தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன? – 5

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன? – 5

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன?

சென்ற இதழின் தொடர்ச்சி…..

பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்: திருவருட்பா 6-ம் திருமறை (வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள வசதியாக இப்பாடல் பதம் பிரித்து எழுதப்பட்டுள்ளது).

பாடல் எண் 1064:   ஊராசை உடலாசை உயிர் பொருளின் ஆசை

                உற்றவர் பெற்றவராசை ஒன்றுமிலாள் உமது

                பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்

                பிச்சி எனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர் கேட்டிடிலோ

                நாராசம் செவிபுகுந்தால் என்ன நலிகின்றாள்

                நாடறிந்தது இது எல்லாம் நங்கை இவள் அளவில்

                நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய் மலர வேண்டும்

                நித்தியமாமணிமன்றில் நிகழ் பெரிய துரையே

விளக்க உரை: உயிர் ஆசை:  நபிகள் நாயகம், அவர்களுக்கு பிரபலமான ஸஹாபியாக ஹஜ்ரத்ஹுதைபா என்பவர் இருந்தார். ஹஜ்ரத்ஹுதைபா அவர்களுக்கு மரண நேரம் நெருங்கியபோது, திடுக்கமுற்று நிம்மதியற்றவர்களாக அழுது கொண்டிருந்தார்கள். அதனைப்பற்றி ஜனங்கள் விசாரித்தபோது, “உலகத்தை விட்டுச் செல்வதற்காக நான் அழவில்லை. மாறாக மரணிப்பது எனக்கு மிக விருப்பமான விஷயமாகும். எனினும் இறைவனுடைய திருப்தியைப் பெற்றவனாக உலகத்தை விட்டுச் செல்லவிருக்கின்றேனா அல்லது அவருடைய கோபத்திற்குள்ளவனாகச் செல்லவிருக்கின்றேனா என்பது தெரியவில்லையே என்றுதான் அழுது கொண்டிருக்கிறேன் என்று கூறிய பின்னால், இது உலகில் என்னுடைய கடைசி நேரமாகும். யா அல்லாஹ்! எனக்கு உன்மீது அன்பு இருக்கிறது என்று உனக்குத் தெரியும். ஆகையால் உன்னுடைய சந்திப்பில் எனக்கு நீ பரக்கத் (ஆசீர்வாதம்) செய்வாயாக! என்று கூறினார்கள்.

திருநாவுக்கரசர்: சமண மதத்தை விட்டு விலகி – சிவநெறியில் இறைவனை கிரஹித்து உணர்ந்த நாவுக்கரசர் எவருக்கும் அஞ்சாமல் வாழ்ந்து வந்தார். சமணர்கள் சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்தார்கள். தம்மை மன்னன் அழைத்து வரச்சொன்னதாக அமைச்சர் முதலியோர் வந்து கூறியபோது: “நாம் யார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” என்று துவங்கும் பாடலைப் பாடி அவர்களுக்கு பதில் அளித்தார். இங்கு நமன் என்பது எமனையும், நடலை என்பது மரணத்தையும் குறிக்கும். ஆகவே மேற்கூறப்பட்ட சான்றுகள் இறைவனை கிரஹித்து உணர்ந்த ஒரு பக்தனுக்கு உயிர்மேல் ஆசை கிடையாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாகும்.

பொருளாசையைப் பற்றி விவிலிய நூல் கூறுவது: “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும், அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்று இயேசு பிரான் கூறினார். லூக்கா 12:15: “மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை இழந்துவிட்டால் அவனுக்கு லாபம் என்ன?” என்று கேட்டவரும் அவரே. “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, இறைவன்மீது நம்பிக்கையை விட்டு விலகி அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று தீர்க்கதரிசி பவுல் கூறுவது சிந்தித்து உணரத்தக்கதாகும். இறைவனுக்கும், உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய  ஒருவனால் கூடாது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒரு மனிதனாக இந்த உலகில் இறைப்பணி செய்தபோது, அனைத்து தேவைகளுக்கும் இறைவனையே முற்றிலுமாக சார்ந்திருக்க வேண்டும் என்று போதித்தது மாத்திரமல்ல, அதை தன்னுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் காட்டினார் என்பது மறுக்க முடியாத, மறக்க முடியாத, மறைக்க முடியாத மாபெரும் சத்தியமாகும். “பணத்தின் ஆசையை வேரோடு வெறுத்தவர், பாசத்தாலே உலகத்தையே வென்றவர்” என்று பக்தர் ஒருவர் லஹரி கிருஷ்ணாவைப் பற்றி பாடியது இங்கு நினைவு கூறத்தக்கது. பொருளாசை என்றால் அக்கிரமம் என்று விவிலியம் கூறுகிறது. பொருளாசை என்பது இறைவனை கடுமையாக கோபம் மூட்டுகிறது. “நான் அவர்களின் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி அவர்களை அடித்தேன்” என்று விவிலிய நூலிலுள்ள ஏசாயா 57:17-ல் இறைவன் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை நாம் சிந்தித்து உணர வேண்டும். நமது வள்ளலார் அவர்களும், “பிள்ளைச் சிறு விண்ணப்பம்” என்ற தலைப்பில் பாடல் எண் 199-ல் அடியிற்கண்டவாறு குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது:

பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றிலை நான் படைத்த அப்பணங்களைப் பலகால்

கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்

குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே

கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளைக் கண்டனன் இனிச் சொல்வதென்னே.

