தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » ஆன்மீக புலன்கள்

ஆன்மீக புலன்கள்

கேட்பது, உணர்வது, முகர்வது, ருசி பார்ப்பது மற்றும் காண்பது என்று நம்முடைய சரீரத்தில் ஐம்புலன்களும் இருக்கின்றன. இந்த ஐம்புலன்கள் இல்லையென்றால் நாம் மிகவும் பரிதாபமானவர்களாக இருப்போம். ஐம்புலன்களுடைய சரீரத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோம் என்பதை ஐம்புலன்கள் குறிக்கிறது. ஒரு இயந்திரத்தைப்போல பரிபூரணமான கேட்கும் திறமையானது இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்கள் பரிபூரணமாக இருக்கிறது. அதில் எந்த தவறும் இல்லை. மிகச் சரியாக அறிந்துகொள்ள முகரும் புலன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ருசியை அறிந்துகொள்ள அவர் ருசி பார்க்கும் புலனை வைத்திருக்கிறார்.

இறைவன் இந்த சரீரத்தை உண்டாக்கினார். இந்த உலகத்தில் இருப்பதற்கும், அதை அனுபவிப்பதற்கும் ஐம்புலன்கள் தேவைப்படுகிறது. அதேவிதமாக பரலோகத்தை அனுபவிப்பதற்குகூட ஐம்புலன்கள் தேவையாக இருக்கிறது. இறைவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை என்று விவிலியம் கூறுகிறது. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்தால் இறைவனுடைய அன்பு உங்களில் வாசமாயிருக்கிறது. இறைவன் ஜீவிக்கிறார் என்பதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்கிறோம்? அன்புதான் அதற்கு அடையாளமாக இருக்கிறது. அன்பின் மூலமாக இறைவன் இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். நம்மால் சில மக்களை நேசிக்க முடியாதபோது, தெய்வீக அன்பானது அப்படிப்பட்ட மக்களை நேசிக்கும்படி செய்து, ஜீவிக்கிற இறைவன் இருக்கிறார் மற்றும் அவரை நம்மால் காண முடியும் என்பதைக் காண்பிக்கிறது.

தெய்வீக புலன்கள் என்றால் என்ன? முதலாவது கேட்கும் புலனாகும். நீங்கள் இறைவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது அதுதான் ஆன்மீக அர்த்தத்தில் கேட்பதாகும். கேட்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இறைவனுடைய எழுதப்பட்ட வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது, படிப்படியாக நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்க முடியும். அநேக கஷ்டங்களின்போது, நாம் அவருடைய சத்தத்தைக் கேட்டிருக்கிறோம். இறைவனுடைய சத்தத்தை கேட்கும்படியாக நாம் நம்முடைய மனதை பயிற்றுவித்துக்கொள்ள வேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் அது அநேகருடைய குரல்களை கேட்கிறது. அதற்கு அந்த சத்தங்களெல்லாம் புரிகிறதில்லை. தினமும் அதற்கு பசியெடுக்கும்போது அது அழுகிறது. அநேகர் குழந்தையை தேற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் அந்த குழந்தைக்கு அது புரிகிறதில்லை. ஒருநாள் அந்த குழந்தை தாயின் சத்தத்தை அடையாளம் கண்டுகொள்கிறது. அதன்பின்னர் தகப்பனுடைய சத்தத்தையும், மற்றவர்களின் சத்தத்தையும் அடையாளம் கண்டுகொள்கிறது. தாயானவர் அருகே வந்து என்னம்மா, எப்படியிருக்கிறாய் என்று கேட்டவுடன் குழந்தை என்ன செய்கிறது? அது துள்ள ஆரம்பிக்கிறது. ஏனென்றால் அந்த குழந்தை தாயின் சத்தத்தை அடையாளம் கண்டு கொண்டது. இறைவன் அருளிய வேதங்கள் அனைத்தையும் வாசித்து அவருக்கு கீழ்ப்படியும்போது, உங்கள் செவி அதாவது கேட்கும் புலன் மூலமாக நீங்கள் இறைவனை தொடுகிறீர்கள்.

இரண்டாவதாக நம்முடைய ஆவிக்குரிய கண்பார்வையாகும். அதுதான் அன்பினால் நிறைந்திருப்பதாகும். யாருக்காவது பகையுணர்ச்சி இருந்தால், அவர்களுக்கு ஆன்மீக கண்பார்வையில் வியாதியிருக்கிறது என்று அர்த்தமாகும். உங்கள் கண்ணில் வியாதியிருந்தால், நீங்கள் மிகவும் பயந்து அதை சரி செய்ய பார்ப்பீர்கள். அதைப் போலவே நீங்கள் யாரையாவது குற்றஞ்சாட்டி, நான் இதை மன்னிக்கமாட்டேன், நான் அதை மன்னிக்கமாட்டேன் என்று கூறினால் அது ஒரு வியாதியாகும். உங்களுடைய கண்ணில் வியாதியிருக்கிறது என்று எவ்வாறு கண்டுபிடிப்பது? சகோதரனே, அவன் மிகவும் மோசமானவன் என்று ஒருவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் வந்தால், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருக்கிறீர்களா?” என்று சிலர் கேட்பார்கள். அப்படி ஒருவனைப் பற்றி புறம் பேசினால் உங்கள் கண்களில் வியாதியிருக்கிறது என்று அர்த்தமாகும்.

