தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு » ஆசிரியர் உரை

ஆசிரியர் உரை

பிப்ரவரி – 2016

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை “ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையடைந்த தினவிழா” கொண்டாடப்பட்டது. தமிழ் நாட்டிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் அநேக பக்தர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்காவிலிருந்தும் பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். ஜனவரி மாதத்தில் மலேசியாவிற்கும், பிப்ரவரி மாத துவக்கத்தில் பர்மாவிற்கும் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்ய என்னுடைய சகோதரன் திரு. D. லியோ பாலுடன் சில பக்தர்களும் சென்றனர். ஜனவரி மாத துவக்கத்தில்  பத்து  நாட்களாக ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்ய ஆந்திராவிற்கு நானும் சில சகோதரர்களும் சென்றோம்.

மகிமையடைந்த தின விழா என்றால் 1921-ம் வருடம் பிப்ரவரி மாதம் 24-ம் நாள் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இப்பூமியில் கல்கி மகா அவதாரமாக அவதரித்து, 1989-ம் வருடம் பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்று இப்பூவுலகத்தை விட்டு தமக்கு சொந்த இடமான வைகுண்டம் சென்றார். அந் நன்னாளையே அவருடைய குடும்பத்தினராகிய நாங்களும், உலகமெங்கிலுமுள்ள அவருடைய பக்தர்கள் அனைவரும் மகிமையடைந்த தின விழாவாக கொண்டாடி வருகிறோம். இறைவன் மனிதனுடன் தொடர்புகொள்ள ஒரு மனிதனாக இப் பூமியில் அவதரித்தார். மனிதனுடன் தொடர்புகொள்ள வேண்டுமானால் அவரும் ஒரு மனிதனாக இருந்தால் மட்டுமே மனிதர்களுடன் தொடர்புகொள்ள அவரால் முடியும். எனவேதான் ஸ்ரீமந் நாராயணருடைய ஐந்தாவது அவதாரம் முதற்கொண்டு இன்று கல்கி அவதாரம் வரையிலும் சாதாரண மனிதனாக வந்து இறைவன் தம்முடைய லீலைகளை செய்து வருகிறார்.

உதாரணமாக வாமன அவதாரம், பரசுராம அவதாரம், இராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், இந்த அவதாரங்களில் மனிதனாக வந்த அவர் கடைசி அவதாரமாகிய கல்கி மகா அவதாரத்தில் ஸ்ரீமந் நாராயணர்தாமே தம்முடைய சொந்த ரூபத்தில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்ற நாமத்தில் அவதரித்துள்ளார். நம்முடைய ஜென்ம, கர்ம பாவங்களை நீக்கி வைகுண்டம் செல்வதற்கான தகுதியை தருகிறார். மேலும் ஒவ்வொரு அவதாரத்திலும் மறைக்கப்பட்ட வேதங்களை, வேத இரகசியங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதே இறைவனுடைய அவதார வருகையின் நோக்கமாகும். அவர் நம்மை நேசிப்பதினால்தான் அவர் தம்முடைய எல்லா மகிமைகளையும் உள்ளடக்கிக் கொண்டு ஒரு சாதாரண மனிதனாக வந்தார். அவர் நம்மை தம்முடைய இருப்பிடமாகிய வைகுண்டலோகத்திற்கு அழைத்து செல்வதற்காகவே இவ்விதமாக வந்திருக்கிறார். இப்பொழுது இரண்டு பேர் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் நான் சென்னைக்குச் செல்ல வேண்டும் என்கிறான். இன்னொருவன் நான் கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டும் என்கிறான். இரண்டு பேருக்கும் எவ்வாறு ஒற்றுமை வர முடியும்? ஒருவன் தன்னுடைய வழியை விட்டு விட்டு மற்றவனோடு இசைந்து செல்ல விருப்பப்பட வேண்டும். அவ்விதமாக செய்யும்போதுதான் இருவரும் ஒரே பாதையில் செல்ல முடியும். அதைப்போல நாமும் நம்முடைய வழியை விட்டுவிட்டு இறைவனுடைய வழியில் செல்ல விரும்பும்போதுதான் இறைவனுடைய வழியில் நம்மால் செல்ல முடியும். அவ்விதமாக நாம் செல்லும்போதுதான் இறைவனோடு ஒன்றுபட முடியும். இறைவனைப் பிரியப்படுத்தவும் முடியும்.

