தமிழ் | తెలుగు

» திருக்குறள் விளக்கம் » ஆன்மீக பார்வையில் திருக்குறள்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

“தந்தை மகற்காற்று நன்றிய வையத்து
முந்தி யிருப்பச் செயல்”

ஒரு தந்தை மகனுக்குக் கல்வி ஞானம் வழங்குவதைப் பார்க்கிலும் சாகாத கல்வியை வழங்குவதே தன் மகனுக்குச் செய்யும் சிறந்த நன்மையாகும். தன்னுடன் உறவாடுவதற்காகவே இறைவன் மனிதனை படைத்தான். ஆனால் மனிதன் சம்சார சக்கரத்தில் வீழ்ந்து இறக்க நேரிட்டான். ஆக இப்பொழுது நாம் இறைவனுடன் என்றென்றும் இருக்கும் பேரின்பத்தை அடைய வேண்டும். சாகாத கல்வி ஒரு தனி விஞ்ஞானமாகும். இந்த மெய்ஞ்ஞான விஞ்ஞானத்தை மனுஜோதி ஆசிரமத்தை ஸ்தாபித்த கல்கி மகா அவதாரம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒருவர் மாத்திரமே கற்றுத் தருகிறார்.

சென்ற இதழில் சாகாத நிலையை அடைய தடையாக இருப்பவை கால நேரம் பார்ப்பது, ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைப்பது மற்றும் இறைவனின் கட்டுப்பாட்டிற்குள் வர மறுப்பது என்பதைக் குறித்து பார்த்தோம்.

“ஈன்று புறந் தருதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே”

மகனைப் பெற்று வளர்த்து உலகுக்குத் தருவது தாயின் முதன்மையான கடமையாகும். அவனை சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை என்கிறது புறநானூறு. ஒருவன் எவ்வாறு சான்றோன் ஆகிறான்? சாகாத கல்வியை கற்றறியும்போது அவன் சான்றோன் ஆகிறான். இவ்வாறு மனிதனாகப் பிறந்த நாம் இறப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்டோமா? இல்லை. மக்கட் பிறப்பு, படைப்பின் மணிமுடி. மக்கட் பிறப்பினும் மற்றப் பிறப்பு, சிறந்த பிறப்பன்று. அதனால் ஒளவையாரும் “அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார். பிற உயிர்களைவிட மனிதன் நீண்ட காலம் வாழலாம். எலி 3 ஆண்டுகள் வாழும். முயல் 5 ஆண்டுகள் வாழும். பூனை, நரி, மான் இவை 10 ஆண்டுகளுக்குமேல் வாழ்வதில்லை. கீரி 13 ஆண்டுகள் வாழும். குதிரை, குரங்கு, பசு, பன்றி இவை 15 ஆண்டுகள் வாழும். யானை மட்டும் 50 ஆண்டுகளுக்குமேல் 100 ஆண்டுகளுக்குள் வாழும். ஆனால் மனிதன் இறக்கும் வயது மாத்திரம் இந்த கலியுகத்தில் மிகவும் குறைந்து விட்டது. நாம் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டோம். பல காரணங்களினால் சாகாத தன்மையை இழந்து விட்டோம். அவற்றை சரி செய்தால் நாம் சாகாத நிலையை அடைய முடியும் என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகின்றார்.

‘தந்தை தாய் பேண்’, ‘உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ என்று வேதங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த கட்டளையையும் மனிதன் கடைப்பிடிக்கிறதில்லை. பெற்றோருக்கு மரியாதை செலுத்தாததினால் மனிதனின் ஆயுட்காலம் குறைந்தது. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’.இதுவும் பிற்காலத்தில் தாய் சொல்லுவதற்கு கீழ்ப்படிய வேண்டும் என்று மக்களால் மாற்றப்பட்டது. ஆனால் பிள்ளைகள் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் நியதியாகும். இதை மாற்றும்போது மனிதனின் ஆயுட்காலம் குறைய நேரிட்டது.

அடுத்ததாக பிரம்ம வேள்வி அல்லது ஆதிபலியை மனிதர்கள் மறந்து விட்டனர். இதினாலும் மனிதர்களின் ஆயுசு நாட்கள் குறைந்தது. துவாபரயுகத்தில், ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த இறைவன் அர்ச்சுனனிடம் இவ்வாறு கூறுகிறார். ஸ்ரீமத் பகவத்கீதை 4:1-3: “நான் விவஸ்வானுக்கு இந்த அழிவற்ற யோகத்தை உபதேசித்தேன்; விவஸ்வான் மனுவுக்கு உரைத்தார்; மனு இஷ்வாகுவுக்கு உரைத்தார். இவ்வாறு பரம்பரையாக வந்த இதை ராஜரிஷிகள் அறிந்திருந்தனர்; சத்துருக்களைத் தவிக்கச் செய்வோனே! இவ்வுலகில் அந்த யோகம் நாளடைவில் மறைந்து போயிற்று. எனக்குப் பக்தனும் நண்பனுமாக நீ இருக்கிறாய் என்று அந்தப் பழமையான யோகமே இன்று என்னால் உனக்குக் கூறப்பட்டது; உண்மையில் இது உத்தமமான மறைபொருள்”.

துவாபர யுகத்தில் அழிவற்ற யோகம் அல்லது பிரம்ம வேள்வி அல்லது ஆதிபலியை மறந்ததினால் ஸ்ரீ கிருஷ்ணர் அதை மறுபடியும் உரைத்தார். இக்கலியுகத்தில் கல்கி மகா அவதாரமாக வந்து, இறைவன் நமக்கு அதை மறுபடியும் போதித்துள்ளார். பிரம்ம வேள்வியை நினைவு கூர்ந்து, நாமும் தன்னலமற்ற வாழ்க்கையை வாழும்போது நம்முடைய ஆயுசு நாட்கள் கூடுகின்றது.

