டு பிதற்றும்….. பிச்சி என பிதற்றுகின்றாள்” இங்கு கோபிகையின் தோழி, கோபிகையைக் கள்ளுண்டவள் என்று கூறவில்லை. கள்ளுண்டு தன் நினைவை இழந்த பைத்தியக்காரிபோல உளறுகிறாள் என்றுதான் குறிப்பிடுகிறாள். கள்ளுண்ணல் அல்லது மதுவருந்துவதினால் ஏற்படும் கேடுகளை இறைவனை கிரஹித்து உணர்ந்த ஓர் மனிதன் தெரிந்துகொண்டால், அவன் இறைவனோடு தான் கொண்டுள்ள ஐக்கியத்தில் எச்சரிக்கையாக முன்னேறிச் செல்ல முடியும். அனைத்து வேதங்களும் நமது நாட்டின் புராதான ஞான நூல்களும் இந்த ‘மதுவை’ பற்றி என்ன சொல்கின்றன என்பதை நாம் இனி பார்ப்போம்.

விவிலியம்: நீதிமொழிகள் 23:20,21: மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்……

நீதிமொழிகள் 23:29-35: ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரிகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்”.

ஏசாயா 28:7: ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்”.

திருக்குர்ஆன்ஸூரா 5:90,91: விசுவாசிகளே! மது, சூதாட்டம், குறிகேட்பதற்கான அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள், வெற்றி பெறுவீர்கள்”. மது மற்றும் சுதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையை, வெறுப்பை ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும், உங்களை தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக்கொள்ளமாட்டீர்களா?”

ஹதீஸ்: மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும். மது அருந்துபவன் தொழுகையை விட்டு விடுவான். (நூல்தப்ரானி)

திருக்குறள் 922: உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா

னெண்ணப்பட வேண்டாதார்”

தெளிவுரை: கள்ளைக் குடிப்பது கூடாது; சான்றோரால் மதிக்கப்படுவதை விரும்பாதவர் வேண்டுமானால் குடிக்கலாம்.

திருக்குறள் 925: கையறியாமை யுடைத்தே பொருள் கொடுத்து

மெய்யறியாமை கொளல்”

தெளிவுரை: ஒருவன் பொருளை கொடுத்துக் கள்ளை உண்டு தன் உடலையே மறக்கும் நிலையை அடைதல் செய்வது அறியாத அறியாமையேயாகும்.

ரிக் வேதம் 6,5; 4,4: பொய், களவு, கொலை இவற்றைப்போல் மது அருந்துதல் தீய செயல், அதை தவிர்க்க வேண்டும் என்று ரிக் வேதம் கூறுகிறது. சாந்தோக்ய உபநிஷத்: களவாடுதல், பிறர்மனை விரும்பல், சான்றோரைக் கொல்லுதல், கருவை சிதைத்தல், கள் குடித்தல் (மது அருந்துதல்) இவை பஞ்சமா பாதகங்கள். அர்த்த சாஸ்திரம்: மது அருந்துவதால் சுய உணர்வு அழிகிறது. மது உண்பவன் பித்தனாகிறான். உயிரற்ற சடலம் போல் விழுந்து கிடப்பான். குடிகாரனிடம் எந்த இரகசியமும் தங்காது. அவன் புரிந்த பாவங்களெல்லாம் வெளிப்பட்டு விடும். அவன் கல்வி, மதிநுட்பம், செல்வம், உடல் நலம், நண்பர்கள், புகழ் எல்லாமே அழிந்துவிடும். சான்றோர் உறவு அறவே போய்விடும். தீயவர்களும், இழிந்தவர்களும் துணைவர்களாக வந்து சேர்வார்கள். பெண் மோகம், களவு ஆகியவற்றைவிட மோசமானது மது பழக்கமாகும்.

வால்மீகி இராமாயணம்: தீயவன், கருமி, எப்போதும் மது மயக்கத்தில் கிடப்பவன், வீண் செருக்கு உள்ளவன், மூடன், நல்ல நடத்தை அற்றவன் ஆகிய மனிதர்கள் தொல்லைகளை அனுபவிக்க நேரும்போது, எவரும் உதவிக்கு முன் வரமாட்டார்கள். அவன் நிராதவராகப் பரிதவிக்க வேண்டியதுதான். குடிகாரனுக்கு அறம், பொருள், இன்பம் மூன்றுமே எட்டாக்கனிகளாகும்.

