தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர்

சத்திரபதி சிவாஜி உபதேசம் பெறுதல்

நாள்தோறும் பஜனையும், உஞ்சவிருத்தியும் நடந்து வந்தன. கிடைத்ததை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து, பாகவதர்களுக்கு ஈந்து, பிறகு தாமும் உண்பார். பிறகு காட்டை நோக்கிச் சென்று தவத்தில் ஈடுபடுவார்.

ஒருநாள் சத்திரபதி சிவாஜி காட்டிற்கு வேட்டையாட வந்தார். காடு ஒரே அமைதியில் ஆழ்ந்திருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். விலங்குகளின் கூட்டத்திற்கிடையே ஒரு பெரியவர் கண்மூடியவராய்ப் பாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. ‘நாம் புகுந்தால் இந்த மிருகங்கள் கலைந்து ஓடி அவரைத் துன்புறுத்தவும் கூடும்’ என்று அஞ்சியவராய் மறுநாள் அதிகாலையிலேயே வந்து தரிசிப்போம் என்று திரும்பினார். மறுநாளும் அவ்வாறே அவர் வந்து சேரும் சமயத்தில் விலங்குகளின் கூட்டம் காணப்பட்டது. உள்ளே புகமுடியாத நிலையில் திரும்ப நேர்ந்தது. உரிய காலம் வரவில்லை என்று ஏங்கினார் சிவாஜி.

பிறகு ஒருநாள் திரும்பும்பொழுது, எழுதப்பட்ட சில ஓலைகள் கிருஷ்ணா நதியிலே மிதந்து வருவது தெரிந்து பணியாட்களை ஏவி எடுக்கச் செய்தார். அவற்றில் அழகிய கருத்துக்கள் அமைந்த கவிதைகள் மராத்தி மொழியிலே எழுதப்பட்டிருந்தன. அடியிலே ராமதாஸ் என்ற கையொப்பமும் கண்டு, அவற்றை எழுதியவர் காட்டிலே தாம் கண்ட பெரியவராகத்தான் இருக்க வேண்டும் என்று சிவாஜி நினைத்தார். அந்த அருமையான கவிதைகளைச் சபையோருக்கும் படித்துக் காட்டி வியந்தார்.

சிவாஜி நாள்தோறும் சென்றும் சந்திக்க இயலாமல் திரும்புவதும், மகாராஷ்டிர கவிதைகளைப் புகழ்வதும் பொறுக்காத சிலர், ‘‘நீர் இந்தக் கவிதைகளைப் புகழ்வது சரியன்று, நாள்தோறும் சென்றும், சத்திரபதி என்று மதியாத கர்வியான அவரைத் தவிர, உங்களுக்குக் குருநாதராக வரிக்கத்தக்க பெரியார்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். வடமொழியிலே இதைக் காட்டிலும் அதி அற்புதமான கவிதைகள் ஏராளமாக இருக்கின்றன’’ என்றனர். சிவாஜி அவைகளைச் செவியில் ஏற்காமல் மீண்டும் தாஸரை நாடி வனத்துட் புகுந்தார்.

சிவாஜி அங்கே சென்றபொழுது மாருதி பொன்மேனியுடன் அழகே வடிவாக அவர் முன்னே நிற்பதைக் கண்டார். அவனது பொன்னொளியில் இவரது கண்கள் கூசின. கண்களைச் சற்றே மூடித் திறந்தபொழுது மாருதி அங்கே இல்லை சிவாஜி அருகே சென்றார். ராமதாஸரது திருவடிகளிலே வீழ்ந்து, “ஸ்வாமி! எனக்கு அஞ்ஞானம் ஒழிந்து மெய்ஞ்ஞானம் உண்டாவதற்கு அருள் செய்யவேண்டும்” என்றார்.

ராமதாஸர் மிகவும் அமைதியான குரலில், “நீங்களோ, அரசர்; நானோ, பிச்சையாண்டி; உமக்கு உபதேசிக்கத்தக்கவன் அல்லன். வேறு தக்க குருவைத் தேடி அடையுங்கள்” என்றார். “ஸ்வாமி! நான் உங்களையே குருவாக நினைத்துவிட்டேன். இனி மாற்றுவது எப்படி? நீங்கள்தான் எனக்கு ஞானோபதேசம் செய்யவேண்டும்” என்று இறைஞ்சி நின்றார் சிவாஜி.

சற்றே நிதானித்தார் தாஸர். பிறகு, “சரி, நீராடி வந்தால் உபதேசம் செய்கிறேன்” என்றார். சிவாஜி நீராடிப் புனிதராகிப் பழவகைகளையும், தொன்னையிலே தண்ணீரையும் எடுத்து வந்து அவர் எதிரிலே வைத்துப் பதினொருமுறை வணங்கி எழுந்தார். பிறகு முறைப்படி சீடருக்கு உபதேசம் செய்தார் ராமதாஸர். உபதேசம் பெற்ற சிவாஜி, “உடல், பொருள், ஆவி இம்ன்றும் உமக்கே அர்ப்பணம்” என்று கூறிப் பணிந்தெழுந்தார். பிறகு தாஸர், “நகரத்துக்குச் சென்று ராமநாமத்தையும், தெய்வபக்தியையும் பிரச்சாரம் செய்து மக்களை நல்வழிப்படுத்துவாயாக” என்றார்.

சிவாஜி திடுக்கிட்டெழுந்தார். “ஸ்வாமி! உடல், பொருள், ஆவி, இம்மூன்றும் உமக்கே என்று சொல்லிவிட்டேன். அரசாட்சி என்பதும் உம்முடையதே. குடிமக்களை நல்வழிப்படுத்துவதும், சிறந்த குடிகளாக்குவதும் உமது பொறுப்பே”என்று மீண்டும் வணங்கினார்.

“சரி! நீ வழங்கியவை என்னுடையவைகளே என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால், எனக்குப் பிரதிநிதியாக நீ ஆளக்கடவாய், மேலும் நாடு என்னுடையது என்று நீ சொல்லிவிட்டாய், ஆகவே, உனது கொடி காவிக்கொடி, அது பகவான் கொடியாக இருக்கட்டும். மேலும், நாட்டிலே ஒருவரை ஒருவர் சந்திக்கும்பொழுது ராம் ராம் என்று சொல்லிய பிறகே பேசத் தொடங்க வேண்டும் என்பதையும் வற்புறுத்தி அமுலுக்குக் கொண்டு வரவேணடும்” என்றார்.

– தொடரும்…

*******

Filed under: பத்திரிகை செய்திகள்