தமிழ் | తెలుగు

» திருக்குறள் விளக்கம் » ஆன்மீக பார்வையில் திருக்குறள்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

குழந்தை பிறந்து விட்டது என்ற செய்தியைக் கேட்கும்போது, அந்த தாய் அதிக சந்தோஷம் அடைகிறாள் என்பது இக்குறளின் கருத்தாகும்.

ஒரு தாய் இயற்கையாக குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, அக்குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு, தான் அடைந்த அத்தனை துன்பங்களையும் மறந்து மகிழ்ச்சி அடைகிறாள். குழந்தை இப்போது தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதன் மூலம் உலகிற்கு வந்துள்ளது. இவ்வாறு இயற்கையின் வழியில் பிறப்பது மட்டுமே குழந்தைக்குச் சிறப்பல்ல. இந்த இயற்கைப் பிறப்பைத் தாண்டியும் பிறப்பு ஒன்றைக் குழந்தை அடைய வேண்டும். இயற்கையாக பிறப்பது மட்டுமே ஒருவனுக்கு சிறப்பை அளிக்காது. அதற்கடுத்தபடியாக ஒரு மனிதன் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும். அதுவே சாதாரண மனிதன் ‘சான்றோன்’ என்று அழைக்கப்படுவதாகும். முதற் பிறப்பு தாய்ப் பறவையின் வயிற்றிலிருந்து வெளிவரும் முட்டையைப்போல உள்ளது. சான்றோனாவது முட்டையிலிருந்து தானாகவே வெளிவரும் குஞ்சு என்ற நிலையே இரண்டாம் பிறப்பு அல்லது மறுபிறவியாகும். சான்றோனாக இரண்டாம் பிறப்படைந்த நிலையே முழு வளர்ச்சியடைந்த நிலையாகும். உருவத்தால் மனிதர்களாக காட்சி அளிக்கிறவர்கள் யாவரும் மனிதர்கள் அல்ல. அப்படியானால் மனிதன் எப்படி இருக்க வேண்டும்? இறைவனைப்போல காட்சியளிப்பவனே மனிதன். இறைவன் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தான் என்று விவிலியம் கூறுகிறது. இறைவனின் சாயலில் யார் உள்ளாரோ அவனே சான்றோன். இந்த சான்றோன் பிறக்கும்போது மனிதன். ஆனால் மறுபிறவி அடைந்தவன், ஆன்மீகப் பிறப்பு அடைந்தவன். அத்தகைய இறைவன் போன்ற மனிதனையே வள்ளுவர் சான்றோன் என்று கூறுகிறார். சான்றோன் என்பவன் உறுப்பளவில் மற்றவர்களைப் போல காணப்பட்டாலும் உள்ளத்தால் மாறிப்பிறந்த இரண்டாம் பிறப்பு உடையவர்கள், மறுபிறவி அடைந்தவர்கள். அதாவது  அவர்களிடம் காணப்படும் பண்புகளினால் வேறுபட்டவர்கள் ஆவார்கள். இதே கருத்தை இயேசு பிரான் விவிலியத்தில் கூறினார். நீ மறுபடியும் பிறக்க வேண்டுமென்று  நிக்கொதேமு என்ற யூத ஞானியிடம் கூறினார். நான் எங்ஙனம் என் தாயின் வயிற்றிற்குள் சென்று மறுபடியும் பிறப்பது? என்று கேட்டான். அதற்கு இயேசுபிரான் உள்ளம் மாறி, மனம் மாறி ஒருவன் ஆன்மீக ஜாதியாக, ஆன்மீக உலகில் பிறப்பதை பற்றிக் கூறினார். இயற்கையான பிறப்பை பற்றிக் கூறவில்லை.

முதல் கட்டமாக மனிதனின் மனம் மாற வேண்டும். மனமாற்றம் அடைந்த மனிதன் இறைவனைப் போலவே காட்சி அளிக்கிறான். அவனுக்கு இறைவன் நவானிதேஹி, அதாவது மரணமில்லா சக்தியுடைய சரீரத்தைக் கொடுக்கிறார். அந்த சம்பவத்தைத்தான் ‘மகிமைப்படுதல்’ என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியுள்ளார். அந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக மரணம் எய்துபவர்களுக்கும் அந்த சரீரம் வழங்கப்படுகிறது.

