தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர்

சுராபுரத்திலே அம்பாஜீ என்பவன் ஒரு பித்தன். அவன் பெற்றோர் மனம் நொந்து வருந்தியிருந்த சமயமும் தாஸர் அங்கே வந்து சேர்ந்த சமயமும் ஒன்றாயிருந்தன. அவர்கள் தாஸரது தாள் பணிந்து அம்பாஜீயை அழைத்து அவருக்கே அர்ப்பணம் என்று சொல்லி விடுத்தனர். தாஸர் உடனே ஐந்து கவிகளினாலே ஸ்ரீ ராமபிரானைத் துதிக்க அம்பாஜீயின் சித்தம் தெளிந்தது. அவன் தாஸருடன்கூடத் தானும் பக்திப் பணியில் ஈடுபடலானான். இப்படியே நாள்தோறும் நடைபெற்றுவர, வெளியூர்களினின்று நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வந்து, காலஷேபங்களிலும் பஜனையிலும் கலந்துகொண்டு திருவருளுக்கு இலக்காயினர். அக்காபாய் மறுபடி வந்து அடி பணிந்து அவருடனேயே இருக்க விரும்பினாள். தாஸர் அவளை நோக்கி, “நீயோ இளம் பெண் அழகும் அறிவும் நிறைந்தவள். இப்படி உள்ள ஒரு பெண் காட்டிலும் மேட்டிலும், சீடர் கூட்டத்திற்கு இடையிலும் வசிப்பது சரியன்று, உனக்கும் நல்லதன்று. மற்றவர்களுக்கும்
தீமையே, ராம நாமத்தை உறுதுணையாய்க் கொண்ட நீ வீட்டில் இருந்தால் என்ன, வெளியில் இருந்தால் என்ன? ஆகவே, நீ இப்பொழுது வீடு செல், உரிய காலம் வரும்பொழுது நீ எங்களுடன் தங்கலாம்” என்றார்.

அழகிய பசுங்குன்று. அதன் நடுவே ஒரு பெரிய சுனை. அருகில் உள்ள மரங்கள் அதன்மீது கவிந்திருந்ததினால் தண்ணீர் முழுவதும் ஒரே இலை மயமாக, அழுகியவும் புதியவுமான சருகுகளால் நிறைந்திருந்தது. ஆகவே, நீராடுவதற்குச் சங்கடமாய் இருந்தது. தாஸர் அண்மையிலுள்ள ஒரு கிளையை வெட்டும்படி பணித்தார். அம்பாஜீ ஒரு கோடரி எடுத்து வெட்டுவதற்காக மரத்தின்மேல் ஏறியவன் தடாலென்று சுனைக்குள் விழுந்து விட்டான். மற்றவர்கள், ‘ஐயோ!’ என்று அலறினார்கள். ஆனால் தாஸரோ, ஒன்றுமே கூறாமல் மௌனமாக இருந்துவிட்டார். அந்தச் சமயம் அக்காபாய் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாள். எல்லோருக்கும் இலைகள் போடப்பட்டபோழுது “அம்பாஜீ வரவில்லையே, கிணற்றில் விழுந்து விட்டாராமே அவர் வந்து சேராமல் எப்படி சாப்பிடுவது?” என்றாள். அதற்குத் தாஸர், “அதைப் பற்றிய கவலை என்னை சேர்ந்தது” என்றார். மௌனமாக ரொட்டிகளைப் பறிமாறினாள் அக்காபாய்.

சாப்பாடு முடிந்ததும் வந்து சேர்ந்தார் சத்திரபதி சிவாஜி வழக்கம்போல கலகலப்பின்றி அனைவரும் அமைதியாக இருப்பது கண்டு, அங்கே நிலவிய சோகத்தை அவர் கண்டு கொண்டார். அனால், குருநாதரிடம் எப்படிக் கேட்பது என்று அஞ்சித் திரும்பிவிட்டார். சீடர்களுக்கு அசாத்திய கோபம். “அரசராவது இதுபற்றி
ஒரு வார்த்தை கேட்கவேண்டாமா? என்ன அநீதி என்று குமுறிக்கொண்டிருந்தனர். அவர்கள் சுனையில் இறங்கித் தேடியும் பயன் இல்லை. இதன்பின் வேறொரு வனத்தில் ஏழு நாட்கள் தங்கியிருந்து தாஸர் அந்தச் சுனையின் அருகே வந்து சேர்ந்தார். அங்கே பஜனையும் முடிந்து சாப்பிட உட்கார்ந்தனர். அப்பொழுது தாஸர் உரத்த குரலில் ‘அம்பாஜீ’ என்றதும் , சுனைக்குள்ளிருந்து, ‘அடியேன்’ என்ற குரல் எழுந்தது. ‘கல்யாணமா?’ அதாவது சௌக்கியமா?’ என்றார் தாஸர். “குருநாதர் திருவருளால் கல்யாணமே” என்று சொல்லியவராகச் சுனையினின்றும் ஏறி வந்து, தாஸரை வணங்கி இலையில் உட்கார்ந்தார் அம்பாஜீ. அன்றுமுதல் அம்பாஜீயை கல்யாண கோஸ்வாமி என்று அழைக்கலாயினர் பக்தர்கள்.

