தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள்

பத்திரிகை செய்திகள்
» அன்பையும் பக்தியையும் மட்டுமே ஏற்கும் இறைவன்

அன்பையும் பக்தியையும் மட்டுமே ஏற்கும் இறைவன்

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு சூட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரத்தில், கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்கப்பட்ட சந்தோஷத்தில் ராஜ ராஜ சோழன் நிம்மதியாய் தூங்கும்போது, பரமசிவன் கனவில் அவன் முன்னே எழுந்தருளினார். உடனே ராஜ ராஜ சோழன் “இறைவா, என் பாக்கியம் என்னவென்று சொல்வது? தாங்கள் எனக்கு காட்சி தந்தது, நான் செய்த பாக்கியமல்லவா? தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது? இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய கோயிலாக கட்டியுள்ளேன். அதற்கு ‘தஞ்சை பெரிய கோயில்’ என்று பெயர் சூட்டப் போகிறேன்” என்று ஆனந்தமாக இறைவனிடம் கேட்டான்.

அதற்கு இறைவன் சிரித்துக்கொண்டே, “மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம். ஒரு இடைச்சி மூதாட்டியின் காலடி நிழலின்கீழ், யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்” என்று கூறி மறைந்தார். ராஜ ராஜ சோழனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜ ராஜன், தான் கண்ட கனவைப்பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. பின்னர் நேராக கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றான். கோயில் சிற்பியிடம், தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, “அரசே, கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை இடைச்சி மூதாட்டி, தினமும் மத்தியான வேளையில் இங்கு வருவார். ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி, தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாகவும் கொடுப்பார். நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்துவிடுவார். ஏதோ இந்த ஏழை இடைச்சியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார். இப்படியிருக்கும்போது போன வாரத்தில் ஒருநாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரிசெய்யவே முடியவில்லை. நாங்களும் அதன் அளவை எவ்வளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும், ஒன்று கல்லின் அளவு அதிகமாக இருக்கிறது அல்லது குறைவாக இருக்கிறது. எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்.

அப்பொழுது இந்த மோர் விற்கும் இடைச்சி மூதாட்டி வந்து மோர் கொடுத்துக்கொண்டே, எல்லோரும் ஏன் கவலையாய் இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரியாகாத விஷயத்தை கூறினோம். அதற்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது. நான் அதைத்தான் என் வீட்டிற்கு வாசற்படியைப்போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் இந்த இடைச்சி மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம். என்ன ஆச்சரியம்! கருவறையின் மேற்கூரைக்கு அளவெடுத்து வைத்ததுபோல் மிகவும் சரியாக இருந்தது. அதைத்தான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தியிருப்பார் என்று அடியேன் நினைக்கிறேன் என்று சிற்பி கூறினான்.

இதைக் கேட்டதும் ராஜ ராஜனுக்கு எல்லாம் புரிந்தது. எவ்வளவு பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த இடைச்சி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே என்று கண்ணீர் மல்கி, பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த இடையர் குல மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள். நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். இந்த கோயில் கட்டியது அந்த மூதாட்டி இடைச்சிதான், நான் அல்ல. இதற்கு இறைவனே சாட்சி என்றான். இன்றும் இந்த இடைச்சி கல் வரலாற்றில் மிகவும் முக்கியமாக இடம்பெற்றுள்ளது.

இறைவனை பணத்திற்கோ, ஆடம்பரத்திற்கோ ஆட்படுத்த முடியாது. உண்மையான அன்பும், பக்தியும் இருந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் என்பதை இந்த தஞ்சை கோயிலின் கட்டுமானத்தில் அனைவரும் அறியும்படி சிவலீலை செய்துள்ளார். நாம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும், இறைவனிடம் அன்பும், பக்தியும் இல்லையென்றால் எத்தனை கோயில்களுக்கு சென்று தவம் செய்தாலும், எத்தனை கோயில்களுக்கு பொன், பொருள் கொடுத்து விழாக்கள் நடத்தினாலும் பயன் ஒன்றுமில்லை. இறைவன் நம்மிடம் கேட்பது ஒன்றுதான். அது கண்ணப்பனிடமிருந்த அன்பு, ஒளவையிடமிருந்த பக்தி இதில் எதையாவது ஒன்றை நாம் பின்பற்றினாலே இறைவன் நம்மை நாடி வருவான் என்பதுதான் உண்மை. இதைத்தான் நம் புராணங்களில் பல்வேறு வழிமுறைகளில் இறைவன் நமக்கு உணர்த்தியுள்ளான்.

✡✡✡✡✡✡

Filed under: பத்திரிகை செய்திகள்