தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » இறைவார்த்தையினால் வாழ்ந்து காட்டியவர்!

இறைவார்த்தையினால் வாழ்ந்து காட்டியவர்!

(ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அனுபவம்)

இந்த உலகில் வாழ்க்கை நடத்துவது என்றால் தினம் தினம் உழைத்து சம்பாதித்து குடும்பத்தை நிர்வகித்து வருவதுதான் என்று நம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இறைவன் நமக்கு கொடுத்த திறமையினால் அல்லது சக்தியினால்தான் நாம் தினமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மக்களாகிய நாம் மறந்து விடுகின்றோம். நம்முடைய திறமையினாலும், முயற்சியினாலும்தான் சம்பாதித்து உயர்ந்த நிலைக்கு வருகிறோம் என நினைக்கின்றோம். ஆனால் இறைவன் மனிதன்மேல் சுமத்தும் குற்றச்சாட்டு என்ன? அவன் இறைவனின் சிருஷ்டிப்புக்கு சாட்சியாக நடவாமல் நான், என் மனைவி, என் பிள்ளைகள் என்று கூறி, தனக்குத்தானே சுயமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பதுதான். ஒரு மனிதன், தான் பிறந்தபின் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழவேண்டும் என அநேக மகான்கள் போதித்தும், வாழ்ந்து காட்டியும் இருக்கின்றனர். இறைதொண்டுக்காக துறவறம் மேற்கொண்டு மக்களை விட்டு ஒதுங்கியும் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆனால் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களோ இலங்கையில் வாழ்ந்தபோது, இறை சக்தியால் தொடப்பட்டார்.  இலங்கையிலிருந்து அவர் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து வந்து, மணமுடித்து மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வந்தார். வேலூரில் இன்றளவும் பெயர் பெற்ற சி.எம்.சி மருத்துவமனையில் அவரும் அவரது துணைவியாரும் பணியாற்றி வந்தனர்.

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இறை வார்த்தையினால் வாழ்ந்த அனுபவம்: “நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன். அதற்கு முன்னர் நான் வேலூரிலுள்ள மருத்துவமனையில் கொள்முதல் பிரிவின் கண்காணிப்பாளரின் செயலாளராக இருந்தேன். அங்கு ஐந்து வருடங்கள் வேலை பார்த்த பிறகு, ‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னைப் பின்பற்றி வா’ என்று இறைவனுடைய சத்தத்தைக் கேட்டேன். நானும் என்னுடைய மனைவியும், மூன்று பிள்ளைகளும் எங்களுடைய வேலைகளை விட்டுவிட்டு, எங்களுக்குண்டானவைகளை எல்லாம் விற்று, எல்லா இடங்களுக்கும் போய் ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்தோம். நீங்களும் அப்படி செய்யுங்கள் என்று நான்  சொல்லவில்லை.
1953-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி, நானும் என்னுடைய மனைவியும் சி.எம்.சி. மருத்துவமனையில் எங்களுடைய வேலையை விட்டுவிட்டு, இறைவனைச் சார்ந்து வாழ ஆரம்பித்தோம்.

அதன்பிறகுதான் ‘மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்’ என்கிற ஒரு மிகப்பெரிய சத்தியத்தை நாங்கள் அறிந்து கொண்டோம். நாராயணர் சொன்னவைகளெல்லாம் ஒருபோதும் பொய்யாக இருக்க முடியாது. நீங்கள் எனக்குள் வந்தால் நான் உங்களுக்கு சமாதானத்தைத் தருவேன் என்று அவர் சொல்லியிருந்தால், என் நண்பர்களே! அது அப்படியே உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் உங்கள் ஐம்புலன்களை விட்டுவிட்டு கடவுளுடன் இணைக்கப்படுவீர்களென்றால், நிச்சயமாக அந்த சமாதானத்தைப் பெறுவீர்கள். ஆனால் ஜனங்கள் அப்படிச் செய்வதில்லை.