இதன்பின் சத்திரபதி சிவாஜி அவரை நாட்டிற்கு அரசராக்க நினைத்து, மரத்தடியிலே ஆசனம் அமைத்து வழிபட்டு வணங்கினர். இந்தச் சமயத்திலேதான்
அவர் ஓர் அரசியல் நூலை எழுதி, சிவாஜியிடம் அளித்தார். அந்த நூலின் பெயரைத் தாஸபோதம் என்று அமைத்தார் சிவாஜி. அந்த அற்புதமான நூல் இரண்டே நாளில் உருவாயிற்று. அதில் ஒன்பது சருக்கங்கள் உள்ளன. அவை ராஜ நீதியை மிகமிகத் தெளிவாகப் போதிப்பவை. அதைப் பாராயணம் செய்யச் செய்யச் சிவாஜிக்குப் பல விஷயங்கள் தெளிவாயின. இவருடைய உபதேசங்கள் கொண்ட குரு கீதை, தாஸ போதம் என்ற இரண்டு நூல்களையும் இரு கண்கள் போலப் போற்றிப் பின்பற்றி வந்தார் சிவாஜி. இதனால் அவரது அரசாட்சி மேலும் செழிப்புறலாயிற்று.

அந்தணர் ஒருவர், “குடும்பத் தொல்லையைப் பொறுக்க முடியவில்லை. அடியேனுக்கு இதிலிருந்து விடுதலையளிக்க வேண்டும்” என்று விண்ணப்பித்துக்
கொண்டார். தாஸருக்கு அவரை நெடுநாட்களாகத் தெரியும். அவரது கேள்விக்குச் சென்று, அந்த அந்தணரை அருகே வரும்படி அழைத்தார். கரையிலிருந்த பெரியதோர் மரத்தின் கிளை குளத்தின்மீது கவிந்து வளைந்திருந்தது. தாஸர் இந்தக் கிளையைக் காட்டி அதன் மேலேறித் தண்ணீர்ப் பரப்பின் மேலே வரும்படி சொன்னார். அவர் ஏறிக் கிளையின் நுனிக்கு வந்ததும், “கிளையைப் பற்றிய வண்ணம் தொங்கு” என்றார். அந்தணர் கிளையைப் பற்றியபடியே தொங்கலானார். பிறகு தாஸர் கனிவுடன் கூடிய குரலில், “கிளை உன்னைப் பற்றிக்கொண்டிருக்கிறதா? அல்லது நீ அதைப் பற்றிக்கொண்டிருக்கிறாயா?” என்றார்.

“ஸ்வாமி! அடியேன்தான் கிளையைப் பற்றிக்கொண்டு தொங்குகிறேன்!” என்றார்”. இதிலிருந்து உனக்கு ஏதாவது விளங்குகிறதா?” என்றார் தாஸர். இந்தச்
சாராம்சத்தை நானேதான் பற்றிக்கொண்டிருக்கிறேன். இது என்னைப் பற்றிக் கொண்டிருக்கவில்லை. நான் விரும்பினால், இந்தப் பற்றை விட்டுவிடலாம்” என்றார்.
அந்தணர் தடாலென்று குளத்தில் விழுந்தார். விழுந்தவர் தண்ணீருள் அமிழ்ந்தே போனார். அங்கே பொன் மயமானதொரு மண்டபத்திலே தாஸர் அரசராய்
வீற்றிருப்பதையும், பக்தர்களுள் ஒருவர் தாஸபோதம் படித்து விரிவுரை சொல்லுவதையும் கண்டார். இந்தச் சமயம் தாஸர் குளத்தின் கரையில், “வருக! வருக!” என்று அழைப்பது கேட்டு நீந்திக் கரை சேர்ந்து தாஸரைப் பணிந்தார் அவர்.

– தொடரும்…

*******

Filed under: பத்திரிகை செய்திகள்