தமிழ் | తెలుగు

» பிரமுகர்களின் உரை » “எண்ணங்களின் களஞ்சியம்” புத்தக வெளியீட்டு விழா

“எண்ணங்களின் களஞ்சியம்” புத்தக வெளியீட்டு விழா

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின்
ஆன்மீக மாநாட்டில் “எண்ணங்களின் களஞ்சியம்” புத்தக வெளியீட்டு விழா

கோவை மாவட்டத்தில் கவிதை தொகுப்புகள் அடங்கிய “எண்ணங்களின் களஞ்சியம்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சென்னை தொலைக்காட்சி நிலைய உதவி இயக்குநர் திரு. பால இரமணி மற்றும் அவருடைய துணைவியார் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களும் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர். கோவை வானொலியைச் சேர்ந்த குடந்தை R. வேங்கடபதி அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். கோவை முத்தமிழ் அரங்கத்தைச் சார்ந்த இரா. சொ. இராமசாமி, வசந்த வாசல் கோவை கோவலன், தேனி கருணைசாமி மற்றும் கவிஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் சிறப்புரை: அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். இன்றைய காலைப்பொழுது அற்புதமாக அமைந்திருப்பதற்கு காரணமாக இருக்கின்ற ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களை நான் இங்கிருந்தே வணங்கி மகிழ்கிறேன். எங்கிருந்தாலும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நம்மோடிருப்பார் என்பதற்கான சத்திய சாட்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. அரங்கத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருமே மிகப் பெரிய கடலாக இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கம். பொதுவாக ஒரு நூல் எண்ண களஞ்சியம் என்று வந்தால் என்ன களஞ்சியம் என்று சொல்வதைவிட ‘என்னங்க களஞ்சியம்’ என்று அப்படி ஒரு தொகுப்பாக இருக்கும். ஆனால் இந்த நூல் நிச்சயமாகவே உயர்ந்த “எண்ணங்களின் களஞ்சியமாக”வே இருக்கிறது என்பதற்கு சத்திய சாட்சியாகவும், உதாரணமாகவும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தையான முருகாத்தம்மாள் இருக்கிறார்கள். அந்த அம்மையாரின் உழைப்பால் இந்த புத்தகம் வந்திருக்கிறது.

ஒரு புத்தராகட்டும், ஒரு வள்ளலாராகட்டும். எல்லோருமே தன்னைத்தானே இறுதி மூச்சு வரைக்கும் உணர்ந்து போதி மரங்களாக நமக்காக வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். வீர துறவி என்று நாம் சொல்லுகின்ற விவேகானந்தர் போன்றவர்களை நினைத்துப் பாருங்கள். 1893-ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 11-ம் தேதி சிக்காகோவில் அவர் “My Dear Brothers and Sisters” (என் அன்பான சகோதர சகோதரிகளே) என்று அவர் பேசிய அந்த உரையை கேட்ட பின்புதான், அகில உலகமே இந்தியாவை திரும்பி பார்த்தது. அதுவரைக்கும் இந்தியா பாம்புகளின் தேசமாக மட்டும்தான் தெரிந்திருந்தது. அவர்தான் இந்தியாவில் பாம்புகள் மட்டுமல்ல; பாம்பாட்டிகள் மட்டுமல்ல, பாம்பைப்போல் நம்மை மகுடியாட்டி நம்மை மயங்க வைக்கும் தேசம் மட்டுமல்ல; உண்மைகளை உரக்கச் சொல்லும் தேசம் இந்தியா. தத்துவங்களை உரக்கச் சொல்லும் தேசம் இந்தியா என்பதை அவர் உரக்க கூறினார்.