அநேகர் நம்மை வருத்தப்படுத்தி இருப்பார்கள். அதை நீங்கள் மன்னிக்கவில்லை என்றால் உங்கள் ஆன்மீக கண்பார்வை சம்பந்தமான நரம்பில் வியாதி இருக்கிறது என்று அர்த்தமாகும். வெகுசீக்கிரத்தில் அது நரம்பை கொன்றுவிடும். அப்பொழுது நீங்கள் குருடாகி விடுவீர்கள். அது மிகவும் ஆபத்தான காரியமாகும். நான் ஒருபோதும் அவனை மன்னிக்க முடியாது என்று  கூறினால் நீங்கள் குருடாகி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். மருத்துவரிடம் சென்றால், உன்னுடைய கண்ணில் புரை வளர்ந்திருக்கிறது, நீ சீக்கிரத்தில் குருடாகி விடுவாய் என்பார். மனிதனுக்கு ஐம்புலன்களில் பிரதானமானது கண்பார்வையாகும். அதேவிதமாக ஆன்மீகவாதிகளுக்கும் ஆன்மீக கண்பார்வை மிகவும் அவசியமானதாகும்.

இன்றைக்கு உங்களுடைய ஆன்மீக கண்களில் வியாதியிருந்தால், உடனடியாக இறைவனிடம் சென்று, இறைவா அந்த தெய்வீக அன்பை எனக்கு தாரும். அதினால் என்னுடைய கண்பார்வை சேதம் அடையாதபடி பார்த்துக்கொள்ளும். உம்முடைய சிருஷ்டிகள் எல்லாவற்றையும் நேசிக்கும்படி செய்யும் என்று கேளுங்கள். உங்கள் சகோதரனை பகைத்தால் ஆன்மீக ரிதியான மரணம் அடையும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒருவரையும் பகைக்காதீர்கள், அது உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது என்பதைப் பாருங்கள். தாழ்வான இடங்களுக்கு நீர் பாய்ந்து ஓடுவதுபோல நீங்கள் தாழ்மையாகும்போது, இறைவனுடைய வல்லமை பேரலையாக வருவதை நீங்கள் காணலாம். ஒருவேளை இரவு முழுவதும் பிரார்த்தித்தபோதும், சமாதானத்தைப் பெறாமல் இருக்கலாம். அமைதலாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நான் எல்லாவற்றையும் மன்னிக்கிறேன் என்று கூறினால், உங்கள் வாழ்க்கையில் அன்பின் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை நீங்கள் காணலாம். உங்கள் கண் பார்வை திறக்கப்படும். உங்கள் இருதயத்தில் இறைவனைக் காண்பீர்கள். தெய்வீக அன்பையுடையவர்களாக இருப்பதுதான் ஆன்மீக ரீதியில் கண்பார்வையாகும்.

மூன்றாவது புலன் தொடுவதாகும். இறைவனை எவ்வாறு தொடுவது? எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதின் மூலமாக நாம் இறைவனை தொடுகிறோம். சில சமயங்களில் நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். நீங்கள் இறைவனை தொட்டால் உங்கள் இருதயத்தில் சந்தோஷம் பொங்கிக்கொண்டேயிருக்கும். உங்களிடம் சந்தோஷம் இருக்க வேண்டும். அந்த வழியாகத்தான் நீங்கள் இறைவனை தொட முடியும். அடுத்த புலன் ருசி பார்க்கும் புலனாகும். யாரோ ஒருவர் வருகிறார். சகோதரனே ஒரு பிராந்தி பாட்டிலை உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறினால், ஓ! என்னால் அதை குடிக்க முடியாது. ஏனென்றால் அது ஆன்மீக விதமாக கெட்ட ருசியாகும். அந்த வாசனை எனக்கு கெட்டதாகும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நாம் அநேக தேசங்களுக்கு சென்று வரும்போது, அநேக தீங்கான காரியங்கள் நடப்பதைப் பார்க்கிறோம். இவைகளெல்லாம் உலக காரியங்களாகும். ஆன்மீக மனிதனுக்கு இவையெல்லாம் கெட்ட வாசனையாக இருக்க வேண்டும். முழுவதுமாக பிரிந்து வாருங்கள் என்று இறைவன் எவற்றைப் பற்றி கூறுகிறாரோ அவற்றை விட்டு பிரிந்து வாருங்கள். அவ்வாறு செய்யவில்லையென்றால் நீங்கள் இறைவனுடைய ராஜ்யத்தை முகர்ந்து பார்க்க முடியாது.

சில சமயத்தில் பணத்திற்காக மனிதரைப் பிரியப்படுத்த நாம் நமக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் இறைவனுடைய மக்கள் இறைவன் அருளிய வேதங்களை வாசிக்கும்போது, உலகத்திலிருந்து முழுவதுமாக பிரிந்து இருப்பார்கள். அவர்களுக்கு உலகத்தின் ருசி பிடிக்கிறதில்லை. நாம் இவ்வுலகத்தில் எல்லா கெட்ட காரியங்களிலிருந்தும் பிரிந்து வரும்போது, வாசனையின் மூலமாக, முகர்ந்து பார்ப்பதின் மூலம் இறைவனை தொடுகிறோம். வேதங்களின்படி நீங்கள் எதையாவது அவரிடம் கேட்டால், உங்கள் விண்ணப்பங்கள் கேட்கப்படுகிறது. அப்படியென்றால் நீங்கள் இறைவனுடைய ராஜ்யத்துடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். எனவே ஆன்மீக புலன்களைப்பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

தொகுப்பு: C. எல்சன் ஜோசப்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து