தமிழ் | తెలుగు

» ஆன்மீகச் சுற்றுபயணம் » ஆன்மீக சுற்றுப்பயணம்

ஆன்மீக சுற்றுப்பயணம்

இந்த ஆன்மீக சுற்றுப்பயணம் என்பது இறைவனால் முன்குறிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த பகுதிகளில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருள் வாக்கு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தாரோ அவருடைய திட்டமிடலின்படியே இந்த பயணங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இது ஒரு பொழுதுபோக்குக்காக செய்யும் உல்லாசப் பயணம் அல்ல. உதாரணமாக திரேதா யுகத்தில் விசுவாமித்திரர், தான் செய்யும் யாகத்திற்கு பாதுகாவல் அளிப்பதற்காக இராமன், இலட்சுமணன் இருவரையும் என்னுடன் அனுப்ப வேண்டும் என்று தசரத மகாராஜாவிடம் வேண்டினார். அந்த யாகத்தை பாதுகாக்க சென்ற பயணமானது பகவானின் திட்டப்படி ஜானகியை மணம் முடித்து அயோத்திக்கு திரும்பி வந்தார். இவ்விதமாகத்தான் ஆன்மீக சுற்றுப்பயணத்தின் போது நம்மை அறியாமலேயே அவருடைய லீலைகள் நிறைவேறும்.

உதாரணமாக இந்த வெகுதூரப் பிரயாணத்திற்குப் பிறகு வங்காள தேசத்திற்கு (Bangladesh) சென்றோம். அங்கு என்ன ஆச்சர்யம் என்றால் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினரை எங்களால் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவைக் குறித்து சிறிது நேரம் உரையாடினோம். உரையாடிய சமயத்தில்தான் அவர்கள் முப்பது ஆண்டுகளாக மனுஜோதி ஆசிரம குடும்பத்தினர் யாராவது தங்களது வீட்டிற்கு வரவேண்டும் என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்ததாக எங்களிடம் கூறினார்கள். அப்போதுதான் நாங்கள் ஏன் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்தோம் என்பதை புரிந்து கொண்டோம்.

சென்ற இதழில் நேபாளத்தின் பயண அனுபவங்களைப் பற்றி அடுத்த இதழில் காண்போம் என்று கூறியிருந்தேன். டிசம்பர் 7-ம் தேதி சிலிகுரியிலிருந்து காலை 5 மணிக்கு இரண்டு இந்திய வாகனங்களில் நேபாளத்திற்கு பயணத்தைத் தொடங்கினோம். வழிப்பயணத்தில் எங்களுக்குத் தேவையான உணவை நாங்களே தயார் செய்து எடுத்துச் சென்றோம். கிட்டத்தட்ட 17 மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு நேபாளத்தின் தலை நகரான காத்மண்டு என்ற இடத்திற்கு சென்றடைந்தோம்.

சென்ற முறை நேபாள சுற்றுப்பயணத்தின்போது நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதி மற்றும் அருகிலுள்ள பஸ் நிலையம் எல்லாம் எங்களுக்குப் புதிதாக காட்சியளித்தது. ஏனென்றால் 2016-ம் ஆண்டு நடைபெற்ற மிகப் பெரிய பூகம்பத்தின் விளைவாக நேபாள தேசமே புதுப்பிக்கப்பட்டிருந்தது. எங்களுக்கு அறிமுகமானவர்களை எங்களால் சந்திக்க முடியவில்லை. இருந்தபோதிலும் புதிதாக அநேக மக்கள் எங்களுக்கு அறிமுகமானார்கள். அவர்களுடன் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் வருகையைக் குறித்தும், அதன் நோக்கத்தைக் குறித்தும், புராணங்களிலும், வேதங்களிலும் தமிழகத்தின் பெருமையைக் குறித்தும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். மேலும்
ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் செய்திகள் அடங்கிய ஆங்கில புத்தகங்களையும், குறுந்தகடு(CD) க்களையும் இலவசமாக அவர்களுக்கு விநியோகம் செய்தோம்.