இப்போது இந்தியா இப்படியிருக்கிறதே என்றால் அதற்கு காரணம் நாம்தான். இந்தியாவிற்கு இன்னமும் ஆன்மீகத்தின் தலைநகர் என்று பெயரிருக்கிறது. வெளிநாட்டில் கிரானைட் கற்கள் இருக்கலாம். ஆனால் கனிகின்ற மனம் இருக்கும் தேசம் இந்தியாவாகும். விண்ணை முட்டும் கட்டிடங்கள் இருக்கலாம். ஆனால் விண்ணையும் தாண்டிச் செல்லும் தத்துவங்கள் இருக்கின்ற தேசம் எதுவென்றால் அது இந்தியாவாகும். வெளிநாட்டில் சுத்தமான ஆறுகள் இருக்கலாம். ஆனால் நம்முடைய ஆன்மாவை கரைக்கக்கூடிய, நம்முடைய பிறப்பை சுத்தமாக்கக்கூடிய தந்தை இருப்பது இந்தியாவில்தான். எனவே வெளிநாட்டில் எல்லாம் இருக்கிறது என்ற மனோபாவத்தை மாற்றியாக வேண்டும். அப்படி மாற்றுவதற்காக பிறந்தவர்தான், அதற்காக அவதாரம் செய்தவர்தான் நம்முடைய ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்பதை நான் நிச்சயமாக நம்பிக்கையோடிருக்கிறேன்.

இதுவரைக்கும் இருந்த இறை அன்பர்கள், இறைத் தலைவர்கள், இறை தத்துவவாதிகள் எல்லோரையுமே நாம் யாருமே கண்டிருக்க முடியாது. ஆனால் இங்கே இருக்கக்கூடிய ஒரு சிலராவது கண்டிருக்கக்கூடிய ஒரு அற்புதமான அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்பதை நாம் நினைத்துப் பார்க்கும்போது மிகவும் நெக்குருகிப்போகிறேன். திருநெல்வேலியில் இருக்கிற சத்திய நகரத்துக்கு நாங்கள் செல்லும்போதெல்லாம் அந்த மண்ணை என்னுடைய திருமண்ணாக எடுத்து இட்டுக்கொள்வேன். அதற்கு காரணம் இந்த மண்ணில்தான் அந்த பெரியவர்கள் எல்லோரும் நடந்தார்கள். அவர்கள் சுவாசித்த அந்த காற்றைத்தான் நானும் சுவாசிக்கிறேன் என்பதில் எனக்கு எப்போதுமே மிகுந்த மகிழ்ச்சி உண்டு. அவருடைய பேரும், புகழும் கொங்கு தேசத்தில் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல இலக்கிய விழாக்களுக்கு நாங்கள் சென்றிருக்கிறோம்.

நம்முடைய தேசத்தில் சாமியார்கள் என்று சொல்லுகிறவர்கள்மீது எனக்கு அதிக கோபமுண்டு. அது என்னவென்றால் இறைவனுக்கும், இவர்களுக்கும் நடுவே எதற்கு ஒரு ஏஜெண்ட் என்கின்ற ஒரு கேள்வி எனக்கு எப்போதுமே உண்டு. அவர்கள் போதிப்பதை பின்பற்றுவது கிடையாது. அதில்தான் நான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களை நான் வித்தியாசமாக பார்க்கிறேன். அவர் எதை போதிக்கிறாரோ அல்லது அவர் எப்படி வாழ்ந்தாரோ அதைத்தான் அவர் நமக்கும் கூறினார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உரக்க கூறின ஒரு அற்புதமான ஆன்மீக தலைவரை பார்க்க வேண்டுமென்றால் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவைத்தான் நிச்சயமாக நாம் சொல்ல முடியும். அவர்கள் நடத்துகின்ற ஆன்மீக திருவிழாவில் எந்தவிதமான பாரபட்சமுமில்லாமல் உலகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். அவர்கள் எளிமையாக வருகிறார்கள். அங்கே வந்து எது உண்மையான தத்துவம் என்று வாழ்ந்து பார்த்து, அனுபவித்து உணர்ந்து செல்கிறார்கள் அல்லவா? இதுதான் நான் தேடிக்கொண்டிருந்த இறைத்தேடலாக எனக்கு தெரிகிறது.