பஞ்ச தந்திரம்: காக்கைகளிடம் தூய்மை, குடிகாரனிடம் உண்மை, பாவியிடம் பொறுமை, கோழைகளிடம் துணிச்சல், குடிகாரனிடம் நற்சிந்தனை, அதிகாரிகளிடையே ஒற்றுமை இவற்றை எவரும் எங்கேயாவது கண்டதோ கேட்டதோ உண்டா? சரச ஸம்ஹிதை: அளவுமீறிய மதுபானத்தால் ஆண்மை பறிபோகிறது. மோகம், பயம், சோகம், பகை, வலிப்பு நோய், மாரடைப்பு, மரணம் எல்லாம் மதுபானத்தால் விரைவில் வந்து சேரும். விஷ்ணு புராணம்: குடிகாரன் முதலிய பாவிகள் சூகர முகம் என்னும் நரகத்துக்குப் போய் அங்கே பலகாலம் வதைபடுகிறார்கள். கௌதம ஸ்மிருதி: மதுபானம், சுதாட்டம், காமச்சேர்க்கை, வேட்டை இந்த நான்கும் மனிதனை ஆசை வெள்ளத்தில் இழுத்துச் சென்று விரைவில் அழித்து விடும்.

மதுவினால் ஏற்படும் தீமைகளை கோபிகை அறிந்துகொண்டதால் அதை அவள் முற்றிலும் வெறுத்து, அதை விட்டு விலகியபோதிலும் இறைவனுடைய பேரின்பத்தில் திளைத்திருக்கும் அவளைப் பார்த்து இந்த உலகத்தவர் அவளை கள்ளுண்டவள் என தூற்றுகின்றனர். அதற்கு கோபிகை அளிக்கும் பதில் திருவருட்பா 6-ம் திருமுறையில், பாடல் எண் 2456-ல் கொடுக்கப்பட்டுள்ளது. பாடலும், அதின் தெளிவுரையும் வருமாறு:

தலைப்பு: “அனுபவமாலை”

கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனக சபை நடுவே

கண்டதுண்டு சிற்சபையில் உண்பதும் உண்டடிநான்

எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே

என்றும் இறவாநிலையில் இருத்துங்கள் உலகர்

உள்ளுண்டபோது மயக்குற்றிடுங்கள் அலவே

உள்ள மயக்கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்

அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்துக் கண்டால்,

அறிவுதரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே.

தெளிவுரை: தோழி! என்னைப் பலரும் கள்ளுண்டு களிக்கின்றாள் என்று சொல்லுகின்றார்கள். நான் அதைப் பொற்சபையின் நடுவே கண்டதுமுண்டு; ஞான சபையிலே யான் உண்டு மகிழ்ந்ததுமுண்டு. இகழப்படுகின்ற ஐம்புலன்களாகிய இந்திரிய விஷயங்களில் என்னைக் கீழ்மையுறத் தள்ளுகின்ற கள்ளன்று. எக்காலத்தும் மரணமில்லாத நித்திய இடத்தில் என்னை இருக்கவைக்கும் உயர்நிலைக் கள்ளாகும். மேலும் அது உலகத்தவர்கள் வயிற்றுக்குள்ளே உண்டபோது, மயக்கம் உண்டாக்கும் கள் அல்ல. உள்ளத்தில் உள்ள மாயையான மயக்கங்கள் அனைத்தையும் போக்குகின்ற ஞானக்கள்ளாகும். என்னை நெருங்கியுள்ள மற்றவர்களும், அடுத்தடுத்து என்னைப் பலமுறையும் காண்பவர்களானால், யான் உண்ட அந்த சிவபோகமாகிய கள் அவர்களுக்கு இங்கே ஞானவிளக்கத்தைத் தரும் என்பதை நீ அறிவாயாக! கோபிகை இங்கு தான் உண்டதாகக் கூறுகின்ற ஞானக்கள்ளை நாமும் உண்டு ஐம்புலன்கள் மூலம் பிறக்கின்ற எல்லா மயக்கங்களினின்றும் விடுவிக்கப்பட இறைவன் அருள்புரிவாராக! இறைவன் பூமிக்கு வருகை தந்து அவர் அளிக்கின்ற செய்தி (உபதேசம்) தான் ஞானக்கள் என்று வள்ளலார் இங்கு குறிப்பிடுவதை இறைவனைக் கிரஹித்து உணர்ந்த ஓர் மனிதன் அறிந்துகொள்ள முடியும். அது ஸ்ரீமந் நாராயணரும் அருட்பெருஞ்ஜோதியின் ஆண்டவரும், தனிப்பெருங்கருணையையும் உடைய ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் செய்தியாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

தொடரும்

சா. செல்லப்பாண்டியன், மனுஜோதி ஆசிரமம்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்