அதுமட்டுமல்லாமல், இரண்டு இரண்டு பேராக சேர்ந்து நடந்து சென்று கைப்பிரதிகளை விநியோகம் செய்தோம். அவ்விதமாக சென்றிருந்தபோது ஒரு நண்பர் மாத்திரம் வெகு நேரமாகியும் நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு திரும்பி வரவில்லை. நாடும் புதியது. அங்குள்ள மக்கள் பேசும் பாஷையும் புரியாது. இரவு பத்து மணியாகியும் அவர் வராததால், அவரை எவ்விதமாக கண்டுபிடிப்பது என்று தவித்துக் கொண்டிருந்தோம். எதிர்பாராத விதமாக பாஷையும், இடமும் தெரியாத நிலையிலும் அவர் எங்கள் விடுதிக்கு ஒரு காவலர் உதவியுடன் வந்து சேர்ந்தார். புதிதாக செல்பவர்களுக்கு நேபாளத்தின் காவல் துறையினர் உதவி மனப்பான்மையுடன் செயல்படுகிறார்கள் என்பதை கண்டோம். இரண்டு நாட்கள் எப்படி கடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை.

நாங்கள் சென்றிருந்தது ஒரு சனிக்கிழமை ஓய்வு நாளாக இருந்தது. அதற்கேற்றாற்போல் காத்மண்டு நகரத்திலும் அலுவலகங்கள், பள்ளிகள், கடைகள் அனைத்திற்கும் விடுமுறை நாளாக இருந்தது. அது விடுமுறை நாளாக இருந்ததால் அந்த நகரமே ஓய்வில் இருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். ஒரு தேசமானது கடவுள் நியமித்த நாளைப் புறக்கணிக்கும்பொழுது இயற்கை சீற்றங்களினாலும், சத்துருக்களினாலும் அழிக்கப்பட்டு அந்நாட்டு மக்கள் சத்துருக்களின் நாட்டிலே அடைக்கலம் புகுவார்கள் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த நாட்டு மக்கள் தங்கள் தவறை உணர்ந்து தங்களைப் படைத்த இறைவனிடம் திரும்பி வரும்பொழுது, இறைவன் அவர்களுக்காக மனதுருகி, மீண்டும் அவர்களை செழிப்படையச் செய்வார். இதை ஸ்ரீமந் நாராயணர் தம்முடைய சொற்பொழிவில் விளக்கிக் கூறியிருப்பதைக் காணலாம்.

“நீங்கள் ஓய்வுநாளை எப்படி ஆசரிக்கவேண்டும்? ஓய்வு வருஷத்தின்போது நிலத்தில்கூட ஒரு வேலையும் செய்யக்கூடாது. நீங்கள் இதற்கு கீழ்ப்படியாவிட்டால் அந்த விளை நிலம் பாழாய்க் கிடக்கும். நீங்கள் எவ்வளவு காலம் அந்த நிலத்தை ஓய்ந்திருக்க விடவில்லையோ அதே காலத்திற்கு தேசம் பாழாய்க் கிடந்து தன் ஓய்வுநாட்களை அனுபவிக்கும். கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாததினால்தான் இந்த எல்லா தண்டனைகளும் வருகிறது. ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததால்தான் தேசம் பாழாய் கிடக்கும் என்று சொல்லப்படுகிறது. பரிசுத்த ஸ்தலங்களும், ஆலயமும் அழிக்கப்படும். நிலம் பாழாய்க்கிடக்கும்பொழுது நிலத்தின் சொந்தக்காரர்கள் சத்துருக்களின் தேசத்தில் இருப்பார்கள். தேசத்தில் குடியிருக்கும் உங்கள் சத்துருக்கள் அதைக்கண்டு பிரமிப்பார்கள். அவர்கள் ஓய்வுநாளை சரிவர ஆசரிக்காவிடில் நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உங்கள் பின்னாக பட்டயத்தை உருவுவேன் என்று இறைவன் சொல்லுகிறார். உங்களுடைய தேசம் பாழும், உங்கள் பட்டணம் வனாந்தரமும் ஆகும்.

