தமிழ் | తెలుగు

» திருக்குறள் விளக்கம் » ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்

ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்

‘அன்புடைமை’ என்ற வார்த்தையிலேயே அன்பு நம்மிடமிருக்கும் ஒரு உடைமையாக இருக்க வேண்டும் அல்லது ஒரு உறுப்பாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். ‘அன்பு’ என்பது அகத்துறுப்பாகும்.

               “புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை

               அகத்துறுப்பு அன்பிலவர்க்கு?”

உடம்பினுள்ளே இருக்கின்ற மனதின்மேல் அன்புற்றவர்களுக்குப் புறத்தே உள்ள உறுப்புகளால் ஆகும் பயன் என்ன? எதுவுமில்லை என்பது இக்குறளின் பொருளாகும்.

அதாவது கை, கால், கண், மூக்கு, செவி, வாய் போன்றவை புற உறுப்புகளாகும். ஆனால் ‘அன்பு’ என்ற கண்ணுக்குத் தெரியாத அகத்துறுப்பு இல்லாவிட்டால், புற உறுப்புகள் இருந்தும் பயன் இல்லை. அன்புணர்ச்சி என்பது தனித் தன்மையுடையது. அன்பின் அடிப்படையிலேதான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உயர்ந்த நிலையிலிருக்கும்போதுதான் அன்பு செய்கிறார்கள். அதே நபர் வாழ்க்கை சக்கரத்தில் கீழான நிலைக்கு வரும்போதும், அன்பு செலுத்த வேண்டும். அதுவே உண்மையான அன்பாகும். அன்பு என்ற உறுப்பு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மிருகங்கள், பறவைகள், ஊர்வன போன்றவற்றிலும் காணப்படுகிறது என்பதை நிரூபிக்கிறது இச்சம்பவம்.

காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், விஷமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்பட்டு மானைத் தேடிப் போனான். அங்கு ஒரு பெரிய வனத்தில் மகான்கள் அருகிலிருக்கக் கண்டு மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன், ஒரு மானையடிக்க குறிவைத்துக் கூரிய பாணத்தை விடுத்தான். தடுக்க முடியாத அந்தப் பாணம் குறி தவறியதால் அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த மரத்தின்மீது பாய்ந்தது.

கொடிய விஷந்தடவிய கணையினால் மிக்க வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும், இலைகளும் உதிர்ந்து உலர்ந்து போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கியிருந்த அந்த மரமானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்துகளில் வெகுநாட்களாக வசித்திருந்த ஒரு கிளி, அம்மரத்தின் மேலுள்ள பற்றினால் தன்னிருப்பிடத்தை விடவில்லை. நன்றியறிவுள்ளதும் தருமத்தில் மனதுள்ளதுமாகிய அந்தக் கிளி வெளியில் சஞ்சரியாமலும், இரை எடுக்காமலும், களைப்புற்றும், குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே உலர்ந்தது.

மரஞ்செழிப்புற்று இருந்தபோது அதனுடன் சுகித்திருந்ததுபோல், அது உலர்ந்து துன்புறும்போது அதனை விட்டுப் பிரியாமல் தானும் துன்புற்றிருந்தது. இதைக் கண்ட தேவேந்திரன் திகைப்படைந்தான்.

இந்திரன் மானிட உருவெடுத்து ஓர் அந்தணன் வடிவமாகப் பூமியில் இறங்கி, அந்தப் பட்சியைப் பார்த்து, “ஓ பட்சிகளிற் சிறந்த கிளியே! உன் தாயாகிய தாக்ஷேயி உன்னால் நல்ல சந்ததியுள்ளவளாக ஆகிறாள். உலர்ந்துபோன இந்த மரத்தை ஏன் விடாமலிருக்கிறாய்? என்று கேட்டான். கிளியானது அவனுக்குத் தலைவணங்கி நமஸ்காரம் புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு, நான் தவத்தினால் உன்னைத் தெரிந்துகொண்டேன்” என்று சொல்லிற்று. தேவேந்திரன் “நன்று, நன்று” என்று கூறி ‘என்ன அறிவு’ என்று மனதிற்குள் கொண்டாடினான்.

