தமிழ் | తెలుగు

» திருக்குறள் விளக்கம் » ஆன்மீக பார்வையில் திருக்குறள்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

இதன் பொருள் யாதெனில், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்பர் அன்பின் உண்மையை அறியாதவர். மற்ற பாவச் செயல்களை நீக்குவதற்கும் அவ்வன்பே துணையாகும். அன்பானது புண்ணியம் செய்வதற்கான உபகார சக்தி என மட்டுமே நாம் அறிவோம். ஆனால் வள்ளுவரோ அஃது பாவச் செயலை
நீக்குவதற்கும் துணை புரியுமென இயம்புகிறார். அத்தகைய அன்பானது அடுத்தவர்கள் புரிகின்ற கீழான பாவச் செயல்களையும் தனக்குள் ஈர்த்துக்கொண்டு
அவர்களை சகோதரத் தன்மையுடன் காண வகை செய்யும். இஃது முழுமையான தூய அன்புடையவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். இவ்வன்பின் ஆழத்தை ஒரு கதையின் மூலம் காண்போம்.

ஞானி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே உலாவுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரெதிரே, அவ்வூரில் எல்லோராலும் திறமையுடையவரென
மதிக்கத்தக்க வயலின் கலைஞர் ஒருவர் அதிகமான குடி போதையில் தன் நண்பர்களுடன் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். அதனைக் கண்ட
ஞானியானவர் அவன்மீது இரக்கம் கொண்டு வயலின் கலைஞரை நோக்கி “என்னப்பா, நீயோ திறமைமிக்க சிறந்த வயலின் கலைஞன், உன் திறமையையும் புகழையும் இந்த மதுப்பழக்கத்திற்கு அடகு வைத்து விட்டாயே, இதனால் உன் பெயர்தானே கெடும்” என்று அறிவுரை கூறினார்.

அந்த அறிவுரையை சற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இல்லாத அவன், ஞானியை தகாத கீழான வார்த்தைகளால் திட்டினான். அவனுடமிருந்த நண்பர்கள் ஞானியை திட்டுவதைக் கண்டு தலை கவிழ்ந்தனர். அவனோ, அதுபோதாதென்று கையிலிருந்த வயலினால் ஞானியின் தலையில் ஓங்கி அடித்தான். அந்த அடியில் அவரின் தலையில் காயமடைந்து ரத்தம் கொட்டியது. அவனுடைய வயலினும் உடைந்து போயிற்று. ஆனால் ஞானி ஏதும் பேசாமல் தலையில் கை வைத்தவாறு சென்று விட்டார். அவனும் ஏதோ உளறிக் கொண்டே தரையில் விழுந்தான்.

அடுத்த நாள் காலையில் அவன் நண்பர்கள் முந்தைய இரவு நடந்ததை எடுத்துக் கூறினார்கள். அவனோ அப்படியா என மிகவும் வருத்தப்பட்டான். அப்போது
ஞானியின் சீடன் ஒருவன் அங்கு வந்தான். அந்த வயலின் கலைஞன் சீடனிடம் ஞானி தனக்கு என்ன செய்தி சொல்லியனுப்பினாரோ என்றபடி நோக்கினான். சீடனோ, ஞானி தன்னிடம் ஒரு கடிதத்தையும், சில இனிப்புகளையும், சிறிதளவு பணமும் கொடுத்து அனுப்பியதாக கூறி அவனிடம் தந்தான்.

அதனைக் கையில் வாங்கி கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். பார்த்த மாத்திரத்தில் அவன் கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்தது. சுற்றியிருந்த நண்பர்களும் கடிதம் கொடுத்த சீடனும், ஞானி அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் என்று கேட்க, அவன் கடிதத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு நாற்காலியில் அமர்ந்தான். நண்பர்களில் ஒருவன் கடிதத்தை வாங்கி உரக்கப் படித்தான். “வயலின் கலைஞனுக்கு வணக்கம். நேற்று இரவு என்னை திட்டியதால் உன்னுடைய நாவு கசந்திருக்கும். அதற்காக சில இனிப்புகளை அனுப்பியுள்ளேன், அதை சாப்பிடு. உன்னுடைய சிறந்த அழகிய வயலின் உடைபடுவதற்கு என்னுடைய தலை காரணமாகிவிட்டது. அதற்காக இந்தப் பணத்தை அனுப்பியுள்ளேன். பெற்றுக்கொண்டு வயலினை சரிப்படுத்திக் கொள்” என எழுதியிருந்தார். அதைக் கண்டு
தன் தவறை எண்ணி மனம் வருந்தி, ஞானியிடம் சென்று மன்னிப்பு கேட்டு திருந்தினான். இந்தக் கதையின் மூலம் நமக்கு என்ன விளங்குகிறது? ஞானியின்
அன்பு எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. அந்த தூய்மையான அன்புக்குள் நல்லவர், பொல்லாதவர், ஏழை, பணக்காரன், அறிந்தவர், அறியாதவர் என்ற எந்தவிதமான ஏற்றத்தாழ்வுமில்லை. ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்பது வள்ளுவரின் வாக்கு. அதுபோல்தான் ஞானியின் அன்பும். எந்தவித பாரபட்சமும் பார்ப்பதில்லை. ஒரு தாய் தான்பெற்ற பிள்ளைகளில் ஒன்று ஊனமானதாகவும், மற்றொன்று நன்றாகவும் இருந்தால், இதில் எந்த பேதமும் பாராமல் இரண்டையும் ஒன்றைப்போல் அரவணைத்து எப்படி அன்பு காட்டுவாளோ, அதுபோல்தான் கடவுளின் அன்பும், ஞானியின் அன்பும் இருக்கும். அதுபோல் தூய்மையான அன்பு எவ்வித எதிர்பார்ப்பையும் கொண்டதில்லை. தூய்மையான விருப்பு வெறுப்பற்ற அன்புடையவர்களே முக்திநிலை அடைந்தவர்கள்.