ஏழாம் நாளாகிய சனிக்கிழமையை விரத நாளாக கடைப்பிடிக்காமல் இருப்பதினாலும் மனிதனின் ஆயுசு நாட்கள் குறைகின்றது. விரத நாளை மக்கள் மறக்கும்படி கலியன் செய்து விட்டான். சனிக்கிழமையன்று வீட்டில் இருந்து விரதம் மேற்கொள்ளாமல் வெளியே சுற்றித் திரிகிறதினால் சனி பிடித்துக் கொள்கிறது. இது மரணம் ஏற்படுவதின் இன்னொரு காரணமாகும். சாகாத நிலையை விரும்புவோர் அல்லது இறைவனுடன் ஒன்றுபட விரும்புவோர் சனிக்கிழமையன்று வீட்டிலிருந்து வெளியே செல்லாமல், இறைவனை தியானித்து, அவனது அருளைப்பெற வேண்டும். அப்போது நாம் ‘இறப்பு’ என்ற பாதையில் செல்லாமல், ‘சாகாத நிலை’ என்ற பாதையில் செல்லுவோம்.

இப்பொழுது நாம் சூரியன் உதிப்பதை வைத்து நாளையும், மாதங்களையும், வருடங்களையும் கணக்கிடுகிறோம். சந்திரனை வைத்து நாட்களையும், மாதங்களையும், வருடங்களையும் கணக்கிட்டதாலும் மனிதனின் ஆயுட்காலம் குறைந்தது.

அடுத்ததாக பொய் சொல்லுவதினால் நாம் மரணத்தை நோக்கிச் செல்லுகிறோம். நீ இந்த பொருளை எடுத்தாயா என்று கேட்கப்படும்போது, உண்மையை சொல்லாவிட்டால் ஆயுசு நாட்கள் குறைகிறது. நீங்கள் வேதங்களை தினமும் வாசிக்கலாம், தினமும் பிரார்த்தனை செய்யலாம், தியானம் செய்யலாம். ஆனால் உண்மையைக் கூறுவது இவைகள் எல்லாவற்றைப் பார்க்கிலும் முக்கியமானதாகும்.

அடுத்ததாக உங்களுக்கு முன்பாக ஜீவன் முக்திக்கு செல்லும் பாதை இருக்கிறது, மரணத்திற்கு செல்லும் பாதையும் இருக்கிறது. நீங்கள் ஒரு மனிதனாக இருந்தால் ஜீவன் முக்திக்கு செல்லும் பாதையை தேர்ந்தெடுப்பீர்கள், மிருகமாக இருந்தால் மரணத்திற்கு செல்லும் பாதையை தேர்ந்தெடுப்பீர்கள். ஒன்று நீங்கள் ஒரு மனிதனாக இருக்க வேண்டும் அல்லது மிருகமாக இருக்க வேண்டும்.

மிருக குணம் என்றால் என்ன? இனக்கவர்ச்சியை எல்லாவற்றிலும் தேடுவது மிருகக் குணமாகும். மிருக குணமுள்ளவர்கள் இனக்கவர்ச்சியை தூண்டுவதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். இவ்வுலகத்தில் மாத்திரமல்ல, மறுமையிலும் இனக்கவர்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் சிலர் இயேசுவின் காலத்தில் இருந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் ஒரு பெண்ணிற்கு ஏழு புருஷர்கள் இருந்தார்கள். சொர்க்கத்தில் அவள் யாருடைய மனைவியாக இருப்பாள் என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம்: சொர்க்கத்தில் திருமணமோ, இனக்கவர்ச்சியோ இருக்காது என்று கூறினார். ஜீவன் முக்தியை அடைய விரும்புபவர்கள் இனக்கவர்ச்சியில் தங்கள் வாழ்க்கையை வீணாக்கக்கூடாது. ஏனென்றால் அது பஞ்சேந்திரியத்தில் மட்டுமே அனுபவிக்கக்கூடியது. நவானிதேஹி அல்லது இறைவன் அருளும் புதிய சரீரத்தில் இனக்கவர்ச்சி கிடையாது. மனிதனின் எண் ஆறு. ஏனென்றால் அவன் ஆறாம் நாளில் படைக்கப்பட்டான் என்று விவிலியம் கூறுகிறது. மிருகக் குணங்கள் ஆறு. அவையாவன காமம், குரோதம், லோபம், மோகம், மதம் (ஆணவம்) மாச்சரியம் (பொறாமை) என்பவைகளாகும். இந்த ஆறு குணங்களையும் ஒழித்து, அழித்து தெய்வீகத்தன்மையை அடைய வேண்டும். ஆக மனிதன் மனிதனாக
வாழாமல், மிருகமாக வாழும்போது அவனுடைய ஆயுட்காலம் குறைய நேரிட்டது.

ஆகவே மனிதனின் ஆயுட்காலம் குறைந்ததின் காரணங்களைப் பார்த்தோம். சுருங்கச் சொல்ல வேண்டுமானால், இறைவனுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதே நம்மை (மரணிக்க) இறக்கச் செய்கிறது. மாறாக நாம் அவருக்கு கீழ்ப்படிகின்றபோது ஜீவனைப் பெறுகிறோம். இவ்வாறு சாகாத கல்வியைக் கற்பதே ஒருவனுக்கு புகழைத் தருகின்றது.

– தொடரும்…

******

Filed under: திருக்குறள் விளக்கம்