தமிழ் | తెలుగు

» திருக்குறள் விளக்கம் » ஆன்மீக பார்வையில் திருக்குறள்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

தந்தை மகற்காற்று நன்றிய வையத்து
முந்தி யிருப்பச் செயல்

என்ற குறளுக்கு ஆன்மீக விளக்கமாவது சாகாத கல்வியே ஒருவனுக்குப் புகழை அளிக்கும். சாகாத கல்வி எங்ஙனம் பெற வேண்டும்? ஜீவனை எங்கே இழந்து விட்டோம் என்பதை அறிந்துகொண்டு, அந்த பிழைகளை திருத்தும்போது சாகா ஜீவனைப் பெற்றுக்கொள்வோம் என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார். சென்ற இதழில் “சுயசித்தத்தை விட்டு விட்டு இறைவனின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளுதல், புலால் உண்ணாமல் இருத்தல், இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்காமல் இருத்தல், வேறு யாரையும் நேசிக்காமல் இருத்தல், பொருளாசை அற்றவனாக இருத்தல், யாரையும் துவேஷிக்காமல் இருத்தல்”, ஆகியவற்றை கடைப்பிடிக்கும்போது ஜீவனுக்கு செல்லும் பாதையில் நடக்கிறோம் என்பதைப் பார்த்தோம்.

நாம் எவ்வாறு மரணத்தை வெல்ல முடியும்? எதினால் மனிதன் இறக்க நேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பாக நமக்கு கல்கி மகா அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறிவிட்டார். விஞ்ஞானிகள் ஏன் அதை கண்டுபிடிக்க முடியாது? யோபு 28:20-23: “இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே? அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. நாசமும், மரணமும், நாங்கள் எங்கள்
காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது. தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்”. மரணத்தை வெல்லும் கலை அல்லது சாகாத கல்வி விவிலியத்தில் ‘ஞானம்’ என்று கூறப்படுகிறது. விஞ்ஞானிகளால் அதை கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அந்த இரகசியம் ஜீவனுள்ள மனிதர்களுக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. இறைவனே அதின் வழியை அறிவார் என்று விவிலியம் கூறுகிறது. ஞானத்திற்கு செல்லும் வழி அடைக்கப்பட்டிருப்பதினால் மனிதர்கள் இறக்க நேரிடுகிறது.

சாகாஜீவனை நாம் பெற்றுக்கொள்வதில் இரண்டு பயன்கள் உள்ளன. நாம் இறைவனுடன் வாழ்வதோடு மட்டுமல்லாமல் இந்த உலகத்திலுள்ள எல்லா சிருஷ்டிக்கும் விடுதலை ஏற்படுகிறது. மனிதன் மாயையான ஐம்புலனின் நிலைக்கு வந்தான். அதினால் அவனை சார்ந்திருந்த சகலமும், அவனுக்கு ஏற்பட்ட கொடிய சம்சார சக்கரத்தினால் வேதனையுற்றது. ஒரு கூட்ட மக்களாகிய இறைவனின் பாகமானவர்கள் சாகாஜீவனை அடையும்போது, மற்ற சிருஷ்டிகள் எல்லாம் மாயை என்ற கட்டிலிருந்து விடுபடுகின்றன. அவையெல்லாம் இவர்கள் எப்பொழுது மீட்பை பெறுவார்கள் என்று காத்துகொண்டிருக்கின்றன. விவிலியத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. ரோமர் 8:19-21: “மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்த சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.” சர்வ சிருஷ்டியையும் விடுதலை செய்யக்கூடிய சக்தி நம் கையிலிருக்கிறது. நாம் சாகாஜீவனை அடைந்து அவற்றை விடுதலை செய்ய வேண்டுமல்லவா?

காலங்களையும், நேரத்தையும், ஜோதிடத்தையும் பார்ப்பதினால் மனிதனின் ஆயுசு காலம் குறைந்தது. ஜோதிடத்தில் கணித்து சொல்வது உண்மையாகலாம். ஆனால் இறைவன் நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் கணித்துக் கூறுவது என்பது பொருளைக் காண்பதினால் அதின் நிழலை காண்பது போன்றதாகும். ஆனால் நிழலை வைத்து ஒரு பொருள் இன்னதென்று கண்டுகொள்ளக்கூடிய உயர்ந்த நிலைக்கு இறைவன் நம்மை அழைத்துச் செல்ல விரும்புகிறார். ஜோதிடத்தில் கணித்துக் கூறுவது உண்மையாக இருந்தாலும், அவற்றை முன்னரே தொரிந்துகொண்ட பிறகு மனிதனுடைய மனம் பதற்றமடைகிறது. இன்றைக்கு என்ன நேருமோ என்ற பயம் ஏற்படுகிறது. பயத்தினால் பலவித அசம்பாவிதங்கள் ஏற்படும். சென்ற இதழில் வள்ளலார் சாகா கல்விக்கு பயம் பூஜ்ஜியமாக இருத்தல் வேண்டும் என்று கூறியதை நினைவில்கொள்ள வேண்டும். அத்துடன் கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் இவ்வாறு கூறுகிறார்.