தாயுமானவர் இறைவனுக்கு மலர்களைப் பறித்து பூஜை செய்ய விரும்பினார். ஆனால், அவரின் அன்புப் பார்வையில் எல்லா மலர்களிலும் இறைவன்
குடிகொண்டிருப்பதைக் கண்டு கண்களில் நீர் மல்க, மலர்களைப் பறித்து பூஜிக்காமல் அந்த மலர்த்தோட்டத்திலுள்ள மலர்கள் அனைத்தையுமே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார். அன்பே இறைவன்! இறைவனே அன்பு! இதனைத்தான் திருமூலர் ‘அன்பே சிவம்’ என அருளினார். எந்தவித பாகுபாடுமில்லாத அன்பிற்கு வீரம், கோழை என்ற குணங்களேதும் கிடையாது. இப்படியிருக்க, அன்பில்லாதவர் எப்படியிருப்பார். அன்பில்லாத இடம் அன்பில்லாத உறவு, அன்பில்லா வாழ்க்கை
பற்றி விளக்கமளிக்கின்றனர் நம் சான்றோர்கள்.

அன்பில்லாதவர் உடம்பு, எலும்பும் தோலும் மட்டுமே இருக்கும் உயிரற்ற உடம்பாகும். அன்பிலா இடம் வறண்ட பாலை நிலம் போன்றதாகும். அன்பில்லா
உறவு ஒன்றுக்கும் உதவாத ஒதிய மரமாகும். அன்பில்லா வாழ்க்கை கானல் நீருக்கு ஒப்பாகும். நம் வள்ளல் பெருமான், அன்பை எப்படி பெற்றுக்கொள்வது என்பது பற்றி நமக்கு விளக்கியுள்ளார்கள். ஜீவகாருண்யத்தால் அறிவும், அன்பும் உடனாக நின்று விளங்குமென்றும், இதனால் எல்லா நன்மைகளும்
விளங்குமென்றும் அருளியுள்ளார்கள்.

எல்லாம் வல்ல இறைவனை அடைவதற்கு அவரின் அருளைப் பெற வேண்டும். அவ்வருளை அன்பினாலல்லது வேறுவகையில் அடைவதென்பது அரிதாகும். அவ்வன்பைப் பெறுவதற்கு ஜீவகாருண்யம் சிறந்த வழி என்று வள்ளலார் கூறியுள்ளார். அவ்வன்பை கீழ்ப்படிதலின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளலாம் என்று
ஸ்ரீ லஹரி கிருஷ்ணா உரைத்திருக்கிறார். ஆக இறைவனுக்கு கீழ்ப்படிந்து தெய்வீக அன்பை பெறுவோவாமாக!

எவ்வித வேறுபாடுமின்றி, எவ்வித எதிர்பார்ப்புமின்றி செலுத்தப்படுகின்ற அன்பே இவ்விதமான நன்மையைப் பெற்றுத்தருமென்பதில் ஐயமில்லை. இதனால் அன்பு செலுத்தும்போது அடங்கிப் போதல், கோழைத்தனமாக தோன்றுதல் எல்லாம் வெறும் புற எண்ணங்களே. அகத்திலிருந்து தோன்றும் உண்மையன்பு எந்தப் புறத்தோற்றங்களையும் பார்க்காது, அந்த அன்பு மிக வலிமையுடையது. இனியும் காலம் தாழ்த்தாது பிற உயிர்களிடத்தில் உண்மையன்பைச் செலுத்தி இறைவனின் அருள்பெற்று உயர்வோமாக!

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரமசிவமே! – திருஅருட்பா

– தொடரும்…

******

Filed under: திருக்குறள் விளக்கம்