தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » இது எனக்கு வேண்டியதுதான்!

இது எனக்கு வேண்டியதுதான்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய!

இறையே அபயம்!                                               யாவும் இறையின் உபயம்!

நன்கு முதிர்ந்த முத்து ஒன்று அந்தச் சிப்பியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. அந்த முத்துக்கு ஒரே ஆனந்தம். ஆஹா, எத்தனை வெளிச்சம், எத்தனை காற்று என்று ஆனந்த கூத்தாடியது. அது இதுவரைக்கும் குடியிருந்த சிப்பியைப் பார்த்து கூறியது: நாற்றம், இருட்டு, குளிர் இப்படி காலமெல்லாம் உன்னிடம் கிடந்தேன். இன்று எனக்கு விடுதலை என்று கூறிக்கொண்டே போனது. முத்து தனது பிறந்த இடத்தை இப்படி பழிப்பதைக் கேட்டு கண்ணீர் சிந்தியது சிப்பி.

சில நாட்கள் சென்றன. அழகான மாலையாகக் கோர்க்கப்பட்டு, அலங்கார கண்ணாடிகளில் முத்துக்கள் அடுக்கி வைக்கப்பட்டன. கழுத்துக்கு என தயாரிக்கப்பட்ட மாலையில், நடுநாயகமாக நாம் மேலே கண்ட முத்து வீற்றிருந்தது. அந்தக் கடையில் பளபளப்பும், பகட்டும் ஒளிவீசும் செழிப்பும் அதற்குப் பிடித்திருந்தன. அதற்கு ஒரு கர்வமே வந்துவிட்டது. அந்த முத்து அடங்கிய மாலையை பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்கள் எடுப்பதும், பார்ப்பதும் அணிந்து கண்ணாடியில் பார்த்து மகிழ்வதும் விலை பேசுவதும், கடைக்காரர் விலையைக் குறைக்க மறுப்பதும், இதெல்லாம் அந்த முத்துக்கு மிகுந்த அதிசயங்களாக தோன்றின. ஒருநாள் சீமான் வீட்டுப் பெண்மணி தனது கணவருடன் வந்தாள். அந்த முத்து மாலையின் விலையை கேட்டாள். 25,000 என்றார் கடைக்காரர். இதை விட விலை குறைவாக இருக்கிறதா? என்றாள் சீமாட்டி. கடைக்காரரும் கொடுத்தார்.

விலை குறைந்த முத்துமாலையையும், செயற்கை முத்துமாலையையும் பக்கத்தில் வைத்துப் பார்த்தாள் அந்த சீமாட்டி. அவளுக்கு செயற்கை முத்துமாலையே பிடித்து விட்டது. நல்ல முத்துமாலையை விட செயற்கை முத்துமாலையே சிறப்பாக இருக்கிறது. விலையும் குறைவு, எங்கு வேண்டுமானாலும் அச்சமின்றி அணிந்துகொண்டு செல்லலாம் என்றாள் சீமாட்டி. உடனே இயற்கை முத்து மாலையைப் பார்த்து: செயற்கை முத்துமாலை சிரித்தது. இயற்கை முத்துமாலையிலுள்ள முத்து தனக்குள் சொல்லிக்கொண்டது: “நான் பெற்ற வயிறு பற்றியெரிய என்னை ஈன்றெடுத்த சிப்பியை இகழ்ந்து பேசிவிட்டு வந்தேன். இன்று என்னைக் காட்டிலும் மதிப்பு குறைவான செயற்கை முத்து என்னை இகழ்ந்து விட்டது. இது எனக்கு வேண்டியதுதான்” என்றது.

முதுமொழி: “தாயிற்சிறந்த கோவிலில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, மாதா வயிறெரிய வாழான் ஒருக்காலும் தாயின் காலடியில்தான் சுவர்க்கம் உள்ளது”. இது நவமணி வாக்காகும். தாய் தந்தையை எவர்கள் கண்ணியப்படுத்துகிறார்களோ அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். இது வல்லதோர் பேரிறைவன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் வாக்காகும்.

கண்டு எடுத்தோன் – சத்திய நகரக்குடிமகன்,

– தேவகவி சுவாமிஜி அன்பிற்கரசு

– வான் மறையாக வ(ள)ரும்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து