தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றமே!

ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றமே!

சீதையை எவ்வாறு அடைவது என்று எண்ணி எண்ணி ராவணன் ஏங்கினான். ராமரை எவ்வாறு
அடைவது என்று எண்ணி சூர்ப்பனகை ஏங்கினாள். இருவரும் மாயாவிகள். மாயம் செய்வதில் வல்லவர்கள். திடீரென்று ராவணனுக்கு ஒரு யுக்தி தோன்றியது. ‘சீதை ராமருடைய வரவையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். நாம் ராமர் வடிவுடன் சென்றால் கணவன் என்று ஓடி வந்து என்னைத் தழுவிக் கொள்வாள்’ என்று எண்ணி ராமருடைய வடிவத்தைக் கொண்டு புறப்பட்டான்.

சூர்ப்பனகை, நாம் சீதை வடிவம் எடுத்துக் கொண்டு கிஷ்கிந்தையில் சீதைக்காக ஏங்கிக்
கொண்டிருக்கும் ராமன் முன் போய் நின்றால், அவன் நம்மை கட்டியணைத்துக் கொள்வான். இது சரியான யுக்தி’ என்று கருதி, சீதை வடிவத்துடன் புறப்பட்டாள். மாறு வடிவம் கொண்ட ராவணனும், சூர்ப்பனகையும் அசோகவனத்தில் சந்தித்தார்கள். சூர்ப்பனகையைச் சீதையென்று ராவணன் கருதினான். ராவணனை ராமர் என்று சூர்ப்பனகை கருதினாள்.

“மானே! தேனே! மயிலே! குயிலே! உன்னைத் தேடி வந்தேன்” என்றான் ராவணன். ‘என்
பிராணாதிபதியே! உமது வரவுக்காக இத்தனை நாள் காத்திருந்தேன். தங்கள் வரவினால் நான்
மகிழ்ச்சியடைகின்றேன்’ என்றாள் சூர்ப்பனகை.

ஒருவரையொருவர் நெருங்கினார்கள். குரலில் மாற்றம் இருந்தது. ராவணன், இது சீதை குரல்
அல்லவே என்று ஐயுற்றான். சூர்ப்பனகையும், இது ராமர் குரல் அல்லவே என்று கருதிச் சந்தேகப்பட்டாள். அவர்களின் மாய வடிவம் நீங்கிற்று. சூர்ப்பனகையைக் கண்டு ராவணன் ஏமாந்தான். அவளும் வெட்கித் தலைகுனிந்தாள். ஏமாற்ற வந்த ராவணன் ஏமாந்தான்.

– கிருபானந்தவாரியார்

*******

Filed under: பத்திரிகை செய்திகள்