அதனிடம் “அறிவிற் சிறந்த பறவையே, இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து, பறவைகளுக்கு ஆதரவற்ற இம்மரத்தை ஏன் காக்கிறாய்? இது பெரிய வனமாயிருக்கிறதே! இலைகளினால் மூடப்பட்ட பொந்துகளும், சஞ்சரிக்கப் போதுமான இடமுள்ள இன்னும் அழகான மரங்கள் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சியடைந்து, சக்தியற்று, இரசம் வற்றி ஒளிகுன்றிக் கெட்டுப்போன இந்நிலையற்ற மரத்தைப் புத்தியால் ஆராய்ந்து பார்த்து விட்டு விடு” என்றான். இந்த வார்த்தையைக் கேட்டு தர்மாத்மாவான அந்த கிளி, மிகவும் நீண்ட பெருமூச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று.

“மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாராலும் வெல்ல முடியாத தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைக் தெரிந்துகொள். அதே நற்குணங்கள் பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமைப் பருவத்தில் நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்படாமல் இருந்தேன். மழை, காற்று, பனி, வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இந்த மரத்தில் சுகித்திருந்தேன். எல்லா தேவர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே, நீ தேவசிரேஷ்டர்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய்.

இந்திரனே! வெகுகாலமாக இருந்த மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை அடுத்துப் பிழைத்தவன், கெட்ட நிலைக்கு வந்தவுடன் அதை எப்படி விடலாம்?” அந்த நன்றியறிவையும், தயையையும் எண்ணித் திருப்தியுற்ற தருமம் தெரிந்த அக்கிளியைப் பார்த்து, “ஒரு வரம் கேள்!” என்று கூறினான்.

எப்போதும், பிறர் நோவாமையைப் பார்த்து பெரிதாகக் கருதிய அந்த கிளி, “ஏ! தேவர் கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்து தழைத்து ஓங்க வேண்டும்” என்றது. இந்திரன் உடனே அம்மரத்தின் மீது அமிர்தத்தை பொழிந்தான். அதனால் அந்த மரத்தில் கனிகளும், இலைகளும், கிளைகளும் உண்டாக்கித் தழைத்தது.

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

               நீட்டி அளப்பதோர் கோல்

நம் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் உண்மையான அன்பை கண்டுபிடிக்க உதவும் அளவுகோலாக திகழ்கிறது என்று வள்ளுவர் கூறுவது சரிதானே! இதே கருத்தை மூதுரையில் ஒளவையார் கூறியுள்ளார்கள்.

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்

               உற்றுழித்தீர்வார் உறவு அல்லர் அக்குளத்தில்

               கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

               ஒட்டி உறுவார் உறவு.

வற்றிய குளத்திலிருந்து நீங்கி சென்றுவிடும் நீர்ப்பறவை போல், துன்பம் வந்த காலத்தில் நம்மை விட்டுச் சென்று விடுபவர் உண்மை உறவினர் அல்லர். அக்குளத்திலுள்ள அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போல நீர் உள்ள காலத்தும், வற்றிப்போன சமயத்தும் சேர்ந்திருப்பவரே உண்மையான உறவினராவர்.

               அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

               என்புதோல் போர்த்த உடம்பு

பிற உயிர்கள் மீது அன்பு கொண்டு வாழும் உடம்பே உயிருள்ளதாகும். பிற அன்பற்றவர் உடம்போ உயிரற்ற வெறும் தோல் மூடிய எலும்புக்கூட்டிற்கே ஒப்பாகும் என்ற குறளுக்கேற்ப வாழ்ந்த கிளியைப் போல நாமும் வாழ்வோம். இவ்வுலகை அன்பினால் ஜெயிப்போம்! இத்தனை நாட்களாக இந்த ஆய்வு கட்டுரையை படித்து பயன் பெற்றிருப்பீர்கள் என்று கருதுகிறோம். இன்னும் அநேக ஆன்மீக கருத்துக்கள் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. அவை சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் பிரசுரிக்கப்படும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

✡✡✡✡✡✡✡

Filed under: திருக்குறள் விளக்கம்