“நாள்என் செயும் வினை தான்என்
செயும் எனை நாடிவந்த
கோள்என் செயுங் கொடுங் கூற்றுஎன்
செயும் குமரேசர் இரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந்
தண்டை யுஞ் சண்முகமுந்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே
வந்து தோன்றி டினே.”

முருகப்பெருமானின் இரண்டு திருவடிகளும் அவற்றில் அணிந்து திகழும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், அப்பெருமானின் ஆறுமுகங்களும், அழகிய தோள்களும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றினால், தீமையைத் தரவல்ல நாள்தான் எனக்கு என்ன இடையூறு செய்ய முடியும்? ஊழ் வினைதான் என்ன துன்பத்தைத் தர முடியும்? விதியின் வழி நடத்தும் நவக்கிரகங்கள் தான் எனக்கு என்ன தீமையைச் செய்ய இயலும்? என்பது அதன் அர்த்தமாகும். ஆக உண்மையான பக்தன் காலத்தையும் நேரத்தையும் குறித்துப் பயப்படத் தேவையில்லை, நாம் அவற்றை விட்டு விட்டால் அமர நிலைக்கு செல்லும் பாதைக்கு திரும்பி வந்துவிட்டோம் என்று அர்த்தமாகும்.

அடுத்ததாக மனிதனுக்கு இறைவன் சுயமாக சிந்திக்கும் திறனை கொடுத்தார் என்பது நாமெல்லாரும் அறிந்ததே. இதினால் அவன் இறைவனின் கட்டுப்பாட்டிற்குள்ளும் வர மறுக்கிறான்; இறைவன் தன்னை ஆட்சி செய்ய வேண்டுமென்ற ஆசை அவனை விட்டு அகன்றது. அவன் வேறு எல்லாருக்கும் அடி பணிகிறான். பணத்திற்கு, புகழிற்கு, மனைவிக்கு, கணவனுக்கு, பிள்ளைகளுக்கு, தலைவர்களுக்கு அடி பணிகிறதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால் மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் கூறியுள்ளார்.

“நாம்யார்க்கும் குடிஅல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணிஅறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாம்ஆர்க்கும் குடி அல்லாத் தன்மையான
சங்கரன் நற்சங்கவெண் குழையோர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்மலர்ச் சேவடி யிணையே குறுகினோமே.”

நாம் யாருக்கும் கட்டுண்ட குடி மக்கள் அல்ல; எமனுக்கும் பயப்படமாட்டோம். நரகத்தில் உழல்பவரல்ல நாங்கள்; நாம் வஞ்சனை உடையோரல்ல; பக்திப் பெருமைமிகு எங்களை எந்த நோயும் அணுகாது. எவருக்கும் கட்டுப்பட்ட குடிமகன் இல்லாத்தன்மையான, சங்குப் பூவை அணிந்துள்ள பெருந்தலைவர் ஈசனுக்கே நாம் அடிமையானவர்கள்; அவன் பாத மலரடியையே பணிவோம். வேறு யாரையும் பணியமாட்டோம்.

இறைவனுக்கு அடிபணிந்து, இறைவனுடைய கட்டுப்பாட்டில் மட்டுமே மனிதன் இயங்கி வர வேண்டும். அதற்கு மனிதன் இறைவனிடம் சரணடைய வேண்டும். அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். இறைவனுடைய கட்டுப்பாட்டிற்குள் வரும்போதும், அவர் நம்மை ஆட்சி செய்யும்போதும் ‘நான்’ அழிந்து விடுகிறது. அன்பானவர்களே, சுயம் அல்லது ‘நான்’ அழிந்தால்தான் நாம் சாகா ஜீவனை அடைய முடியும். நான் இறைவனின் கட்டுப்பாட்டிற்குள் வந்து, இறைவனே நம்மை ஆட்சி செய்யும்போது இறைவன் நமக்கு சாகாவரத்தை அருளுகிறார்.

******

Filed under: திருக்குறள் விளக்கம்