தமிழ் | తెలుగు

» திருக்குறள் விளக்கம் » ஆன்மீக பார்வையில் திருக்குறள்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

“மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால் ஞால முழுதும் நயந்தளந்தான் – வாலறிவன் வள்ளுவரும் தங்குறள் வெண்பாவடியால் வையத்தார் உள்ளுவவெல்லாமளந்தார் ஓர்ந்து” என்பது பரணர் பாடிய பாட்டாகும். இதின் பொருளாவது முன்னொரு காலத்தில் திருமால் குறுகிய வடிவமுடைய வாமனாய் தோன்றி, பின் நெடுமாலாக ஓங்கி உயர்ந்து தன் இரண்டடியால் உலக முழுதும் ஒருங்கேயளந்த காட்சிபோல, அறிவினால் மேம்பட்ட ஆசிரியர் வள்ளுவரும் தம் குறுகிய குறளடியிரண்டால் மக்கள் கருதும் கருத்தையெல்லாம் அளந்து விட்டார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த குறளில் உடமைகள் என்னும் தலைப்பில் 10 அதிகாரங்கள் உள்ளன. அதில் முதல் உடைமை அன்புடைமை. ‘அன்பு’ என்பது அதை நாம் உணரும் இடத்திற்கேற்ப வேறு பல பெயர்களை கொண்டதாக உள்ளது. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாம் இறைவன்பால் வைத்த அன்பு பக்தி என்றும், மனைவிமேல் வைத்த அன்பு காதல் என்றும், தன்னைப் போன்றவர்மேல் வைத்த அன்பு நட்பென்றும், நாட்டின்மேல் வைத்த அன்பு நாட்டுப்பற்று என்றும், பிற உயிர்கள்பால் அன்பு செலுத்துவதை ஜீவ காருண்யம் என்றும், தாய்மொழிமேல் வைக்கும் அன்பு மொழிப்பற்று என்றும், எஜமான்மேல் வேலைக்காரன் வைக்கும் அன்பு விசுவாசம் என்றும், மாணவர்கள் ஆசிரியர்கள்மேல் வைக்கும் அன்பு குருபக்தி என்றும் அழைக்கப்படுகிறது.

அன்பிற்கு மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையில் ஒரு மனிதன் தன் தாய், தந்தை, தன் மனைவி பிள்ளைகளை நேசிப்பதாகும். அவன் தன் குடும்பத்தை நேசிப்பதினால் தான் பெற்றோருக்கும் கீழ்ப்படிந்து அவர்கள் சொல்லிற்கிணங்க வாழுகிறான். திருமணமான பின்னர் தன் மனைவி, பிள்ளைகள் மீது அன்பு செலுத்துகிறான். பெற்றோர்களை இனியும் நேசிக்க வேண்டுமா நான் என் குடும்பத்தை பராமரிக்க வேண்டுமே என்ற அற்ப புத்தியினால் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு விடுகின்ற கேவலமான நிலை ஏற்படுகிறது. இப்படி தன் குடும்பத்தை நேசிப்பது அல்லது என் பெற்றோர், என் பிள்ளைகள், என் மனைவி என்ற எண்ணத்துடன் வாழுவது மிருக நிலையாகும். மிருகங்களும் இப்படித்தான் வாழுகின்றன. அவைகள் தன்னுடைய குட்டிகளை மாத்திரம் பராமரிக்கிறது. தன்னை ஈன்றவர்களை மறந்து விடுகிறது. தற்காலத்தில் மனிதனும் இவ்வாறு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.

தன் குடும்பத்தைக்கூட நேசிக்காத அற்ப மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றியே எப்பொழுதும் நினைப்பார்கள். சுயநலத்தின் உருவமாக இருப்பவர்கள், கலியனின் பிடியில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள். இப்படிப்பட்டவர்கள் குறைந்த பட்சம் தங்கள் குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்ற அறிவுரையை தற்காலத்து தலைவர்கள் என்பவர்கள் கூறுகிறார்கள்.

அன்பில் இரண்டாவது நிலையாவது பெற்றால் தான் பிள்ளையா? என்று எண்ணாமல் எல்லா பிள்ளைகளையும் ஊட்டி வளர்ப்பார்கள். “ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்” என்ற சொல்லுக்கேற்ப வாழுவார்கள். தன் பெற்றோரைப் போல மற்றவர்களின் பெற்றோரையும் நேசிப்பார்கள். மற்றவர்களுக்கு நேர்ந்த துன்பத்தை தனக்கு ஏற்பட்ட துன்பம்போல நினைத்து உதவி செய்வார்கள். மனிதாபிமானம் கொண்டவர்கள், மனிதனை மனிதனாக மதித்து வாழுவார்கள். இப்படிப்பட்டவர்களைப்பற்றி வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.”

எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துபவர் பிறர் துன்புற்றுக் கண்ணீர் சிந்தும்போது, அவர் கண்ணீரைத் துடைத்து அவர்தம் துன்பம் போக்காமல் தன் அன்பைத் தாழிட்டு அடைத்துக் கொள்வாரோ? மாட்டார் என்பது தான் இக்குறளின் பொருளாகும்.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.”  