ஆகவே நீங்கள் உங்கள் எதிரிகளின் தேசங்களில் இருந்தபோதிலும் உங்களுடைய தேசம் ஓய்ந்திருந்து ஓய்வை அனுபவித்துக்கொண்டிருக்கும். உங்களுடைய தேசம் ஓய்வை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் உங்கள் எதிரிகளின் தேசத்தில் இருப்பீர்கள். அது தேசத்திற்கு ஒரு கண்டிப்பான ஓய்வு. ஏனெனில் தேசத்தில் நீ குடியிருந்தபொழுது தேசம் ஓய்ந்திருக்கவில்லை. அவர்கள் ஓய்வுநாளை தீட்டுப்படுத்தியதால் தங்களது எதிரிகளின் நாட்டில் மனத்தளர்ச்சியடைந்து அச்சத்துடன் குடியிருப்பார்கள். அவர்களுக்கு தங்களது எதிரிகளுக்கு முன் நிற்க பெலன் இராது. அவர்கள் கொண்டிருந்த வல்லமை அவர்களிலிருந்து எடுத்துப்போடப்பட்டு அவர்கள் வல்லமையற்றவர்களாகி உதவியற்றவர்களானார்கள்.”

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கூறியதுபோல இன்று இந்தியாவின் பல பாகங்களில் இராஜாக்கள் வாழ்ந்த அரண்மனைகளும், கோட்டைகளும் அவர்கள் மூலமாக கட்டப்பட்ட அநேகமான கோவில்களும் அவர்களுடைய காலத்தில் சிறப்பு வாய்ந்ததாக இருந்தபோதிலும், தற்சமயத்தில் அவை காட்சிப் பொருளாகவும், பாழடைந்த இடமாகவும் காட்சியளிக்கின்றது. இதற்கு காரணம் என்னவென்றால் அந்த ராஜாக்களின் காலத்தில் அவர்கள் இறைவனின் கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை என்று புரிகின்றது.

இந்திய தேசத்திலிருந்து வேலையின் நிமித்தமாக, அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு அநேகர் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அதிக பணம் கிடைத்தாலும் ஒரு இந்தியனாக சுதந்திரமாக இந்திய நாட்டில் வாழ்வதுபோல் அவர்கள் வேலை செய்யும் நாடுகளில் சுதந்திரமாக வாழமுடியாமல், அவர்களுடைய கட்டுப்பாட்டின்கீழ் வாழ்ந்து வருகிறார்கள். இவையெல்லாவற்றிலும் நாம் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ வேண்டுமென்றால், நாம் இறைவன் மனுகுலத்திற்கு கொடுத்த ஓய்வுநாள் கட்டளையை கடைப்பிடித்து, இறை பயத்தோடு வாழ்வோமானால் அவருடைய அருளாசியை பெற்றவர்களாக, சத்துருக்களின் பயமின்றி சுதந்திரமாக வாழலாம்.

டிசம்பர் 9-ம் தேதி காத்மண்டுவிலிருந்து நியூ ஜல்பாய்குரியிலுள்ள சிலிகுரிக்கு இரவு நேரப் பிரயாணத்தைத் தொடர்ந்தோம். முழு இரவும் இரண்டு வாகனங்களில் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடிக் கொண்டும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தை ஜெபித்துக் கொண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

10-ம் தேதி சிலிகுரிக்கு வந்து சேர்ந்தோம். வரும் இதழில் பூட்டான் தேசத்திற்கு சென்ற அனுபவத்தை தொடர்ந்து காணலாம்.

K. இரவிக்குமார், இறைத்தொண்டர், சேலம்

✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்