பொருளாசை பற்றி திருக்குர்-ஆன் கூறுவது: சூறா 9:34: “நம்பிக்கையாளர்களே! (அவர்களுடைய) பாதிரிமார்களிலும், சந்நியாசிகளிலும் நிச்சயமாக பெரும்பாலானவர்கள் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் புசிக்கின்றனர். இன்னும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களை தடுக்கின்றனர். மேலும் எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைத்து, அவற்றை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யவில்லையோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையைக் கொண்டு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக”. சூறா 102:1-ல் “செல்வத்தையும், மக்களையும் ஒருவருக்கொருவர் அதிகமாக தேடிக்கொள்வது அல்லாஹ்வை விட்டும், உங்களை மெய்மறக்கச் செய்து விட்டது” என்று அல்லாஹ் ஒரு கூட்ட மக்களைப் பார்த்து கூறி, அவர்கள் நரகத்தை திண்ணமாக காண்பார்கள் என்று அதே சூறா, வசனம் 6-ல் உறுதிப்படுத்துகிறார். சூறா 104:2,3 வசனங்களின்படி பொருளைச் சேமித்து அதை எண்ணி வைத்துக்கொண்டவனும், நிச்சயமாக தன்னுடைய செல்வம் தன்னை உலகில் என்றென்றும் வாழச் செய்து நிரந்தரமாக்கி வைக்கும் என்று எண்ணுகிறவனும், ‘ஹுதமா’ என்று கூறப்படும் அல்லாஹ்வின் எரியும் நெருப்பில் திண்ணமாக எறியப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. ஆகவே இறைவனைக்காட்டிலும், அதிகமாக உலகப்பொருளை நேசிப்பவன் இறைவனுக்கு உகந்தவனாக இருக்க முடியாது.

அல்ஹதீஸ் (நபிமொழி):- செல்வம் என்பது பொருட்களை அதிகமாக வைத்திருப்பதல்ல. போதும் என்ற மனம் படைத்திருப்பதே செல்வமாகும். (நூல்-‘புகாரி’) ஒவ்வொரு உம்மத்தினருக்கும் (சமுதாயத்தினருக்கும்) ஒரு சோதனை உண்டு. எனது உம்மத்தினருக்கு செல்வமே சோதனையாகும். (நூல்-‘திர்மிதி’) பேராசையும் அல்லாஹ்வின் நேசமும் ஒரே நெஞ்சத்தில் ஒன்று சேர்வதில்லை. உலக ஆசை பாவங்களின் வேராகும். நீ அதிகமாக விரும்பினால் அது உன்னை குருடனாகவும், செவிடனாகவும் மாற்றிவிடும்.

ஸ்ரீமத் பாகவத ஸாரம் (முதலாவது பாகம்): தன்னுடைய ஒரே குமாரனை இழந்து தவித்த சூரசேன தேசத்தை ஆட்சி புரிந்து வந்த ‘சித்திரகேது’ என்ற பெயர் கொண்ட அரசனிடம் அங்கிரஸ மஹரிஷி கூறியது: சூரசேனரே, புத்திரனைப் பெற்றவர்களுக்கு ஏற்படும் தாபம் உம்மால் இப்போது அனுபவிக்கப்படுகிறது. இவ்வாறே மனைவி, வீடுகள், செல்வம், பலவகைப்பட்ட ஐசுவரியம், சம்பத்து என்ற இவையெல்லாம் துன்பத்தையும், மதிமயக்கத்தையும், பயத்தையும் அளிப்பவையேயாகும். இவை கனவுக்கும், மாயைக்கும், மனோரதத்துக்கும் ஒப்பானவையாகும். (ஸ்கந்தம் 6:15,21) விருத்திரன் என்ற அசுரன் ஹரியிடம் வேண்டிக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அவன் ஹரியிடம் வேண்டுவது வருமாறு: (ஸ்கந்தம் 6:11,27) “பிரபுவே, என் கர்ம வசத்தால் பிறவிச் சக்கரத்தில் சுழலுகையில், எனக்கு உத்தமமான உன்னுடைய புகழைப் பேசும் பக்தர்களுடைய நட்பு ஏற்பட வேண்டும். மாயா பலத்தால், பிள்ளை, பெண்டு, வீடு என்பவற்றில் ஆழ்ந்த பற்றுள்ள எனக்கு அதே பற்று மீண்டும் ஏற்பட வேண்டாம்”.

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்-29-வது சுலோகத்தின் பொருள்:- “பொருளைப் பொருளாக கருதாமல் துன்பம் என்று எப்போதும் எண்ணுவாயாக. அதில் சிறிதளவும் இன்பம் இல்லை என்பது உண்மையாகும். பொருளைச் சேமிப்பவர்களுக்கு பிள்ளைகளிடமிருந்துகூடப் பயம் ஏற்படுகிறது. இதுவே எங்கும் இயல்பாக உள்ளது. ஆதிசங்கரரின் இந்தக் கருத்துக்கு கவிதை நடையில், கவிஞர் கண்ணதாசன் கூறும் விளக்கத்தை வரும் இதழில் பார்க்கலாம்.

– தொடரும்…

– சா. செல்லப்பாண்டியன், மனுஜோதி ஆசிரமம்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்