தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » ஐம்புலன்களுடைய ஜீவராசிகளிடமிருந்து ஆறறிவு படைத்த மனிதன் கற்க வேண்டிய பாடங்கள்

ஐம்புலன்களுடைய ஜீவராசிகளிடமிருந்து ஆறறிவு படைத்த மனிதன் கற்க வேண்டிய பாடங்கள்

இறைவனை விட்டு விட்டு மனிதன் வழி தவறிப்போகிறான். அவருக்கு நன்றி கூறுகிறதில்லை என்று ‘சுகாமணி’ என்ற புனித நூலில் குரு அர்ஜுனன் என்பவர் இவ்வாறு அங்கலாய்க்கிறார். “மானுடனே! இறைவனின் நன்மைகளையும், அதிசயங்களையும் எண்ணிப்பார். நீ எப்படிப்பட்ட கீழான நிலையிலிருந்து மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறாய் என்று எண்ணிப்பார். உன் தாயின் கர்ப்பத்தில் உன்னை அவர் பத்திரமாக பாதுகாத்தார். நீ குழந்தையாக இருக்கும்போது, நீ அருந்த தாய்ப்பாலை கொடுத்தார். நீ இளைஞனானபோது நல்ல உணவையும், சௌகரியங்களையும் கொடுத்தார். மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், நண்பர்களுடன் உறவாடி மகிழ்ந்திருக்கிறாய். நீ வயதானபோதோ உன்னை கவனிக்க நண்பர்களையும், உறவினர்களையும் அருளினார். அவருடைய அருளினால் உனக்கு குடிக்க குளிர்ந்த நீர் கிடைக்கிறது. இனிய தென்றலையும், உணவு சமைக்க அக்கினியையும் வழங்கினார். கை, கால், கண், காது, மூக்கு, வாய் போன்ற அவயவங்களைப் படைத்தார். ஆனால் மனிதன் உன் நன்மைகளை மெச்சிக்கொள்ளுகிறதில்லை, பாராட்டுகிறதில்லை. இவ்வளவு நன்மைகளை கொடுத்த இறைவனை விட்டு விட்டு மற்றவர்களிடம் மனிதனுக்கு பற்று ஏற்படுகிறது. கழுதையின்மேல் சந்தனத்தைப் பூசினால், அது அதை உதறி விட்டு, சாம்பலில் சந்தோஷமாக புரளும். அதைப்போல மனிதன் இறைவனை விட்டு விட்டு மாயையில் புரளுகிறான்” என்கிறார். ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்பது பழமொழியாகும். கழுதையைப்போல நாமும் இல்லாமல், இவ்வுலகில் இறைவனை மறக்காமலிருக்க வேண்டும். ஆகையால்தான் பெரிய புராணத்தில் சேக்கிழார் ‘இறைவா, உன்னை என்றும் மறவாமை வேண்டும்’ என வேண்டுகிறார்.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவும் கழுதையை உவமையாக கூறியுள்ளார். யாருக்கும் கழுதையை பிடிக்காது. ஏனென்றால் அது எப்பொழுதும் உதைத்துக்கொண்டேயிருக்கும். இயேசு பிரான் இப்பூமியில் அவதரித்தபோது, அவர் கழுதையின்மேல் சவாரி செய்ததாக விவிலியம் கூறுகிறது. அதின்மேல் சவாரி செய்வதற்கு அவருக்கு அதிக பொறுமை இருந்தது. மனிதர்களாகிய நாமோ கழுதை உதைப்பதைப்போல இறைவனை நிராகரித்துக் கொண்டேயிருக்கிறோம். இறைவன் நமக்காக பொறுமையாக காத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்காக நாம் அவ்வாறு இருக்கக்கூடாது.

பாம்பை பற்றி இயேசுபிரான் இவ்வாறு கூறியுள்ளார்: “…..சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்”. பாம்பைப்போல ஞானமுள்ளவர்களாக இருங்கள் என்று ஏன் இயேசு கூறுகிறார்? பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்போது, ஆள்அரவம் கேட்டவுடன் யாரோ வருகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு அந்த வழியில் செல்லாது. அதைப்போல தீங்கு அல்லது ஆபத்து வரப்போகிறதை, பாம்பைப்போல அறிந்துகொண்டு தப்பித்துக் கொள்ளுங்கள். அதுமாத்திரமல்ல, பாம்பால் தனது வாலைத்தானே கவ்விக்கொள்ள முடியும். வேறு எந்த உயிரினத்திற்கும் இது சாத்தியமல்ல. அதின் அர்த்தமாவது ‘உன்னையே நீ அறிவாய்’ என்பதுதான். அத்துடன் அது தன் வாலையே விழுங்கும். சர்ப்பம் நித்தியத்தை அதாவது ஆதி அந்தம் இல்லாத நிலையைக் குறிக்கிறது. கிழக்கு தேசத்திலிருந்து வந்த ஞானிகளுக்கு “நாகர்கள்” என்று இன்னொரு பெயரும் உண்டு. அவர்களைப்போல ஞானிகளாக இருக்க வேண்டும் என்று இயேசுபிரான் கூறினார் என்று ஏற்றுக்கொள்ளலாம்.

“அடக்கம் உடையார் அறிவிலார் என்று எண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு” என்று மூதுரையில் ஒளவையார் கூறியுள்ளார். அமைதியுடன் இருக்கும் அடக்கம் உடையவரை அறிவற்றார் என எண்ணி, அவரை ஏமாற்றி விட நினைக்க வேண்டாம். நீர்க்கரையில் சிறு மீன்கள் ஓடிச் செல்வதைப் பார்த்திருந்து, அவற்றை விடுத்து பெரிய மீன்கள் வருவதற்காக காத்திருக்கும் கொக்கை போன்றவர்களாகவும், அவர்கள் இருக்கலாம் என்பது இப்பாடலின் பொருளாகும். அறிவுடையவர்கள் கொக்கைப்போல பொறுமையாக இருப்பார்கள். அடக்கமுடையவர்களாக, படித்தவர்களாக வேண்டுமானால், மனிதனுக்கு பொறுமை தேவை என்பதை நாம் ‘கொக்கு’ என்ற பறவையிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.

இயேசுபிரான் மீனவர்களை தம் சீஷர்களாக்கினார். ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கு அதிக பொறுமையிருக்கும். மீன் வலையில் சிக்க அதற்கேற்ற உணவை தூண்டில் முள்ளில் மாட்டிவிட்டு பொறுமையாக காத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் தூண்டிலிலுள்ள உணவை சாப்பிட்டு விட்டு மீன் சிக்கிக்கொள்ளும். மனிதர்களை இறைவனுடைய சீடர்களாக்குவதற்கும் இதே பொறுமை தேவைப்படுகிறது. அத்துடன் எந்த புழுவை தூண்டில் முள்ளில் மாட்டினால் மீன் அதை சாப்பிட வரும் என்பதை அறிந்துகொண்டு மீனவர்கள் செயல்படுவார்கள். அதைப்போலவே ஒருவனுக்கு எந்த வகையில் கூறினால், அவன் இறைவனின் தத்துவங்களை ஏற்றுக்கொள்வான் என்ற சாமர்த்தியத்தையும் அவர்கள் அறிந்திருப்பர். ஆகையால்தான் இயேசு பிரான் அவர்களை சீஷர்களாக்கினார். ‘கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்று ஒளவையார் கூறியதுபோல இன்னமும் கற்க வேண்டியவை இருக்கிறது. நாம் கற்றுக்கொள்வோம்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்