இந்த குறளுக்கேற்ப வாழ்ந்தவன் மனுநீதிச்சோழன். “வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந்தேர் மேல் ஏறி அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால் இளைய ஆன்கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாக தளர்வுனும் இத்தாய் வந்து விளைத்தது இத்தன்மை என்றார்” – பெரிய புராணம்.

மனுநீதி சோழன் மகன் வீதிவிடங்கன், ஒரு பசுங்கன்றின் மேல் தேரை ஏற்றி, அதைக் கொன்றுவிட்டான். கன்றை இழந்த தாய் பசு அரண்மனையில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்து முறையிட்டது. அரசர், மந்திரிகளை அழைத்து, என்ன காரணம்? என்று விசாரித்தார். அப்பொழுது மந்திரிகள் பதில் சொல்கிறார்கள். மன்னா! ஒரு பசுங்கன்று இறந்து போய்விட்டது. அந்தத் துயரம் தாங்காமல், அதன் தாய் பசு வந்து நமது அரண்மனை ஆராய்ச்சி மணியை அடிக்கிறது என்றார்கள் மந்திரிகள். அந்தக் கன்று தேர்ச் சக்கரத்தில் புகுந்து இறந்து விட்டது.  முன்னால் வந்தால், பார்த்து நிறுத்தி இருக்கலாம். பக்கவாட்டில் எதிர்பாராத விதமாக வந்துவிட்டது.  அதுமட்டுமல்ல மன்னா! தேரோடிய  அந்தத் தெரு, பொதுப்பாதை அல்ல! அரசர்கள் மட்டும் உலாபோகும் தெரு. அந்தப் பாதையில், அந்தப் பசுங்கன்று வந்ததே தவறு! அரசருக்கு  மட்டும் உரிய அந்தத் தெருவில், தனியாகப் போயிருந்தால் கூடப் பரவாயில்லை. அளவிலாத படைகள் சூழ, தேர் ஓடிக்கொண்டிருந்தது. மன்னா! அந்தத் தேரில், பல மணிகள் கட்டப்பட்டிருந்தன. அவை எழுப்பிய ஓசை பலமாக இருந்தது. கன்று கத்தி இருந்தாலும், காதில் விழுந்திருக்காது. தேரோ, நீள-நெடுகப் பெரியதாக இருக்கும் தேர்! திடீரென்று  வரும் கன்றை எப்படி பார்க்க முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, தேரில் ஏறிப்போனது உங்கள் புதல்வன். உங்களுக்குப் பிறகு இந்த நாட்டை ஆள வேண்டியவர். மன்னா நம் நாட்டில் வளங்களுக்குப் பஞ்சமா என்ன?  நீங்கள் வளமையாக ஆட்சி செலுத்தும் நம் நாட்டில், ஒரு கன்றுக்குட்டி போய்விட்டதென்று, அதன் தாய் வந்து   இப்படி ஆராய்ச்சி மணியை அடிக்கிறது என்று மந்திரிகள் கூறி முடித்தார்கள்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசன், கன்றை இழந்து தவித்த அந்த தாய் பசு அடைந்த துயரத்தை நானும் அனுபவிப்பேன் என்று தீர்ப்பு வழங்கினார். ஆக மற்றவர்கள் அல்லது மற்ற உயிரினங்கள் கண்ணீர் சிந்தும் போது அவர்கள் துயரை துடைப்பதே மனிதன் என்பவனின் மிக உயர்ந்த கடமையாகும். மனுநீதி சோழனும் தெய்வீக அன்பை உடையவனாக இருந்ததினால்தான் அவ்வாறு தீர்ப்பு வழங்கினான்.

அன்பின் மூன்றாவது நிலையாவது தெய்வீக அன்பாகும். பகைவர் மீதும் அன்பு செலுத்துபவர்கள் இறைவனின் தன்மையை உடையவர்கள். இறைவன் நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கும் சூரிய ஒளி, காற்று, மழை பேதமின்றி அருளுகிறான். மனிதனுக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிரினங்களுக்கும் அவற்றை இறைவன் தருகிறார். ஓர் அறிவுபடைத்த உயிரினத்திலிருந்து  ஆறரிவு படைத்த மனிதனை இறைவனின் சிருஷ்டிகள் என்று பாவிக்கும் சம நோக்குடையவர்களே தெய்வீக அன்பு என்ற உன்னத  நிலையை அடைந்தவர்கள், இறைவனின் அம்சத்தை உடையவர்கள். “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று இறையம்சம் உடையவராக இருந்ததினால்தான் வள்ளலார் அவ்வாறு கூறினார். “தனி மனிதன் ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இச்செகத்தை அழித்திடுவோம்” என்று இதே காரணத்தினால்தான் பாரதியார் பாடினார். இந்த தெய்வீக அன்பு இருந்ததினால்தான் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்கு தன் போர்வையை கொடுத்தான் பேகன். நம்முடைய நாட்டின் தந்தை மகாத்மா காந்தியடிகள் இந்திய மக்கள் வறுமை கோட்டின்கீழ் இருப்பதினால், சரியாக உடை உடுத்த முடியாததினால், அவர் தன் வாழ்நாள் முழுவதும் வெறுமனே ஒரு வேட்டியும், ஒரு துண்டை மாத்திரம் அணிந்துகொள்ள தீர்மானம் எடுத்தார்.

– தொடரும்…

******

Filed under: திருக்குறள் விளக்கம்