விவிலியத்தில் நீதிமொழிகள் 14:12: “மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. மனிதனுக்கு தீமையாக தோன்றுகிற வழி இருக்கிறது. ஆனால் அதுதான் இறைவனுடைய வேதங்களின்படி வாழும் வழியாகும். அதின் முடிவு ஜீவனாகும். நீங்கள் எந்த வழியை தெரிந்துகொள்வீர்கள்? இறைவனுடைய வழியை தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு நண்பன் இந்த வழியாக செல்ல விரும்புகிறான். ஒரு நண்பன் அந்த வழியாக செல்ல விரும்புகிறான். ஆனால் இருவரும் சந்திக்கும்போது, ஒருவர் தம்முடைய வழியை விட்டு விட வேண்டும். அதேவிதமாக மனிதன் பஞ்சேந்திரியங்கள் கூறும் வழியில் செல்ல விரும்புகிறான். இறைவன் விசுவாச வழியின் மூலமாக செல்ல விரும்புகிறார்.  அப்படியென்றால் இறைவன் மனிதனுடன் உறவாட விரும்பினால், அவர் தம்முடைய விசுவாச வழியை விட்டுவிட வேண்டும். அதுதான் இறைவன் மனிதனுடன் உறவாடுவதாகும்.

விவிலியத்தில் இறைவனுடைய பிள்ளைகளாகிய ஏனோக்கு, ஆபிரகாம், தானியேல், எபிரெய பிள்ளைகள், மொர்தெகாய் போன்றவர்கள் எவ்வாறு இறைவனுடன் தனியாக சஞ்சரித்தார்கள் என்பதை நாம் காண்கிறோம். சிலர் நான் தனிமையாக இருப்பதைப்போல உணருகிறேன் என்று கூறுகிறார்கள். தனிமையாக இருந்தால்தான் நாம் இறைவனுடன் உறவாட முடியும். இறைவன் ஏனோக்குடன் சஞ்சரித்தார் என்று விவிலியத்தில் கூறப்படவில்லை, ஏனோக்கு என்பவன்தான் இறைவனுடன் சஞ்சரித்தான் என்று கூறப்பட்டுள்ளது. ஏனோக்கு என்ன செய்தான்? அவன் தன்னுடைய கண் பார்வைக்கு அப்பால் அதாவது பஞ்சேந்திரியங்களினால் வாழும் தன்மைக்கு அப்பால் இறைவனுடன் உறவாடினான். அவன் இறைவனுடன் உறவாடிக் கொண்டிருந்தானென்றால், அது ஒருநாளைக்கென்று ஆரம்பிக்கப்படவில்லை. வாழ்க்கை முழுவதும் இறைவனுடன் உறவாட வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டதாகும். அவன் இறைவனுடன் முறுமுறுத்துக்கொண்டே அல்ல, சந்தோஷமாக உறவாடிக்கொண்டிருந்தான்.

இறைவனுடன் உறவாடுவது என்பது குருடர்களைப்போல நடப்பதற்கு ஒப்பிடப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு குழந்தை நடப்பதைப்போலவும் இருக்கிறது. குழந்தையானது நடக்க கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது, ஏய், நீ இங்கே உட்கார் என்றோ அல்லது  நீ நடக்க கற்றுக்கொள்ளும் வரை நான் உன்னை நடக்க அனுமதிக்கமாட்டேன் என்றோ நாம் கூறுகிறதில்லை. குழந்தை என்ன செய்கிறது? அது நடக்க முயற்சி செய்யும்போது கீழே விழுகிறது. இருபது முறை உருளுகிறது. உடலின்மீது சிராய்ப்புகளும், அடியும் படுகிறது. ஆனாலும் அது நடக்க முயற்சி செய்துகொண்டேயிருக்கிறது. அவ்வாறு ஒரு குழந்தையைப்போல நாமும் இறைவனுடன் உறவாட முயற்சி செய்துகொண்டேயிருக்க வேண்டும்.

