தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள், ஆன்மீக கருத்து » கடவுளின் கணக்கு

கடவுளின் கணக்கு

ஒரு ஊரில் ஒரு சாமியார் தனது குடிசையில் வசித்து வந்தார். அன்றாடம் காலை, மாலை இரு வேளைகளிலும் காவி உடை உடுத்தி, பூஜை, புனஸ்காரங்களுடன் தினசரி தியானம் செய்து வந்தார். அவர் துறவி என்பதால் மக்களிடம் அவருக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தது.

அவரது குடிசைக்கு எதிரில் சிறிது தொலைவில் ஒரு விலை மாது வசித்து வந்தாள். அவள் விலை மாது என்றாலும் தெய்வ பக்தி மிகுந்தவளாக இருந்தாள். வறுமையின் காரணத்தால் அவள் விபச்சாரம் செய்து வந்தாலும் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று கடவுளே! எனக்கு கருணை காட்டு, பாவத்தொழில் செய்யும் என்னை மன்னித்து, பரலோகத்தில் எனக்கு இடம் தர வேண்டும் என்று மனமுருகி தினமும் வேண்டி வந்தாள்.

காவி உடை உடுத்திய சாமியாருக்கு அவள் வேசித்தனம் செய்வது பிடிக்கவில்லை. தியான நேரம் போக மற்ற நேரங்களில் இவள் முகத்தில் விழிக்க வேண்டி இருக்கிறதே என்று தினமும் அவளை திட்டிக்கொண்டே இருந்தார். தியானம் முடிந்த பின்பு அவள் வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்றும், எப்போதும் அவள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதையே கண்காணித்துக் கொண்டிருந்தார். முடிந்தால் காவல் துறையில் புகார் செய்து அவளை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

இந்த நிலையில் துறவியும், விலைமாதுவும் இறந்து விட்டார்கள். விலைமாது பரலோகம் சென்றாள். சாமியாரோ நரகத்தில் இருந்தார். சாமியாருக்கு கடவுள்மீது கோபம் வந்தது. அவர் கடவுளிடம் சென்று, கடவுளே! இது என்ன அநீதி! தினசரி தியானம் செய்த எனக்கு நரகம். தினமும் விபசாரம் செய்த அந்த பெண்ணுக்கு பரலோகமா? என்று

ஆவேசமாக கேட்டார்.

கடவுள் அமைதியாக துறவியைப் பார்த்து் “நீ என்னை நினைத்த நேரத்தைவிட, விலைமாது வீட்டில் என்ன நடக்கிறது என்பதை நினைத்த நேரம்தான் அதிகமாக இருந்தது. உனக்கு எந்த தீங்கும் நினைக்காத அந்த பெண்ணை எப்படி துரத்துவது? நீ பொறாமையுடனும், கெட்ட புத்தியுடனும் செயல்பட்டாய். அதனால்தான் உனக்கு நரகம் கிடைத்தது. அவளோ தனது பாவச்செயலுக்கு மனம் வருந்தி எப்போதும் என்னுடைய நினைவில்தான் இருந்தாள். அதனால்தான் அவளுக்கு பரலோகம் கிடைத்தது” என்றார்.

– K. P. பாலு, தூத்துக்குடி

Filed under: ஆன்மீக கதைகள், ஆன்மீக கருத்து