தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு » ஆசிரியர் உரை

ஆசிரியர் உரை

நவம்பர் – 2015

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

2015-ம் வருடம், அக்டோபர் மாதம் 3-ம் தேதி நடைபெற்ற நீதியுக ஸ்தாபக விழாவில் அன்புக்கொடி ஏற்றப்பட்டது. மனுஜோதி ஆசிரமத்தில் கூடி வந்திருந்த எல்லாருக்கும் மற்றும் உலகெங்கிலும் அன்புக்கொடி ஏற்றியவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருந்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது.

செப்டம்பர் மாதத்தில் நான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலருடன் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள அநேக கிராமங்களுக்கு சென்று வந்தேன். என்னுடைய சகோதரன் D. லியோ பால் அவர்கள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலருடன் அகில இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள அநேக இடங்களுக்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களையும், புத்தகங்களையும் விநியோகித்து ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையைப் பிரச்சாரம் செய்தார்கள்.

இறைவன் நம்மை ஆட்சி செய்கிறார் என்பதை காண்பிக்கவே நாம் அன்புக்கொடியை ஏற்றுகிறோம். இறைவனின் பாகமாக இருக்கும் மக்கள் ஐம்புலன்களை சார்ந்து வாழாமல் இறைவனின்மேல் சார்ந்து வாழ வேண்டும். ஆனால் இறைவன் மேல் சார்ந்து வாழ்வதற்குப் பொறுமை தேவைப்படுகிறது. மனிதர்கள் உடனுக்குடன் எல்லாவற்றையும் செய்துவிடுவார்கள். ஆனால் இறைவனின் பாகமாகிய சிலர் அவருக்காக காத்திருக்கிறார்கள். அதற்கும் பொறுமை தேவைப்படுகிறது. இறுதியில் அவர்கள் ஜெயிக்கிறார்கள். இவ்வுலகத்தில் சாதனை செய்வதற்காக இறைவன் நம்மை அனுப்பியுள்ளார். சாதனையாளர் ஆவதற்கு முன்பாக நாம் மூன்று படிகளை தாண்ட வேண்டும். அப்பொழுதுதான் சாதிக்கும் பக்குவத்திற்கு வந்துவிட்டோம் என்று அர்த்தமாகும். அந்த மூன்று படிகள் என்ன? தியாகம், சிரமங்களை அனுபவித்தல், ஆசைகளைத் துறந்த வாழ்க்கை என்பவைகளாகும்.

தியாகத்தின் சிகரமாக விளங்குபவர் இறைவன். அவரின் பாகமானவர்களும் தியாக சொரூபியாக இருக்கிறார்கள். எவற்றையெல்லாம் தியாகம் செய்ய வேண்டுமென்று இயேசுபிரான் கூறியுள்ளார். லூக்கா 14:26: “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்”. லூக்கா 14:33: “அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்”.

எல்லாவிதமான அன்பையும் துண்டித்துப் போட வேண்டும். தியாகத்தின் உச்சக்கட்டமே ஒருவன் எல்லா அன்பையும் துறப்பதாகும். இறுதிக்கட்டமாக தன் மேலுள்ள அன்பையும் அவன் தியாகம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவன் இறையன்பு நிறைந்தவனாக இறைவனை மட்டுமே நேசிப்பவனாக இருக்கிறான். இத்தகைய மனப்பக்குவம் ஏற்படும்போது, அவன் இறைவன் படைத்த எல்லாவற்றினிடத்தும் சமநோக்குடையவனாகின்றான். பந்த பாசம் அறுபடும்போது இது சம்பவிக்கிறது. அப்பொழுது அவன் விருப்பு, வெறுப்பு என்பவைகளிலிருந்து விடுபட்டவனாகின்றான். இறைவன் ஆதிவேள்வியில் தம்முடைய உயிரையே தியாகம் செய்து நம்மை மீட்டெடுத்தார். கல்கி மகா அவதாரமாக இப்பூமியில் அவதரித்தபோது தன் வாழ்க்கையை மனித குலத்திற்காக தியாகம் செய்தார். அதாவது தமக்காகவோ, தன் மனைவி, பிள்ளைகளுக்காகவோ வாழாமல் இறைதொண்டை செய்தார். இப்படி இறைவனே எல்லாவற்றையும் தியாகம் செய்திருக்கிறார். அப்படியிருக்கும்போது நாம் செய்யும் தியாகம் அற்பமானது என்ற எண்ணம், இறை தியாகத்தை நாம் உணர்ந்துகொள்ளும்போதுதான் ஏற்படுகிறது.

இரண்டாவது படி என்பது சிரமங்களை அனுபவித்தலாகும். நமக்கு ஏன் கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படுகின்றது என்பதற்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருமையான விளக்கத்தைக் கூறுகிறார்: “ஒரு காட்டில் பெரும் புயல் அடிக்கிறது. அப்பொழுது என்ன நடக்கிறது? அக்காட்டிலுள்ள மரங்களின் வேர் அசைக்கப்படுகிறது. வெள்ளத்தினால் மண் இளகி விடுகிறது. அச்சமயத்தில் புயல் அடிக்கும்போது மரமே அசைகிறது, ஆடுகிறது. மண் இளகியிருப்பதால் வேர்கள் இன்னும் ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன. இதுவே புயலினால் ஏற்படும் நன்மையாகும். அத்துடன் புயல் வீசும்போது அம்மரத்திலிருந்து நறுமணமும் வீசுகின்றது. அதைப்போலவே பிரச்சினைகள் நம்மை அதிக உறுதியாக்குகின்றன. அத்துடன் நாம் எப்படிப்பட்டவர்கள் (என்ற நறுமணமும்) என்பதும் தெரிய வருகிறது. ஆகையால் மரத்தைப்போல புயலையும் எதிர்கொண்டு, சூரியனின் உஷ்ணத்தையும் தாங்கிக்கொண்டு இனிய நிழலை தருபவர்களே சாதனையாளர்களாக முடியும்.”

மூன்றாவது படியான ஆசைகளை துறந்த வாழ்க்கை என்பது சாதனையாளர்களுக்கு இன்றியமையாததாகும். “ஆசைதான் துன்பத்திற்கு காரணம்” என்று புத்தர் கூறினார். “பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது” என்று விவிலியம் கூறுகிறது. ஆசைகளை துறந்தவன் எப்படியிருப்பான்? உயிரற்ற பிணத்தைப் போலிருப்பான். அவனுக்கு எந்த உணர்ச்சியும் ஏற்படாது. ஆசை தலைகாட்டும் போதெல்லாம் ‘நான்’ எப்பொழுதோ இறந்துவிட்டேன், நான் இறைவனுக்காக வாழ்பவன் என்று ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். கோபம், பொறாமை, எரிச்சல், காமம், குரோதம் போன்ற உணர்ச்சிகள் மேலோங்கும்போது நான் இறந்து விட்டேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்பொழுது இறைவனின் சக்தியான புது மனிதன் உங்களுக்குள்ளே தோன்றுவான். அவன்: கவலைப்படாதே! பழைய மனிதன் இறந்துவிட்டான் என்பான். புதிய மனிதன் உங்களுக்குள் உருவாக நீங்கள் இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டுமென்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியுள்ளார்.

பழைய மனிதனைக் களைந்து புதிய மனிதனாகி சாதனை படைப்போம்!!!

உலகத் தமிழ் வாசகர்களுக்காக manujothi.com என்ற இணையதளத்திலும் மனுஜோதி இதழை வெளியிட்டு வருகிறோம். இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்.

வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

✡✡✡✡✡✡✡

Filed under: ஆசிரியர் குறிப்பு