இந்த ஆன்மீகப் பிறப்பு அல்லது மறுபிறவி அடைய எத்தனை காலமாகும் என்று சொல்லுதற்கரிது. இயற்கையான பிறப்பில் ஒன்பது மாதங்கள் கழித்து குழந்தை பிறக்கிறது. ஆனால் ஆன்மீகம் பிறப்பதற்கு காலத்தை நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் சிறுமை போக்கிப் பெருங்குணமேலோனாக வேண்டும். அதற்கு நாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா போதனைகளை கற்றுணர வேண்டும். இந்தப் பிறவியிலேயே மறுபிறவி அடைந்து எவ்வாறு நவானி தேஹி – மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும் என்பதை ஆராய்ச்சி செய்யவே ஸ்ரீ லஹரி கிருஷ்ணா மனுஜோதி ஆசிரமத்தை தோற்றுவித்து மனிதர்கள் மக்களாக இல்லாமல் சான்றோன் அல்லது இறைநிலையை அடைய தேவையான எல்லா உபதேசங்களையும் கொடுத்துள்ளார்.

சங்ககாலத்தில் ‘சான்றோர்’ எனக் குறிக்கப்படுஞ்சொல் காண்பிக்கும் பொருள் என்ன? சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள், நல்லவர்கள், நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர்கள். பொதுவாக சால்பு உடையவர் சான்றோர். சால்பு என்றால் எல்லா நற்குணங்களாலும் நிறைந்திருத்தல். அதாவது நற்குணங்கள் யாவும் நிரம்பியவர் என்பதாகும். சான்றோர் ஒரு குறிப்பிட்ட கொள்கையால் இணைந்தவர்.

“பிறர் நோயுந் தந்நோய் போற் போற்றி அறனறிதல்
சான்றவர்க்கெல்லாம் கடன்.”   – கலித்தொகை.

பிறருக்கு நோய் ஏற்பட்டாலும், துன்பம் ஏற்பட்டாலும் தனக்கே அந்த நோய் அல்லது துன்பம் ஏற்பட்டது போல பாவித்து அவர்கள் துன்பம் தீர முயற்சி செய்வதே சான்றோர்களின் கடமை என்று கலித்தொகை பாடல் கூறுகிறது.

“தம்மை இதழ்ந்தமை தாம் பொறுப்ப தன்றி
மற்றெம்மை யிகழ்ந்த வினைப் பயத்தால்
உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர் கொலென்று
பரிவதூ உஞ் சான்றோர் கடன்”
மற்றவர் வாழும் பொருட்டு தன்னை அழித்துக்கொள்ளப் பின்வாங்காக் கொள்கையினர் தன்னை இகழும் பகைவர்க்கும் நன்மையே நினைக்கும் கொள்கையினர் என்பதும், பகைவர் அடையும் துன்பத்தையும் சகித்துக் கொள்ள இயலாத உள்ளத்தினர் என்பதை இந்த நாலடிச் செய்யுளால் நாம் அறிந்துகொள்ளலாம். இதினால் சான்றோர் தாழ்ந்திருப்பர். இவ்வேறுபாடு நடைபெற்றதாகப் பழமொழி கண்ணீர் விடுகிறது.

“உரை சான்ற சான்றோ ரொடுங்கி யுறைய
நிறையுள்ள ரல்லார் நிமிர்ந்து பெருகல்
வரை தாழி லங்கருவி வெற்ப அதுவே
சுரையாழ அம்மி மிதப்பு”

தண்ணீரின் மேலே மிதக்க வேண்டியது கீழே போகிறது. கீழே இருக்க வேண்டியது தண்ணீருக்கு மேலே மிதக்கிறது. இந்தத் தலைகீழ் மாற்றமே இடைக்காலத்தில் சான்றோர்க்கு ஏற்பட்டதென்பது பழமொழியின் முடிவாகும்.

ஆக தற்போது நாம் சான்றோர்களை எங்ஙனம் கண்டு கொள்வது? என்ற கேள்விக்கு ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பதில் கூறுகிறார். கலித்தொகை, நாலடியார் பாடல்களில் கூறியபடி சான்றோர்கள் இந்தியாவில் தாழ்ந்த நிலைக்குச் சென்றார்கள். சான்றோர்களிடம் எதிரிகள் போரிட வரும்போது அவர்கள் விலகி ஒதுங்கினார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் ஒதுங்கி நின்றார்கள்? கடற்கரை வரை ஒதுங்கினார்கள். அதற்கு பின்னர் எதிரிகளால் வர முடியாது. அல்லது அவர்கள் பனைமரத்தில் ஏறுவார்கள். ஆக தற்போது தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் தான் சான்றோர்கள். அப்படிப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மறுபடியும் சான்றோன் ஆக்குவதே கல்கி மகா அவதாரத்தின் கடமையாக இருக்கிறது.

– தொடரும்…

******

Filed under: திருக்குறள் விளக்கம்