இறைவனுடன் உறவாடுவது என்றால் என்ன என்பது பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் சுவையான கதை ஒன்று உள்ளது. பிருந்தாவனத்தில் இருந்த கோபியரில் சிலர் மோரும், தயிரும், வெண்ணெயும் விற்க காலையிலேயே அக்கரைக்கு சென்றனர். மாலை திரும்பியபோது, யமுனையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப் பெண்களோ யமுனையைத் தாண்டி அக்கரைக்குச் செல்ல வேண்டும். நேரமோ மாலைப்பொழுது, இருட்டிக்கொண்டு வருகிறது. திகைத்த அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அங்கே வியாசர் தவத்தில் இருந்ததைக் கண்டார்கள். முனிவரான அவர் உதவக்கூடும் என்று நினைத்து அவரிடம் அபயம் கேட்டார்கள். அவரும் தவம் கலைந்து, ஒரு நிபந்தனையுடன் உதவுவதாக வாக்களித்தார். கோபியர்களின் பானைகளில் மீந்துள்ள மோர், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைச் சாப்பிட தருமாறு கேட்டார். மழை காரணமாக ஒன்றும் விற்காததால் அனைத்தையும் அவர்கள் வியாசரிடம் கொடுத்தார்கள். அவருக்கு நெடுநாள் பசி போலும். எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்.

உண்ட களைப்பு தீருவதற்காக கால் நீட்டி படுத்தார். கோபியர் அவரை எழுப்பி, உதவுகிறேன் என்று சொல்லிவிட்டு அனைத்தையும் சாப்பிட்டீர்களே, குழந்தைகள் காத்திருப்பார்கள். தயவு செய்து உதவுங்கள் என்றனர். வியாசரும் நதியின் அருகே சென்றார். “யமுனையே, நான் நித்திய உபவாசி என்றால் விலகி வழிவிடு” என்றார். கணப்பொழுதில் யமுனை ஆற்று நீர் விலகி வழிவிட்டது. பல கேள்விகள் மனதில் எழுந்தாலும் கோபியர்கள் வாய் திறவாமல் அவரைப் பின் தொடர்ந்தனர். பாதுகாப்பாக யமுனையை தாண்டியாகி விட்டாயிற்று என்று தெரிந்ததும் அவரைப் பார்த்துக் கேட்டார்கள்.

“முனிவராக இருந்தும் நீர் இவ்வாறு பொய் சொல்லலாமா? எங்களிடம் இருந்ததையெல்லாம் வாங்கி சாப்பிட்டுவிட்டு, நான் நித்திய உபவாசி என்பது உண்மையானால் வழிவிடு என்று யமுனையிடம் கூறினீர்களே, அவளும் உண்மையை அறியாமல், வெள்ளம் விலகி வழி தந்துவிட்டாளே?” என்றார்கள். வியாசர் சிரித்தபடியே ‘உப’ என்ற சொல்லுக்கு அருகில் என்று பொருள். ‘வாசம்’ என்றால் வசிப்பது அல்லது இருப்பது என்று அர்த்தமாகும். நான் மனதார நித்தியமும் கண்ணன் அருகிலேயே இருக்கிறேன். அதனால் நான் “நித்திய உபவாசி” என்றார். கண்ணனுக்கு அருகில் இருக்கும் அளவுக்கு தவ வலிமை கொண்டவர் வியாசர். ‘உபவாசி’ என்றால் இறைவனுடன் வாசம் செய்வது, வசிப்பது, நடப்பது அல்லது உறவாடுவது என்று அர்த்தமாகும். நாமும் இறைவனுடன் வாசம் செய்து நித்திய உபவாசியாவோம்.

உலகத் தமிழ் வாசகர்களுக்காக manujothi.com என்ற இணையதளத்திலும் மனுஜோதி இதழை வெளியிட்டு வருகிறோம். இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்.

வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

– ஆசிரியர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆசிரியர் குறிப்பு