எதை ஆன்மீகம் என்று கூறுகிறோம்? பட்டை போடுவது, குங்குமம் வைப்பது, ருத்திராட்ச மாலை அணிவது அல்லது பூஜை புனஸ்காரங்களை செய்வது இதையெல்லாவற்றை விடவும் நான் நம்புகிற ஆன்மீகம் எதுவென்றால் எல்லோரிடமும் அன்பாக இரண்டு வார்த்தை பேசுவதுதான். வாழ்கின்ற ஒவ்வொரு நொடியையும் நாம் உணர்ந்து சந்தோஷத்தின் உச்சத்தில் வாழ்கின்றோமென்றால் அதுதான் உண்மையாக நாம் இறைவனுக்கு செய்யக்கூடிய ஆன்ம பரிசாக இருக்க முடியும். சிறு விஷயங்களிலிருந்துகூட நாம் நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். இயல்பாக இயற்கையிலிருந்து நான் ஆன்மீகத்தை கற்றுக்கொள்கிறேன். சூரியன் என்றைக்குமே முடங்கிப்போனதில்லை, கவலைப்பட்டதில்லை, சோம்பிப்போனதேயில்லை. அது தன்னுடைய பணியை உண்டாக்கப்பட்ட நாள்முதல் தவறாமல் இன்றைய தினம்வரை கோடானகோடி ஆண்டுகளாக தன்னுடைய பாதையிலிருந்து விலகாமல், கடமையை செய்து வருகிறது பாருங்கள்.

இறைவனுக்கு எதுவும் தேவையில்லை. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நல்லபடியாக வாழ்கிறோமா? நமக்கு இருக்கிற ஈகோ (தலைக்கனம்) என்பதை போ (Ego you Go) என்று எவன் அனுப்புகிறானோ அவன்தான் உண்மையான மனிதனாவான். அப்படிப்பட்ட மனிதனுக்கு இறைவன் நிச்சயமாக அவராகவே வந்து அருள்புரிவாரே தவிர நாம் கேட்க வேண்டும், கையேந்த வேண்டும், திருவோடு ஏந்த வேண்டிய நிலையில் நம்மை படைக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்வதேயில்லை. ஆத்மார்த்தமாக கையை கூப்பி நின்றாலே போதும். அதற்கு ஒரு விக்கிரகமோ, சிலையோ, பூஜை புனஸ்காரங்களோ தேவையில்லை. வானத்திலிருக்கிற சூரியன், நிலா இவையெல்லாம் பூமிக்கே ஒரு அழகை கொடுக்கின்றது. நாம் இருப்பதினால் எந்த இடம் அழகாகிறதோ அப்பொழுது நம்முடைய வாழ்க்கை சரியாக இருக்கிறது என்பதுதான் அதினுடைய அர்த்தமாகும். யாருடைய வாழ்க்கையை சரியாக வாழுகிறார்களோ அந்த வாழ்க்கையினால் அந்த இடம் சரியாகும், அழகாகும், அற்புதமாகுமென்றால் அதுதான் உண்மையான வாழ்க்கையாகும். அதைத்தான் ஐம்பூதங்களும் கற்றுத்தருகின்றன. இந்த முழு உலகிலும், ஏன் நம்முடைய வீட்டிலும் கூட சாதி, மத உணர்வுகள் பாகுபாடுகள் இருக்கிறது. ஆனால் மனுஜோதி ஆசிரமத்தில் ஆண் பெண் பாகுபாடு மட்டுமல்ல. ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடு இல்லாமல் இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆகவே இங்கே கலந்து கொண்டிருக்கிறவர்களில் எத்தனை பேர் மனுஜோதி ஆசிரமத்திற்கு வருகை தந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. உங்களை மனுஜோதி ஆசிரமத்திற்கு ஒரு முறை வருகை தாருங்கள் என அழைக்கிறேன் நன்றி. வணக்கம்.

✡✡✡✡✡✡✡

Filed under: பிரமுகர்களின் உரை