புத்தர் ஒரு மரத்தடியில் இருந்தார். எல்லாவற்றிற்கும் ஆசையே காரணம் என்று அவர் சொன்னார். ஆனால் அந்த ஆசையை மேற்கொள்வதற்கான பரிகாரத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு டாக்டர் காலரா கிருமியினால்தான் இந்த வியாதி வந்திருக்கிறது என்று கண்டுபிடித்துச் சொல்லலாம். அதனால் அந்த காலரா கிருமிகளை நீங்கள் மேற்கொண்டுவிட்டீர்கள் என்று அர்த்தம் அல்ல. நீ என்னுள் வா என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஒரு மனிதனுக்குள் நீங்கள் எப்படிச் செல்லமுடியும்? அதனால்தான் கிருஷ்ணர் யார் என்ற வெளிப்படுத்தல் அர்ஜுனனுக்கு கிடைத்தது. பகவத் கீதையில் இது மிகவும் தெளிவாக இருக்கிறது. ஜனங்களிடத்தில் வேதம் இருக்கிறது. ஆனால் அவர்கள் அதைப் பின்பற்றுவதில்லை.”

குறிப்பு: இந்த வருடம் அக்டோபர் 15-ம் தேதி 63-வது ஆண்டில் நாம் அடியேடுத்து வைக்கிறோம். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா வாழ்ந்து காட்டினார் என்று சொல்வதோடு நிற்காமல் இன்றைய நாட்களில், அவருடைய குடும்பத்தினரும் அதே வழியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களாகிய நாமும் இறைவார்த்தையினால் வாழலாம் என்ற அவருடைய வாழ்க்கை அனுபவமானது நமக்கு படிப்பினையாக இருக்கிறது.

✡✡✡

மக்களுடைய சிந்தையின் வளர்ச்சிக்கேற்ப கடவுளும் அவர்களுடன் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார். நாகரீகத்தின் ஆரம்பத்தில் மக்கள் அவ்வளவாக விஞ்ஞான ரிதியாக முன்னேறவில்லை. மனிதன் எல்லாவற்றைப் பார்த்தும் பயந்தான். இடியைப் பார்த்து பயந்தான். அவன் ஏதோ மகத்தான ஒன்றை ஆராதிக்க விரும்பினான். மக்கள் அவரை விசுவாசத்தில் நோக்கிப் பார்த்தாலொழிய கடவுள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. மனிதன் கடவுளுக்கு ஒரு உருவத்தைக் கொடுக்க விரும்பினான். ஆனால் அவனால் இடி, மின்னல் இன்னும் மற்றவற்றிற்கு உருவம் கொடுக்க முடியவில்லை. கண்டு விசுவாசிப்பதினால் அவன் வீழ்ச்சி அடைவதற்கு முன்பாக அவனுக்கு இறை நம்பிக்கையின் வல்லமை இருந்தது. அந்த நம்பிக்கை கேட்பதினால் வருகிறது. கேள்வி இறைவனுடைய வார்த்தையினாலே வருகிறது. ஆகவே கடவுளுடைய வார்த்தையைக் கேட்காமல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க முடியாது. இப்பொழுது அநேகர் இந்த வேதாகமம்தான் கடவுளுடைய வார்த்தை என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தையானது ஒரு மனிதனாக பரமபுருஷனாக வந்து கூறும்போது, அது ஒருபோதும் தோல்வியடைய முடியாது.

✡✡✡

வேதாகமம் தீர்க்கதரிசிகளுடைய ஒரு புஸ்தகமாக இருக்கிறது. பவிஷ்ய புராணம் அவருடைய தீர்க்கதரிசனமாகும். பகவத் கீதை அவருடைய தீர்க்கதரிசியின் மூலமாக எழுதப்பட்டது. குர் – ஆனும் அவருடைய தீர்க்கதரிசியின் மூலமாக எழுதப்பட்டது

✡✡✡

நாராயணரும், கிறிஸ்து இயேசுவும், அல்லாவும் ஒன்றுதான் என்பதை காண்பிப்பதற்காகவே குர் – ஆனும், பவிஷ்ய புராணமும் வந்தன, வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல. ஆனால் ‘பாவம்’ மற்றும் ‘பாவங்களைப்’ பற்றிய மகத்தான வெளிப்படுத்தல்களை வேதாகமத்தின் காலத்தில்தான் தேவன் மனிதனுக்குக் கொடுத்தார்.

✡✡✡

இறைவன் உங்களைப் புறக்கணித்தால் நீங்கள் இந்த உலகில் உயிர் வாழ்ந்து என்ன பயன்?

✡✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்